‘ வட போச்சே வட போச்சே ’ குழந்தையாக மாறிய ரம்யா நம்பீசன்

நடிகைகளை சினிமாவில் பாட வைக்கலாமா? கூடாதா? முறைப்படி சங்கீதம் கற்றவர்களே வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, வெறும் நடிகை என்கிற புகழை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் ‘திடீர் பாடகிகள்’ ஆகிவிடுவது நியாயமே இல்லை என்றெல்லாம் சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த நடிகை ரம்யா நம்பீசன் சுவாரஸ்யமான ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவரை பாட வைத்திருப்பவர் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

பாபு தூயவன் இயக்கி வரும் ‘கதம் கதம்’ படத்தில் இடம் பெறும் இந்த பாடலின் வரிகளை கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்த ரம்யா நம்பீசன் ஒரு குழந்தையாகவே மாறி இந்த பாடலை பாடியிருக்கிறார். அப்படியென்ன அந்த பாடலில் விசேஷம்?

தலைமுறை தலைமுறையாக நாம் கேட்டு வரும் பாட்டி வடை சுட்ட கதையைதான் இங்கிலீஷும் தமிழுமாய் எழுதியிருக்கிறார் அறிமுக பாடலாசிரியர் பவன் கல்யாண். ஆனால் இன்னும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இந்த ‘பாட்டி – வடை – காக்கா’ கதை ஒரு பாடல் வடிவமான பிறகு இன்னும் மெருகேறியிருக்கிறது என்பதுதான் நிஜம்.

தேர் இஸ் எ கிராண்ட்மா
சிட்டிங் அண்டர் பேன்யன் ட்ரீ
சுட்டுபையிங் வடை
ஒரு பாட்டி வடைய சுட்டா
அத காக்கா துக்கி போச்சு
நரி பேச்ச காக்கா கேட்டு
வட போச்சே வட போச்சே

என்று துவங்குகிற பாடலில் வடை எப்படி சுடுவது என்பதையும் விளக்கமாக எழுதியிருக்கிறார் பவன் கல்யாண்.

கடல பருப்பு ஊற வச்சு
அப்புறமா அத அரைச்சு அரைச்சு
சால்ட் உப்ப மேல சேர்த்து
பச்ச மிளகா ஆனியன் சேர்த்து
ஹீட் த ஆயில்
இன் த சட்டி
புட் த மாவு
உள்ள தட்டி
திஸ் இஸ் த
மேக்கிங் வடை
தெருவோரம் இருக்கு
எங்க கடை

என்று தொடர்கிறது அந்த பாடல்.

இந்த வரிகளை கேட்டுவிட்டுதான் உற்சாகமானாராம் ரம்யா நம்பீசன். ரொம்ப ஆர்வமாக பாட ஆரம்பித்தவர் நடுநடுவே சிரிப்பை அடக்க முடியாமல் டேக் வாங்கிய காமெடியும் நடந்திருக்கிறது. ரம்யா நம்பீசனுடன் தாஜ்நூரின் மகன் என்.எம். அக்பரும் ராப் ஸ்டைலில் பாடியிருக்கிறார். ஆங்கிலத்தில் இடம் பெறும் வரிகள் எல்லாவற்றையும் பாடியது அக்பர்தான்.

பொதுவாக பாடல்களை பாடி முடித்துவிட்டு கிளம்பிவிடுவதுதான் பாடகர்களின் வழக்கம். ஆனால் இந்த ‘ரா ஃபுட்டேஜ்’ அப்படியே எனக்கு வேணும். காப்பி பண்ணி தர்றீங்களா? இதுவரைக்கும் நான் பாடிய பாடல் எதற்கும் இப்படி கேட்டதில்லை. இந்த பாடல் மட்டும் என்னை ரொம்ப கவர்ந்திருச்சு. இதை அப்படியே நான் என் கம்ப்யூட்டர்ல ‘சேவ்’ பண்ணி வச்சுக்கணும் என்று பிடிவாதமாக கேட்டு, அந்த பாடல் முழுமை பெறுவதற்கு முன்பே பிரதியை வாங்கிக் கொண்டு கிளம்பினாராம் ரம்யா நம்பீசன்.

அதுமட்டுமல்ல, ட்யூனை கேட்டுவிட்டு பாடல் தொடங்குவதற்கு முன்பே, ‘ஒரு வீடியோ கிராபரை வரவழைங்க’ என்று கேட்டுக் கொண்ட ரம்யா நம்பீசன் ‘இந்த கலகலப்பான ரெக்கார்டிங் நேரத்தை வீடியோவாகவும் பதிவு செய்யணும்’ என்று விரும்பினாராம். அதற்கப்புறம் வீடியோ கிராபர் வரவழைக்கப்பட்டு படமாக்கினார்களாம். அதன் பிரதியையும் மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கிறார் ரம்யா நம்பீசன். ‘

அவர் சமீபத்தில் பாடிய ஃபைவ் பைவ் பாடல் குழந்தைகள் மத்தியில் பிரபலம். ஆனால் இந்த பாடலை அவரே ஒரு குழந்தையை போல ரசித்தது பாடியதுதான் ஆச்சர்யம்’ என்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். கதம் கதம் படத்தின் ஹீரோவாக நட்டி குமார் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படமான சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கதம் கதம், வெத்துவேட்டு, 13 ம் பக்கம் பார்க்க, இளமை காலங்கள், பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் ஆரஞ்சுதேவதை, வேளச்சேரி ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார் தாஜ்நூர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்!

எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ...

Close