முதன்முறையாக சக பாடலாசிரியரை பாராட்டிய வைரமுத்து! அதிசயம்… ஆனால் உண்மை!
தனது பிள்ளைகள் மதன் கார்க்கி, கபிலன் தவிர வேறு எந்த தமிழ் பட பாடலாசிரியர்களையும் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார் வைரமுத்து. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள் இங்கிருக்கும் பிற பாடலாசிரியர்கள்.
அண்மையில் இளையராஜாவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்த வைரமுத்து, ‘நீங்க கபிலன், மதன் கார்க்கி போன்ற இளைய பாடலாசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றுதான் கேட்டுக் கொண்டாரேயொழிய, ‘அண்ணாமலையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றோ, முத்துக்குமாரை அணைத்துக் கொள்ளுங்கள் என்றோ சொல்லவே இல்லை. அப்படியொரு அன்பான குடும்பத் தலைவராக விளங்கி வரும் கவிப்பேரரசு, தன் சிற்றரசுகளை தவிர்த்து முதன் முறையாக ஒருவரை பாராட்டியிருக்கிறார் என்பதே எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான விஷயம்?
ஆனந்த யாழை மீட்டுகிறாய்… என்று தங்கமீன்கள் படத்தில் அருமையான பாடல் ஒன்றை எழுதி அதற்கு தேசிய விருதும் பெற்றிருக்கும் நா.முத்துக்குமாருக்கு ஒரு தொலை பேசி வந்ததாம். எடுத்தால் எதிர்முனையில் வைரமுத்து. முத்துக்குமார்…. நீங்கள் எழுதிய அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. நீங்கள் வாழ்க என்று வாழ்த்தினாராம்.
ஆஹா… இதுவல்லவோ நிஜமான தேசிய விருது?