வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

பேரீக்காய் ஊறுகாய் ஆகலாம். ஊறுகாய் பேரீக்காய் ஆகுமோ? சந்தானத்தின் ஹீரோ ஆசையும் அப்படிதான் இருக்கிறது. அவர் திரையில் தோன்றி முழுசாய் ஒரு மணி நேரம் போன பின்பும், என்னடா இன்னும் சிரிப்பே வரலீயே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ‘அண்ணாச்சி இந்த படத்தில் வெறும் சிரிப்பு நடிகர் மட்டுமில்லேப்பா… அவர்தான் ஹீரோ தெரியும்ல?’ என்கிறது பின் மண்டை திடீரென விழித்துக் கொண்டு!

அதிலும் சந்தானத்தின் அறிமுகக் காட்சி இருக்கிறதே… ‘எல்லாரும் ரஜினி மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டா ரஜினி யாரு மாதிரிய்யா நடிப்பாரு?’ என்று சூப்பர் ஸ்டாருக்காக அனுதாபப்படவும் வைக்கிறது. ரஜினி ரிட்டையர் ஆகிற வரைக்கும் யாரும் ரஜினி போல நடிக்கக் கூடாது, ரஜினி போல ஓப்பனிங் சீன் காண்பிக்கக் கூடாது. ரஜினி போல ஸ்டெப் வைத்து நடக்க கூடாது என்றெல்லாம் பத்து கட்டளைகள் போட்டு பாதுகாக்கலாம் அவரை. அல்லது ரஜினி மாதிரி யார் நடித்தாலும், அவர்கள் எங்களுக்கு ராயல்டி தரணும் என்று லதா ரஜினி தன் (வழக்கமான) கலெக்ஷ்ன் வேட்டையை ஆரம்பிக்கலாம். அப்பதான் அடங்குவா…ங்க!

ஒரு வலுவான திரைக்கதை அமைப்புள்ள படமாக மட்டும் இது இல்லையென்றால், தேர்தலில் மாட்டிக் கொண்ட வடிவேலு ஆகியிருப்பார் சந்தானம். நல்லவேளை… எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு அகில உலக கிராம நகர பஞ்சாயத்து மற்றும் வார்டுகளை சேர்ந்த சந்தானம் ரசிகர்கள் நினைத்து நினைத்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

கதை என்னவாம்? தெலுங்கு படங்களுக்கேயுரிய பரம்பரை பகையும், கொலை வெறியில் தெறிக்கும் சிகப்பு சட்டினியும்தான். சந்தானத்தின் அப்பாவான போஸ் வெங்கட், அவரது சின்ன மச்சானை வெட்டிக் கொன்று விடுகிறார். பகை தீர்க்க நினைக்கும் கொலையுண்டவரின் அண்ணன், தனது வாரிசுகளிடம் ‘அவனோட குடும்பத்துல எவன் உயிரோட இருந்தாலும் போடணும்டா’ என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இந்த பிளாஷ்பேக் அறியாத போஸ் வெங்கட்டின் மகனான சந்தானம் வளர்ந்து பெரியவனாகி அந்த ஊருக்கு வர, கதாநாயகியின் அப்பாதான் தன்னை காவு கொடுக்க கிளம்பியிருக்கிற சூரன் என்பது புரிகிறது. அதற்குள் ஆடு சம்பந்தப்பட்டவரின் வீட்டு பட்டியிலேயே அடைபட, வீட்டை விட்டு வெளியே வந்தால் தனக்கு பொலிதான் என்பதை புரிந்து கொள்கிற சந்தானம் எப்படி தப்பித்தார்? விறுவிறுப்பான பிளாஷ்பேக். அதற்காக டாடா சுமோவெல்லாம் ஒரு சைக்கிளை முந்த முடியாமல் தவிப்பதெல்லாம் ஓவர்டா உலகநாதா.

நடுநடுவில் ஹீரோயினுடன் ரொமான்ஸ். நினைத்து நினைத்து கிச்சு கிச்சு என்று பொறுப்புணர்ந்து படத்தை கரையேற்றுகிறார் சந்தானம். இந்த கதையில் ஒரு ஜெயம் ரவியையோ, சித்தார்த்தையோ நினைத்துப் பார்க்க விரும்புகிறவர்கள் படத்தை பஞ்சராக்காமல் ஓயப்போவதில்லை. பட்… சந்தானம் பீர் நுரையை போல பொங்க பொங்க நடித்திருக்கிறார் என்பதையும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின், ஓ.பி அடிப்பது அறவே கூடாது என்று நினைத்திருக்கிறார் சந்தானம். முறையாக நடனம் கற்றுக் கொண்டு அவர் ஆடியிருக்கிற ஆட்டம் இருக்கிறதே, பிரபுதேவா கெட்டார்! அந்த வீட்டிற்குள் சிக்கிக் கொண்டோம், தப்பிப்பதற்குள் தலைக்கு பாதுகாப்பில்லை என்பதை அறிந்த பின் அவர் காட்டும் திகில் முகம் பரிதாபம். தன்னைதான் ஹீரோயின் காதலிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்று நினைக்க, க்ளைமாக்சில் உண்மை புரிந்து சந்தானம் எடுக்கிற முடிவுக்கு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று கைதட்டும். சந்தேகமில்லை. ‘யார்றா இவன் குண்டான்ல விழுந்த குழம்பு கரண்டியாட்டம் இருக்கான்’ என்பதும், ‘மலையூர் மம்பட்டியானுக்கு மலேரியா வந்த மாதிரி’ என்று சீண்டி சிக்கெடுப்பதும் சந்தானத்திற்கேயுரிய சரவெடி.

இவரது கூட்டணிக்குள் தேவயானியின் நடமாடும் காம்பவுண்ட் ராஜகுமாரன் சிக்கிவிட்டார் என்ற செய்தியறிந்த ரசிக ஜனம் ஏக எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் வந்திருக்கும். பட்… ஓவர் கூச்சலில் ராஜகுமாரருக்கும் சறுக்கல். நீள……மாக இந்த காட்சியை இழுவை செய்த சந்தானத்தின் கால்குலேஷுனுக்கும் சறுக்கல்.

கதாநாயகி அஸ்னா சவேரி அழகா? சுமாரா? என்று பட்டி மன்றம் வைத்தால், நாலு தீபாவளி மூணு பொங்கலுக்கு நான் ஸ்டாப்பாக இழுக்கலாம். முடிவு சொல்ல முடியாமல் நடுவர்களே ‘சுச்சா’ போய்விடுவார்கள். பொண்ணு அப்படியிருக்கு! கொஞ்சமே வந்தாலும், சந்தானத்தின் பேவரைட், ரசிகர்களின் பேவரைட் கரகர கணேஷ் கலகலப்பூட்டுகிறார்.

யப்பா… அந்த வில்லன் கோஷ்டி இருக்கிறதே, சோறு போட்டு சுளுக்கெடுக்கிற ஸ்டைலை நினைத்தாலே குலை நடுங்குகிறது. முதல் காட்சியிலேயே இந்த பேமிலி இப்படிதான் என்றும் காட்டி விடுகிறார்களா? தலையில் பல்லி ஊர்கிற திகிலோடு நகர்கிறது இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி அத்தனையும். அதிலும், சந்தானம் ஒரு போஸ்ட் கம்பத்தில் ஏறி அது அப்படியே பின் சாய்ந்து வெளியே விழ எத்தனிக்க, ஒரு கூட்டமே அவரை கொத்த திரியும்போது அடிவயிறு சொரேர்…

ஷக்தி, ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு பளிச்சென இருந்தாலும், மூடுகேற்ப விழிகளை ஓப்பன் செய்திருக்கிறது. அதுவும் சந்தானம் தப்பித்துச் செல்ல முயலும் அந்த பாலம் தொடர்பான காட்சி அழகையும் திகிலையும் ஒருங்கே போட்டு புரட்டியெடுக்கிறது. சித்தார்த் விபின் பாடல்கள் ரிப்பீட் ரகம்.

நல்லவேளை…இந்த படத்தில் ஸ்ரீநாத் நடிக்கவில்லை என்பதே பெரிய ஆறுதல். ஒரு இயக்குனராக ஸ்கோர் செய்திருக்கிறார் என்பதும் மறுப்பதற்கில்லை.

நல்லவனுக்கு அழகு சொல்லாம கிளம்புறது. வல்லவனுக்கு அழகும் அதேதான்! சந்தானம் ஸார்… போதும் உங்க ஹீரோ ஆசை. மத்தளத்தை தட்டுறேன்னு மாவிளக்கை உடைச்சிராதீங்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யாமிருக்க பயமே / விமர்சனம்

‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து! தமிழில் வரும் அநேக பில்லி...

Close