நரபலியை நேரில் பார்த்த ஹீரோயின் -விரட்டினார் சாமியார்!
‘ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா..’ என்ற வசனத்தையே கருப்பு சட்டை தோழர்கள் லட்சம் முறை சொல்லியிருப்பார்கள். அப்போதெல்லாம் கூட சரியாக காதில் விழாத இந்த வருத்த வார்த்தைகள், திருநெல்வேலி படத்தில் காமெடி நடிகர் விவேக் சொன்னபோது சட்டென ஒட்டிக் கொண்டது. அதுவும் லட்சக்கணக்கானவர்களின் மனசில். சினிமா என்பது பவர்புல் பள்ளிக்கூடம் என்பதை புரிந்து படமெடுக்கிறவர்கள் பெருக பெருகதான் நாட்டில் மூட நம்பிக்கை ஒழியும். அப்படி புரிந்து கொண்டு வந்திருக்கிறது ஒரு குரூப்.
ஏ.ஆர்.ரபி இயக்கியிருக்கும் வச்சிக்கவா படத்தில் நரபலிக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தை கொங்கு செல்வர் ராஜா அம்மையப்பன் தயாரித்திருப்பதுடன், அந்த நரபலி சாமியாராகவும் நடித்திருக்கிறார். புதுமுகங்கள் அச்சிதா, மாணிக்கவேல் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஒரு குழந்தை நரபலி கொடுக்கப்படுகிற போது அதை மறைந்திருந்து பார்த்துவிடுகிறார் ஹீரோயின். அவரை விரட்டி கொல்ல துடிக்கிறது அந்த நரபலி கும்பல். கதாநாயகி தப்பித்தாரா, அவரை ஹீரோ எப்படியெல்லாம் காப்பாற்றுகிறார் என்று போகிறதாம் கதை.
இப்பவும் புதையலுக்காக நரபலி கொடுக்கப்படும் செய்தியை நாளிதழ்களில் படித்து நாக்கை கடிக்கும் மக்கள், இதுபோன்ற படங்கள் வந்த பிறகாவது விழிப்புணர்ச்சி வராதா என்று காத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிற விதத்திலும், அதே நேரத்தில் தயாரிப்பாளர் போட்ட பணத்தை மீட்கும் விதத்திலும் படம் எடுப்பாரா ரபி?