உத்தம வில்லன்- விமர்சனம்

சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!’

புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில் ஆரம்பிக்கிறார் படத்தை. அதற்கப்புறம் டச் பை டச் கமல் டச்! நடு நடுவே ‘பச்சக் பச்சக்’ என்று அவர் மேயும் ஸ்பாட்டுகள் இதற்கு முன் வந்த கமல் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல! எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்தின் சென்ட்டிமென்ட்டுக்கு யாரும் தப்ப முடியாது. கல் நெஞ்சர்களுக்கு இரு சொட்டு கண்ணீரும், இளகிய நெஞ்சர்களுக்கு அது இன்னும் பெருகி ஆறாகி வழிவதும் நடக்கிறது.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மார்கதரிசியிடமே (கே.பாலசந்தர்) மறு கருத்து கொள்கிற அளவுக்கு வியாபார உலகம் மனோரஞ்சன் (கமல்) என்கிற ஹீரோவை வளைத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலேயே நடித்து உச்சாணிக் கொம்பில் இருக்கும் கமலின் படங்களை அவரது மாமனார் பூரணசந்திர ராவே (கே.விஸ்வநாத்) தயாரிக்கிறார். ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினர் யாருக்கும் சொல்லாமல் தனது குருநாதர் பாலசந்தரை நாடும் கமல், ‘எனக்காக என்னை வச்சு ஒரு படம் எடுங்க’ என்கிறார். ‘கதை வேணுமேடா…’ என்று ஒதுங்கும் அவருக்கு இவரே ஒரு கதையை சொல்ல, சாகாவரம் பெற்ற ஒருவனின் கதையை படமாக்குகிறார்கள் இருவரும். அவர்கள் எடுக்கும் படத்தில் சாகாத வரம் பெறும் கமல், நிஜத்தில் செத்து செத்து பிழைக்கிறார் ஒவ்வொரு நாளும். அவருக்கு வந்த பிரெய்ன் ட்யூமர் வியாதி குணமானதா? அவரிடம் கோபம் கொண்ட குடும்பத்தின் ரீயாக்ஷன் என்ன? இதெல்லாம்தான் முழு நீள ‘உத்தம வில்லன்!’

‘வில்லன்ங்கறது இங்கிலீஷ் பெயர். இதுக்கு எப்படி வரிவிலக்கு கிடைக்கும்?’ என்று கதாநாயகியை விட்டே கேள்வி கேட்க வைக்கும் அவர், ‘வில்லன் என்பது சுத்தமான தமிழ் பெயர் ’ என்று விளக்கம் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது கமலின் வசனக் குசும்பு. ‘ஏன் ஒரு கூத்தாடி நாடாளக் கூடாதா?’ என்பது வரைக்கும் கூட அது நீள்வதெல்லாம் கமல் என்ற தனி மனிதனின் கருத்து சுதந்திரம்.

சுற்றி சுற்றி பால் வடியும் ஒரு ரப்பர் மரத்தை, ராஜஸ்தான் ஊர்க்காரன் ஒருவன் எப்படி சுற்றி சுற்றி நின்று ரசிப்பானோ? அப்படி ரசிக்க வேண்டியிருக்கிறது கமலின் நடிப்பை. பதினாறு வருஷமாக பார்க்காத தன் மகளின் படத்தை செல்போனில் மாறி மாறி காட்டும்போது கவனிக்கும் அவரது கண்களும், உதடும், கன்னங்களும் பேசுகிற கதையை இப்போது வருகிற எந்த நடிகனின் முகத்திலும் காணவே முடியாது. ‘அப்பா சாகப்போறேண்டா…’ என்று விஷயத்தை படீரென போட்டு உடைக்காமல், டீன் ஏஜ் மகனிடம் பந்து விளையாடிக் கொண்டே விவரிக்கும் அந்த காட்சியில் நீர் முட்டுகிறது விழிகளில். மரணப்படுக்கையில் முகத்தில் ‘மாஸ்க்’ வைக்கிற நேரத்திலும் கூட, அதற்குள்ளிருந்து டாக்டருக்கு முத்தம் கொடுக்கும் கமல், தனது மேனரிசத்தை விடவே விடாததுதான் ‘ஹை!’

அதேநேரம், எட்டாம் நூற்றாண்டில் வரும் கமல் சற்று படுத்தவே செய்கிறார். அந்த காட்சிகளில் கணிசமாக கை வைத்தால் கூட தப்பில்லைதான்! தெய்யம் கலையை அந்த கலைஞர்களே வியக்கும் அளவுக்கு ஸ்டெப் வைக்கும் கமலின் அர்ப்பணிப்புக்கு ஒரு அன்பு வணக்கம்.

கமலுக்கு பின் கவர்கிற இடத்திலிருக்கிறார் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தனது சிஷ்யனுக்கு கேன்சர். அவனது நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை அறிந்தவுடன், அதுவரை காட்டிய அத்தனை கோபத்தையும் அப்படியே மூட்டை கட்டி வீசிவிட்டு, தன் சீட்டில் அவரை அமர வைத்து ஆறுதல் படுவதை வெறும் படமாக பார்க்க முடியவில்லை. இவரைப்போலவே தள்ளாத வயதிலும் உட்கார்ந்த இடத்திலேயே ஸ்கோர் பண்ணும் கே.விஸ்வநாத், அசத்தல்!

மருத்துவராக வரும் ஆன்ட்ரியா, அந்த மெச்சுரிட்டியை விட்டுக் கொடுக்காமலும், அதே நேரத்தில் கமலுக்கு தன்னையே விட்டுக் கொடுத்தும் வாழ்கிற அந்த நிமிஷங்கள் ஆன்ட்ரியா மீது அன்பு செலுத்தவே வைக்கிறது. ‘இங்கு இருக்கிற மூன்று ஆம்பளைகளும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது’ என்று கூறிவிட்டு கமலை இறுக அணைத்துக் கொள்கிற போது, காமம் மீறி, கருணையே வழிகிறது அங்கு.

கோபக்கார மனைவி ஊர்வசி, கணவனுக்கு கேன்சர் என்றதும் புலம்புவதும், அழுவதுமாக கண்ணீரும் கம்பலையுமாக சிரிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், பார்வதி மேனன், கமலையே தூக்கி சாப்பிடுகிறார் நடிப்பில். இந்த போர்ஷனை இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது அவரது அழகு!

இன்னும் எத்தனை படங்களுக்கு பூஜா குமாரோ? கமல் சார்… போரடிக்குது! கண்ணாடிய மாத்துங்க. இல்லேன்னா கலரை மாத்துங்க!!

‘27 வருஷமா உங்க காலடியிலேயே கெடக்குறேன். இந்த விஷயத்தை எனக்கு கூட சொல்லலியே…’ என்று கண்ணீர் சிந்தும் எம்.எஸ்.பாஸ்கர், சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் அழவும் வைக்கிறார். இவரை பொறுத்தவரை இந்த படத்தின் பொறுத்தமான ஸ்டார் காஸ்டிங்!

நாசர், சண்முகராஜன், திருஞானசம்பந்தன் என்று 8 ம் நூற்றாண்டு நபர்களாக இவர்கள். (சுமாராக கழுவி வைத்த வேப்பெண்ணை பாட்டில்கள்?!)

படத்தில் கொட்டிய அத்தனை கோடிகளையும் அலுங்காமல் குலுங்காமல் உள்வாங்கி பிரமாண்டம் காட்டுகிறது ஷாம்தத்தின் ஒளிப்பதிவு. ஜிப்பரானின் இசையில் காதலாம், கடவுள் முன் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

சினிமாவிற்குள் சினிமாவை சொன்ன படங்கள் ஏராளமாக இருந்தாலும், ஜீவன் வழியும் கதை இது. கைக்குட்டையோடு செல்லுங்கள். வெறும் கண்ணீரை மட்டுமல்ல, ஆனந்த கண்ணீரையும் சேர்த்து துடைத்த மாதிரியிருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
ஏன் எனக்கு இங்க ரூம் போட்டீங்க? கிஷோர் கேள்வி, கிறுகிறுத்த இயக்குனர்!

தலைப்பை படிச்சதும், கிஷோரும் கெட்டுப் போயிட்டாரா என்ற சந்தேகத்தோடுதானே இந்த செய்திக்குள் நுழைந்தீர்கள்? அங்குதான் இருக்கு ட்விஸ்ட்! பொதுவாகவே நடிகர்களுக்கும் சரி, நடிகைகளுக்கும் சரி, ஒரு வித...

Close