வாலு வருமா, அல்லது…?
இப்படியொரு கேள்வி எழுந்திருப்பதில் எவ்வித உள் நோக்கமும் இருக்க முடியாது யாருக்கும். ஏனென்றால் வாலுவை சுற்றி அத்தனை பிரச்சனைகள். பிள்ளை வளர்ப்புக்கேற்றார் போலதான் பிற்காலமும் அமையும் என்பதை வாலு மிக மிக அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறது. எப்படி? ஒரு சின்ன பிளாஷ்பேக்.
வல்லவன் படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார் தேனப்பன். தினந்தோறும் ஷுட்டிங் வைப்பதும் அதில் எப்போதாவது சிம்பு கலந்து கொள்வதும் வாடிக்கையாக இருந்தது. படப்பிடிப்பு வைத்து எல்லாருக்கும் காலை உணவு, மதிய உணவு, பேட்டா சகிதம் ஷுட்டிங்கை கேன்சல் செய்த நாட்கள் மட்டும் 167 நாட்கள் என்கிறார்கள் தேனப்பன் தரப்பிலிருந்து. அதுவே பல லட்சங்களை விழுங்கியிருந்தது. படப்பிடிப்புக்கு நான் வர மாட்டேன் என்பதையே மதியமோ, அல்லது மாலை நேரத்திலோதான் சொல்வாராம் சிம்பு. நயன்தாராவுக்கும் அவருக்கும் காதலும், மோதலும், ஊடலும் ஓடிக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களின் சொந்த சண்டையில் தன் பணத்தை இழந்து கொண்டிருந்தார் தேனப்பன்.
சரி… படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் இந்த நஷ்டக்கணக்கை காட்டிக் கொள்ளலாம். சிம்புவின் சம்பளத்தையும் நஷ்டத்தில் சேர்த்துவிடலாம் என்பது தேனப்பனின் கணக்கு. ஆனால் ரிலீஸ் நேரத்தில் நடந்ததே வேறு. அப்போதைய முதல்வர் கலைஞரிடம் சென்று, வல்லவன் பட விஷயத்தில் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார் டிஆர். அப்புறமென்ன? அங்கிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு போன் வந்தது. ‘யோவ்… எவ்வளவு தப்பு பண்ணியிருந்தாலும் ராஜேந்திரனுக்கு சாதகமா முடிச்சு படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுங்க’
அவ்வளவுதான். தேனப்பனின் தலையில் துண்டை போட்டுவிட்டு படத்தை வெளியிட்டார்கள். இன்று வரை தேனப்பனுக்கு ஆன நஷ்டம் நஷ்டம்தான். இப்போது வாலுவும் அதைப் போலொரு சிக்கலில்தான் இருக்கிறது. தனது சம்பளத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டார் சிம்பு. இவரால் ஏற்பட்ட சேதாரத்திற்கு நான் தர வேண்டிய சம்பளம் சரியாப் போச்சு என்று கூறிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி.
வல்லவன் நேரத்தில் கலைஞர் முதல்வராக இருந்தார். டி.ஆர் திமுக வில் இருந்தார். இப்போது கலைஞரும் முதல்வர் இல்லை. டிஆரும் திமுக வில் இல்லை. அம்மாவும் டிஆர் குரலை காதில் வாங்கும் நிலையில் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய பிறகு எப்படி வரும் வாலு?