வடிவேலு மகனுக்கு கல்யாணம்! திரையுலகத்தில் ஒருவருக்கும் அழைப்பு இல்லை?
வனவாசம் போயிருக்கிறாரோ வடிவேலு என்று மற்றவர்கள் கவலைப்படுகிற அளவுக்கு மிகவும் பின் தங்கியிருக்கிறது அவரது வேகம். இப்பவும் வடிவேலுக்கென ஒரு பெரும் கூட்டம் மூடிய வாயோடு காத்திருக்க, அவருக்கோ தனது பழைய ஸ்டைல் காமெடியெல்லாம் மறந்துவிட்டது. இம்சை அரசன் 23 ம் புலிகேசி ஹிட் நினைப்பிலேயே இருக்கிறார். தன்னை நாடோடி மன்னன் எம்ஜிஆர் போல ஒரு முழுமையான ஹீரோவாகவே நினைத்துக் கொண்டு திரிவதும் அவரது சறுக்கல் ஸ்பெஷல்.
போகட்டும்… மதுரையில் டேரா அடித்து அவ்வப்போது அம்மாவின் அருகிலிருந்து அவரை கவனித்துக் கொள்ளும் வடிவேலு தன் மகன் சுப்பிரமணியை எப்படியாவது ஹீரோவாக்கிவிடலாம் என்ற முயற்சியும் செய்து கொண்டிருந்தார். வருகிற அத்தனை பேரும், ‘நீங்களே பணம் போடுங்கண்ணே. தம்பிய ஒரு இடத்துல வைக்காம ஓயக்கூடாது’ என்று வெண்ணையை வழிய விட, இது மாதிரி எத்தனை குழிகளை பார்த்திருப்பார் வடிவேலு? போங்கப்பா… என்று ஆசையை கிடப்பில் போட்டுவிட்டார். வேறு வழி? கல்யாணம்தான். மகனுடைய கல்யாணத்தை நாளை (10-12-14) சென்னையில் நடத்துகிறார்.
இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆனால் திரையுலகத்தை சேர்ந்த மிக மிக நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்த வடிவேலு, மீதி அத்தனை பேருக்கும் ஒரு தகவலாக கூட இந்த விஷயத்தை சொல்லவில்லை. வந்து தின்னுபுட்டு அந்த பக்கம் போய் திட்டப் போறானுங்க. இதுக்கு எதுக்கு கூப்பிடுவானேன் என்கிறாராம்.
பட்டவங்களுக்குதான் தெரியும் கெட்டவங்க சகவாசம்!