வடிவேலு டைரக்ஷன் வேலையில் தலையிடுகிறாரா? எலி டைரக்டரின் விளக்கமும் முழக்கமும்!

விட்ட இடத்தை பிடிக்கணும்னா, விழுந்த இடத்திலிருந்து ஓடணும். நல்லவேளை… விட்டத்தை பார்த்து தேமே என்று விதியை நொந்து கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை வடிவேலு. ஓட ஆரம்பித்துவிட்டார். தெனாலிராமன் படம் சரியாக போகலேன்னு யார் எழுதினாலும், அவர்களை பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்க, வடிவேலுக்கு செமத்தியான ஒரு தளபதியும் கிடைத்திருக்கிறார். அது? எலி படத்தின் இயக்குனர் யுவராஜ்தான். தெனாலிராமனை இயக்கியவரும் இவரேதான்.

சார்… நிறைய ஊடகங்களில் தெனாலிராமன் ஓடலேன்னு எழுதுறாங்க. விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்னு எல்லா தரப்பும் சம்பாதிச்ச படம் அது. அதை ஏன்தான் இப்படி நாக்குமேல பழிய போட்டு பேசுறாங்கன்னு புரியல. நல்ல கருத்துக்களை அதில் சொல்லணும்னு வடிவேலு சார் ஆசைப்பட்டார். அதனால்தான் அது முழு நீள காமெடி படமா நாங்க தரல. ஆனால், இப்போ வரப்போற எலி, எல்லா காட்சிகளும் விழுந்து விழுந்து சிரிக்கிற படமா உருவாகிட்டு இருக்கு என்றார்.

1960 களில் நடக்கும் கதையாக உருவாகிறது எலி. ஒரு கொள்ளைக் கூட்டத்தில் ஸ்பையாக நுழையும் வடிவேலுவை அவர்கள் ஒரு கட்டத்தில் கண்டுபிடித்து துரத்த, எலி எப்படியெல்லாம் நுழைந்து ஓடும். அப்படியெல்லாம் ஓடுவாராம் வடிவேலு. ஒரு எலியின் பாடி லாங்குவேஜை அப்படியே கிரகிச்சு இந்த படத்தில் நடிச்சிருக்கார் வடிவேலு. படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடிச்சிருக்காங்க. முதல்ல அவங்க இதில் நடிக்க சம்மதிக்கல. ஆனால் இதுக்கு முன்னாடி நயன்தாரா, ஜெனிலியா, தமன்னான்னு பல பேரோட காம்பினேஷன்ல நடிச்சிருக்காரே… அதை எடுத்துச் சொல்லி புரிய வைச்சேன். அதற்கப்புறம் ஒத்துகிட்டாங்க. இருந்தாலும் இந்த படத்தில் அவங்களுக்கும் வடிவேலுவுக்கும் ரொமான்ஸ் இல்ல என்றவரிடம், வடிவேலு டைரக்ஷன் டிபார்ட்மென்ட்ல தலையிடுவாராமே? என்று ஒரு கேள்வியை கேட்டோம்.

அவ்வளவுதான்… பொங்கி விட்டார் பொங்கி. சார்… எதிர்காலத்தில் கூட இப்படி எந்த டைரக்டரிடமும் கேட்காதீங்க. வடிவேலுசார் அப்படிப்பட்ட நடிகரே இல்ல. அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் அவர். எங்கிட்ட பல மாதிரி நடிச்சுக் காட்டுவாரு. இதை வச்சுக்கலாமா? அதை வச்சுக்கலாமா? சொல்லுங்க என்பார். அவரைப்போய்…? எப்படி சார் இப்படியெல்லாம்? என்று யுவராஜ் பதறுவதை பார்த்தால், அட ஏன்தான் அந்த கேள்வியை கேட்டோமோ என்று கூட தோன்றியது.

இருந்தாலும் வடிவேலு நல்லாதான் ட்ரெய்ன் பண்ணி வச்சிருக்கார், அவரோட இயக்குனரை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் விஷால் மோதலா? பரபரக்கும் கோடம்பாக்கம்

எதையும் வெட்டிப் பேச்சு என்று ஒதுக்கினால் எல்லாம் போச்சு- முதலில் மெல்ல ஆரம்பிக்கிற முணுமுணுப்பு நாளடைவில் பெரும் கலவரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இப்போது கிளம்பியிருப்பது வெறும்...

Close