வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்…. – முருகன் மந்திரம்

சினிமாக்காரிகள்ன்னு சொன்னதும் நமீதா, நயன்தாரான்னு வகை வகையா… உங்க ரசனைக்கு ஏத்தமாதிரி யார் யார் முகமோ உங்க கண்ணுக்குள்ள வந்து போகும்… முகம் மட்டுந்தான் வந்து போகுமான்னு… நான் கேக்கிறது லேசா உறுத்திச்சுன்னா… மொதல்ல கேள்விக்கு பதில் சொல்லிட்டு… அப்புறமா யோசிச்சி பாருங்க… கண்ணுக்குள்ள என்ன என்ன வந்து போச்சோ… அது நமக்கு சொல்லும் நம்ம ரசனையை… நம்ம ரசனையின் நீளத்தை ஆழத்தை அகலத்தை,

உங்களுக்கு முதன்முதலா அறிமுகமான சினிமாக்காரி யாருன்னு உங்க நினைவுக்கு வருதான்னு மூளைய லேசா தட்டிப் பாருங்க. உங்க மனசுக்குள்ள ரகசியமா முதன்முதலா வந்து உட்கார்ந்த சினிமாக்காரி யாருன்னு லைட்டா தேடிப்பாருங்க… எப்டி…? ஏன்,..? அந்த சினிமாக்காரி உங்க ரசனை பரிட்சைல பாஸ் மார்க் வாங்குனான்னு … அதும் எப்டி முதல் மார்க்கு வாங்குனான்னு வண்டிய பின்னாடி வுட்டு பாருங்க. அப்டியே நோட் பண்ணி வச்சுக்குங்க. கண்டிப்பா வாழ்நாள்லயே எனக்கு ஒரே ஒரு சினிமாக்காரி மட்டுந்தான் பிடிக்கும்னு எந்தக்கொம்பனும் சொல்ல முடியாது. எந்தக் கொம்பியும் சொல்ல முடியாது. ஒன்று, இரண்டு, மூன்று… என்று ஆரம்பிக்கலாம்… ஆனா, முடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல.

அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விசயத்தை முடிவு பண்ணிட்டு இதுக்கு மேல போலாம். மொதல்ல சினிமாக்காரிகள்னு நீங்க யாரை நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க… நடிகைகளா?

ஆமா… ஆமா… கரீக்ட் தான். ஆனா அவுங்க மட்டும் இல்லையே பாஸ். நடிககைள் தவிரவும் இன்னும் நெறைய நெறைய பெண்கள் சினிமாவுல இருக்காங்களே… “காதல் ஓவியம், பாடும் காவியம்”னு நம்ம ராசா கூட உருகி உருகி பாடுற ஜென்ஸி மாதிரி பாட்டு பாடுறவங்க… செக்ஸி லுக்கோட செம கிக்கா சில்க்கு மாதிரி டான்ஸ் ஆடுறவங்க.. அப்புறம் கூட்டமா பாடுறவங்க… கூட்டமா டான்ஸ் ஆடுறவங்க… எல்லா ஹீரோயினுக்கும் டக்கரா குரல் கொடுத்து… அழகா மேட்ச் பண்ற சவீதா அக்கா மாதிரி டப்பிங் பேசுறவங்க… இப்போ கிராபிக்ஸ், அனிமேஷன் எந்தப்பக்கம் திரும்புனாலும் சினிமாவுல பெண்கள் இருக்காங்க…. அப்புறம் துவைக்கிறவங்க… சமைக்கிறவங்க… பரிமாறுறவங்க… பட்டியல் முழுசும் சொன்ன ரொம்ப நீளமா இருக்கும்.

இப்படி வகையா வகையா ரகம் ரகமா சினிமாக்காரிகள்…

கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம்… இந்த சுற்றளவுப்பகுதிதான் சினிமாக்காரிகள் நடமாடும் முக்கிய பகுதிகள்.
ஆற்காட் ரோடு, அருணாச்சலம் ரோடு, குமரன் காலனி மெயின் ரோடு… இதில் ஏதோ ஒரு சாலையில் பயணப்படாத எந்த தமிழ் சினிமாக்காரியும் இருக்க வாய்ப்பில்லை. பல நேரங்களில் அந்த பேரரசிகளின் பாதங்கள் இந்த சாலைகளை முத்தமிட்டிருக்கலாம். ஊருக்கும் உலகத்துக்கும் யாரேன்றே தெரியாத காலங்களில் அந்த பேரழகிகள் மிக சாதாரணமாக நம்மோடு கையேந்தி பவன்களில் டிபன் சாப்பிட்டிருக்கலாம்.

நேற்றைய, இன்றைய, நாளைய… தமிழ் சினிமாக்காரிகள்… வந்துபோன, வந்துகொண்டிருக்கிற, வரப்போகிற சாலைகளில் கடந்த 10 வருசத்துக்கும் மேலாக நான் தினசரி நடமாடிட்டிருக்கேன்னு நெனைச்சலே செம கெத்தாத்தான் இருக்கு. பின்ன, நம்மளும் சினிமாக்காரன் தானே. எப்டிப் பார்த்தாலும் சினிமாக்காரிகள் எல்லாரும் நமக்கு சொந்தக்காரிகள் தான். அதுல யார், யார் அக்கா, தங்கச்சி, யார் யார் அண்ணி, கொழுந்தி, யார் யார் அத்தை சித்திங்கிறதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். எந்த உறவுமே சொல்ல விருப்பமில்லேன்னு வச்சிக்கோங்க… அந்த சினிமாக்காரிகள் மேல நமக்கு ஒரு “இது”ன்னு சந்தேகமேயில்லாம முடிவு பண்ணிரலாம். இல்ல எல்லா சினிமாக்காரிகளுமே எனக்கு அக்கா, தங்கச்சின்னு நீங்க யாராவது சொன்னா… ஸாரி பாஸ்… நான் உங்களை மாதிரி இல்ல. இல்லவே இல்ல.

எதிரே வருகிற பெண், அல்லது எதிரே இருக்கிற பெண் சினிமாக்காரின்னு தெரிஞ்சா.. நம்ம மூளை வழக்கமா இருக்கிறதை விட கொஞ்சம் வேற மாதிரி நடிக்க ஆரம்பிக்கும். யோசிக்க ஆரம்பிக்கும்… எல்லாருமே அப்டித்தான்னு அடம்பிடிக்கிற ஆள் இல்ல நான். ஆனா, மெஜாரிட்டி நம்ம பக்கந்தான் இருக்க முடியும்கிறது தான் நாட்டு நடப்பும் நம்பிக்கையும்.

சினிமாக்காரிகள் கிட்ட எவ்ளோ ஸ்பெஷல் சமாச்சாரங்கள், கொஞ்சம் மாத்திச்சொன்னா, ஒவ்வொரு சினிமாக்காரியுமே ஸ்பெஷல் தான்.
எட்டாங்கிளாஸ் படிச்ச நேரம்னு நினைக்கிறேன். யாரோ ஒரு மாமனுக்கோ சித்தப்பனுக்கோ கல்யாணம். நடுத்தெருவுல தெரை கட்டி… “தாய்க்குப்பின் தாரம் படம்” போட்டாங்க. “அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ”ன்னு ஒரு அக்கா தலையை அசைச்சி அசைச்சி பாடுறாங்க. கருப்பு வெள்ளை படந்தான். ஆனாலும் அவங்களை ரொம்பவே பிடிச்சி போச்சு. பின்னாடி தான் அந்த அக்கா பேரு பானுமதின்னு தெரிஞ்சிகிட்டேன். பானுமதி எவ்ளோ படம் நடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் பானுமதி நடிச்ச எந்த படமும் நான் பாத்த நினைவில்ல. ஆனா பானுமதின்னா எனக்கு அந்த பாட்டு நினைவுக்கு வந்துரும். அப்புறம் ஒருநாள், நான் ரசிச்ச அந்த பாட்டை பாடுனதே பானுமதின்னு தெரிஞ்சதும் இன்னும் எனக்கு பானுமதியை ரொம்ப பிடிச்சி போச்சி. ஒருநாள் பானுமதி பத்தி தெரிஞ்சிக்கலாம்னு கூகுள்ல தேடுனா, விக்கிபிடியாக்காரன் போட்ட பட்டியல் பார்த்து மெரண்டு போயிட்டேன். பானுமதி நடிச்சிருக்காங்க. பாட்டு பாடி இருக்காங்க. பாட்டு எழுதி இருக்காங்க. டைரக்சன் பண்ணி இருக்காங்க. நாலைஞ்சு படங்கள் தயாரிச்சும் இருக்காங்கன்னு… ப்ப்ப்பாஆஆஆஆஆ…. எவ்ளோ பெரிய ஆளா இருந்திருக்காங்க. ஒவ்வொரு சினிமாக்காரியுமே ஸ்பெஷல்தான்னு நான் சொன்னதுல தப்பே இல்லன்னு தோண வச்சாங்க பானுமதி.

அதே மாதிரி நான் வயசுக்கு வராத காலகட்டந்தான் சில்க் ஸ்மிதா வயசுக்கு வந்தவங்க மனசுகளில்… ராத்திரிகளில்… கோலோச்சுன, காலோச்சுன, கண்ணோச்சுன… காலகட்டமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஆளே இல்லாம தனியா உட்கார்ந்து சில்க் போட்டோ, அல்லது பாட்டு பார்த்தா கூட திருட்டுத்தனமா ரசிக்கிற மாதிரி ஒரு நெனைப்பும் குறுகுறுப்பும் இருக்கும். சில்க் ஸ்மிதா கிட்ட எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப பிடிச்சது…

பாத்தீங்களா… நீண்டுகிட்டே போகுது…

சின்னதா சினிமாக்காரிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதணும்னு தோணிச்சி. சரி எழுதலாமேன்னு உட்கார்ந்தா அது குறுந்தொடரா மாறி… என்னை பாடா படுத்துறது மட்டுமில்லாம உங்களையும் பாடா படுத்துது. ஆனாலும் பரவால்ல. நமக்காக எவ்ளோ செய்ற சினிமாக்காரிகளுக்காக இன்னும் சில பாகங்கள் எழுதுனா தப்பில்லேன்னு நெனைக்கிறேன்.

(இன்னும் ஜொலிப்பார்கள்)

Read previous post:
வாகன சோதனை… வண்டியில் ரெண்டு கோடி… அட்வான்சை வாங்காமல் அல்லாட விட்ட ஹீரோ…

எலக்ஷன் டைம்... பை நிறைய பணத்தோட போற எல்லாரையும் சோதனைங்கிற பேர்ல சொல்லாம கொள்ளாம நரகத்துக்கு போக வைக்கிறாங்களே இந்த அதிகாரிகங்க... என்று புலம்பல் சப்தம் ஒலித்துக்...

Close