‘ இனி ஃபேஸ்புக் திருமணங்கள் நடக்கும் ’ கவிப்பேரரசு வைரமுத்து ஆருடம்!

ஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும் ஜூலை 13 ந் தேதி வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழா கோவையில் உள்ள கொடீசியாஅரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அவரது மணிவிழாவும், பத்மபூஷன் விருது பெற்றமைக்கான பாராட்டு விழாவும் இணைந்து கொள்வதால், எவ்வருடமும் இல்லாத கொண்டாட்டமாக இந்த வருடத்தை சிறப்பிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைரமுத்து, ‘வாழ்நாள் முழுவதும் எல்லாரையும் மனம் நிறைய பாராட்டிகிட்டே இருக்கேன். என்னையும் பாராட்டுங்கப்பா…’ என்று சிலேடையாக பேச ஆரம்பித்தார். வழக்கம் போல மடை திறந்த வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது அவரது பேச்சு. ‘இனி தாய்மொழி கல்வி என்பது சாத்தியமா என்று புரியவில்லை. ஏனென்றால் இன்று கலப்பு மணங்கள் வெகு சாதாரணமாகிவிட்டது. கேரள பெண்ணும் தமிழ் பையனும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் பிறக்கும் குழந்தைக்கு எது தாய் மொழி? கன்னட இளைஞனும் தமிழ் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் பிறக்கும் குழந்தைக்கு எது தாய்மொழி?’

‘எதிர்காலத்தில் பேஸ்புக் திருமணங்கள் நடக்கலாம். நாடு விட்டு நாடு காதல் திருமணங்கள் நடக்கலாம். எனவே தாய் வழி கல்வி என்பது வரையறுக்க முடியாது. ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், அந்தந்த மாநில எல்லைக்குள் இருக்கிற கல்விக் கூடங்களில் அந்தந்த மாநில மொழியை கட்டாயமாக்க வேண்டும். இது இந்தியா முழுக்க சாத்தியப்பட வேண்டும். இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் கோரிக்கை. இதை மத்திய அரசுக்கு வலியுறுத்தி ஒரு பேரணியாக செல்ல முடிவெடுத்திருக்கிறோம்’ என்றார் வைரமுத்து.

‘நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன. அப்போதெல்லாம் முடியாத விஷயத்தை இப்போது உங்களால் சாதித்துவிட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை சற்றே தடுமாற்றத்தோடு எதிர்கொண்டார் கவிஞர். ‘உண்மைதான். ஆனால் தொடர்ந்து முயற்சிப்போம்’ என்றார் நம்பிக்கையோடு.

பின்குறிப்பு- கோவையில் கவிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இடத்திற்கு ‘வைர வனம்’ என்று பெயரிட்டு, அங்கு மரங்கள் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார்களாம். தனது பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை அங்கே நடவிருக்கிறார் கவிப்பேரரசு. காலம் உள்ளவரை அதன் ஒவ்வொரு இலையும் கூட கவிதையாக காற்று வீசட்டும்….

Read previous post:
‘ உடனே சட்டம் கொண்டு வாங்க… ’ தமிழக அரசுக்கு சிவகுமார் வேண்டுகோள்

ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும்...

Close