வானவராயன் வல்லவராயன் / விமர்சனம்

தமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு ரொம்ப பிடித்தமான வார்த்தை அது. வானவனும் வல்லவனும் அந்த வார்த்தையைதான் மெய்யாக்க முயல்கிறார்கள். கதர் ஜிப்பா ஆசாமிகள், கருந்தாடிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கண்ணாடி பார்ட்டிகள், அகிரகுரசோவாவின் ஆதர்ஷ சிஷ்யர்கள், ‘கொரியன் துருக்கி இந்தோனிஷியா மற்றும் சுங்குவார் சத்திரம், கூடுவாஞ்சேரி குறும்பட சங்க வீடியோக்களில் என்னதான்ப்பா இருக்கு?’ என்று தேடுகிற மேதாவிகள் யாருக்கும் பிடிக்காத படம் இது. ஒரு வகையில் பிடிபடாத படமும் கூட! ஆனால்… ஆனால்… பி யிலிருந்து சி, டி, இசட் வரைக்கும் ரவுண்டு கட்டி பொளப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது படத்தில்.

ஒரு வீட்டில் இரு வால்களாக முளைத்த அண்ணன் தம்பியின் கதைதான் இது. கிருஷ்ணாவும், மா.கா.பா ஆனந்தும் எங்கு போனாலும் ரகளைதான். வீடு தேடி வந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கிற சொந்த பந்தங்கள், ‘தப்பி தவறி கூட வந்திராதீங்க’ என்று கெஞ்சி கேட்கிற அளவுக்கு இவர்களின் விஜயம் இருக்கும் என்றால் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அந்த ஊரில் தாவணி அணிந்த எல்லாரையுமே ஒரு முறை ‘ட்ரை பண்ணி’ காதலில் தோற்றுப்போன கிருஷ்ணா, கடைசியில் மோனல் கஜ்ஜாரை பார்க்கிறார். பூரான்களையே லவ்வோடு நோக்கும் அவரது கண்கள், புசுபுசு முயல்குட்டியை பார்த்தால்? ச்சும்மா சிலிர்த்துக் கொண்டு திரிகிறார். முதலில் இஞ்சி மரபா தின்றதை போல எடுத்தெறியும் மோனலுக்கும் கிருஷ்ணாவை பிடித்துப்போக, லவ்…!

காதலியிடம் தனியாக பேசப்போகிறார் கிருஷ்ணா. அதுவும் நள்ளிரவில். ஊர் விழித்துக்கொள்ள, தப்பி ஓடுகிறார்கள் இருவரும். கிருஷ்ணாவுக்கு ‘சிறப்பு பூஜை’ செய்து ரத்த பொட்டலமாக அனுப்பி வைக்கிறது ஊர். அவ்வளவுக்கு பிறகும் மகளின் சந்தோஷமே தன் சந்தோஷமாக நினைக்கும் அப்பா ஜெ.பி., ‘கண்டிப்பா நான் அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நாளைக்கு குடும்பத்தோட மாப்பிள்ளை வீட்டுக்கு போகலாம்’ என்று சொல்லி வைக்க, சரியாக என்ட்ரியாகிறார் மா.கா.பா ஆனந்த். அண்ணனை அடித்த எவனையும் சும்மாவிடக் கூடாது என்கிற கோபத்தோடு அந்த ஊருக்குள் நுழையும் அவர், பரபரவென காரியத்தில் இறங்க ஊருக்கே பெரிய மனுஷரான ஜெ.பி யின் வேட்டியையும் உருவி எறிகிறார் மா.கா.பா. அப்புறம் எங்கே ஜோடிகள் ஒன்று சேர்வது? காலில் சுடு தண்ணியை ஊற்றிக் கொண்டு பரபரவென நகர்கிறது கதை. அதையும் மீறி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? …க்ளைமாக்ஸ்!

வசனம் எழுதிய அறிமுக இயக்குனர் ராஜ்மோகனுக்கு ‘வாழ்நாள் ஜோக்காளி’ விருதே கொடுக்கலாம். ஒவ்வொரு வரிகளிலும் அவ்வளவு எள்ளல், துள்ளல், உற்சாகம், குதுகலம்! கவுதம் வாசுதேவ மேனன், குட்டிப்புலி சசிகுமாரை கூட விட்டு வைக்கவில்லை அவர். ஹீரோயின் மோனலிடம் கிருஷ்ணா, ‘நம்ம லவ் மேட்டர் இருக்கே?’ என்று ஆரம்பிக்க, ‘லவ்வையே மேட்டர்ங்கிற நீ. உன்னை போய் நான் எப்படி லவ் பண்றது?’ என்று பம்முகிறார் அவர். ‘என் காதலிக்கு அஞ்சலின்னு எவ்வளவு பொருத்தமா பேரு வச்சுருக்காங்க’ என்று கிருஷ்ணா உருக, ‘போடா… நீயும் அந்த பேரும்’ என்று எடுத்தெறிகிற மா.கா.பா அதற்கு கொடுக்கிற விளக்கம்… ஆவ்சம்! ‘எங்காவது திருமணாஞ்சலி, கிரகப்பிரவேசாஞ்சலின்னு சொல்றாங்களா? கண்ணீர் அஞ்சலின்னுதானே சொல்றாங்க? என்று அவர் திருப்பி கேட்கிறபோது சிரித்து உருளாத ரசிகர்களே இல்லை தியேட்டருக்குள். ஒரு சாம்பிளுக்குதான் இவை ரெண்டும். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி பற்ற வைத்துக் கொண்டேயிருக்கிறார் ராஜ்மோகன். சிரித்துக் கொண்டேயிருக்கிறது தியேட்டர்.

கிருஷ்ணா ஓவர் ஆக்டிங் பேர்வழி. அதுவே இந்த படத்தின் ப்ளஸ் ஆகவும் அமைந்துவிடுகிறது. மா.கா.பாவால் அழ வைக்கவும் முடிகிறது. அதே நேரத்தில் அதிர அதிர சிரிக்க வைக்கவும் முடிகிறது. இவரது வரவு… இன்டஸ்ட்ரியில் மேலும் ஒரு வட்டிக்கணக்குதான், சந்தேகமில்லை!

தம்பி ராமய்யாவும், கோவை சரளாவும் தம்பதிகள். கிருஷ்ணா, மா.கா.பாவுக்கு சரிக்கு சரி நின்று சிரிப்பு மூட்டுகிறார்கள். இதே தம்பதி ஒரு காட்சியில் அழவும் வைக்கிறது. ‘டேய்… மில்லை நீங்களே நடத்துங்க. எத்தனை முறை வேணும்னாலும் தடுக்கி விழுங்க. துக்கி நிறுத்த அப்பா இருக்கேன். ஆனால் அப்பா செத்துட்ட பிறகு விழுந்திடாதீங்கடா’ என்று தம்பி ராமய்யா கெஞ்சுகிற போது, பொளக்கென இரண்டு சொட்டுகள் எட்டிப்பார்க்கிறது விழிகளில். உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க வேட்டிய அவன் உருவுனான்னுதானே வேணாம்கிறீங்க. நானே உருவிக்கிறேன் என்று தம்பி ராமய்யா வேட்டியை உருவ எத்தனிக்கிற அந்த கடைசி காட்சியில் கூட, வயிற்றை சீண்டிவிட்டு போகிறது வசனங்கள்.

எத்தனையோ வருஷங்கள் கழித்து சௌக்கார் ஜானகி மேக்கப் போட்டிருக்கிறார். ஆனால் அவ்வளவு வருஷ இடைவெளிக்கும் சேர்த்து! படத்தில் அதுவே பொருத்தமாக அமைந்துவிடுவது வேறு. இவரையும் ஓட்டு ஓட்டென ஓட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜ்மோகன்

கொழுக் மொழுக் பொம்மையை போல வருகிறார் மோனல் கஜ்ஜார். நடிப்பும் அநாயசமாக வருகிறது. எதிர்காலத்தில் உருப்படியான ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தால், ரத்னா ஃபேன் ஹவுசிலும் மோனல் ஃபேன்கள் கிடைக்கக் கூடும்!

வழக்கமாக  முக்கால் அரை சீன்களில் வந்து போகும் அமெரிக்க மாப்பிள்ளையாக, அட… நம்ம சந்தானம்! கடுகு சிறுத்தாலும், மிடுக்கு குறையாது என்பதற்கு அவர் அடிக்கும் நக்கல்களும், அதற்காக விழுந்து சிரிக்கும் கூட்டமுமே சாட்சி!

பழனி குமாரின் ஒளிப்பதிவில் பொள்ளாச்சியின் பசுமை அப்படியே கண்களில் நிறைகிறது. இசை யுவன் சங்கர் ராஜா. குழந்தை அவ்வப்போது ஃபார்மில் இல்லாமல் போய்விடுகிறது சமீபகாலமாக! இது அந்த நேரத்தில் ஒப்புக் கொண்ட படம் போலிருக்கிறது. நல்லவேளையாக ஒன்றிரண்டு பாடல்களை கரையேற்றுகிறார். குறிப்பாக மாணிக்க விநாயகம் பாடியிருக்கும் ‘மனசு இங்கே மனசு இங்கே’ ரிப்பீட் ரகம்.

மாஸ் ஃபார்முலா படங்கள் ஒருபோதும் லாஸ் ஆவதில்லை என்கிறது விநியோகஸ்தர்களின் அகராதி. இந்த ‘அகராதி புடிச்ச’ வார்த்தைக்கு அழுத்தம் சேர்ப்பார்களா வானவனும் வல்லவனும்?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிகரம் தொடு விமர்சனம்

மோனல் கஜ்ஜார் என்ற மூடு பனியை, மார்கழி மாதத்திற்கு முன்பே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்த UTV யை வணங்கி இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப்பொருத்தம்! படத்தில்...

Close