வந்தா மல- விமர்சனம்

தொட்டா திருட்டு, சும்மாயிருந்தா குவார்ட்டர்! அப்பப்ப காதல், அக்கா கடை இட்லி!! என்று வாழ்க்கையை ஓட்டும் நான்கு குப்பத்து இளைஞர்களின் கதைதான் இந்த வந்தா மல. தலைப்பிலேயே ‘போங்கடா நீங்களும் உங்க டீசண்டும்’ என்கிறார் இயக்குனர் இகோர். அதற்கேற்ப கதையும், காட்சிகளும் மண்ணுல போட்டு புரட்டியெடுத்த மாதிரி சில இடங்களில் சகஜம். சில இடங்களில் சங்கடம்! எப்படியிருந்தாலும் இந்த கூவம் நதிக்கரையோர கதையை குத்த வச்சு பார்க்க வைத்திருப்பதால், டைரக்டர் இகோருக்கு ஒரு குவார்ட்டரு சொல்லேய்ய்ய்…!

கதை?

அசருகிற நேரத்தில் கழுத்தில் போட்டிருக்கிற செயினை அடிப்பதுதான் ஹீரோ உள்ளிட்ட நண்பர்களின் தொழில். அப்படியொரு முறை இவர்கள் அடித்துவரும் செயினுக்குள், ‘என்னை காப்பத்துனா இரண்டு கோடி இலவசம்’ என்று எழுதியிருக்க, செயினை பறிகொடுத்த பெண்ணை வளைக்கிறார்கள். அவளோ, எனக்கும் அந்த செயினுக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிவிட, மீண்டும் தேடல். கிடைக்கிற அட்ரசும், செய்யப்போகிற வேலையும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. நடுநடுவே மாவு மில் பிரியங்காவுக்கும், செயின் திருடன் தமிழுக்கும் லவ். மிட் நைட் மசாலாவை விடவும் மோசமான அந்த லவ் காட்சிகள் வரும்போதெல்லாம் குரங்கு ரத்தம் குடித்த மாதிரி சேட்டைக்குள்ளாகிறார்கள் ரசிகர்கள்.

செயின் அறுக்கிறவன்தான் நம்ம லவ்ஸ் என்பதை அறிந்து கொள்கிற பிரியங்கா, சீ… போ…தூ… என்று விரட்டியடிக்கிறார். அப்புறம் அவரே வந்து இடுப்பில் ஏறிக் கொள்ளாத குறையாக நச்சரிக்கிறார். இரண்டு கோடி கிடைத்ததா? திருட்டு காதலனை பிரியங்கா மன்னித்தாரா என்பதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

நான்கு இளைஞர்களும் சோப்பு சீயக்காய் போட்டு குளித்து கழுவியெடுத்தால் நன்றாக இருப்பார்களோ என்னவோ? ஆனால் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் குடித்துவிட்டு மல்லாந்து சாய்கிற காட்சிகள் எல்லாம், நம்ம ஊரு டாஸ்மாக் பாரின் லட்சணத்திற்கு சற்றும் குறைவானதாக இல்லை.

இந்த கூட்டத்தில் தமிழ் மட்டும் பார்க்க லட்சணமாக நன்றாக இருக்கிறார். இவருக்கும் பிரியங்காவுக்குமான ரொமான்ஸ் அச்சு அசலான அச்சுவெல்லம். பிரியங்கா அடிக்கிற அடிக்கெல்லாம் தாங்குவதும், சமாளிப்பதுமாக நடிப்பால் கஷ்டப்பட்டதைவிட உடம்பால் கஷ்டப்பட்டிருக்கிறார்.

பிரியங்காவுக்கு இந்த கேரக்டர் குருவி தலையில் பனங்காய் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரது கெப்பாசிட்டிக்கு இன்னும் கூட நடித்து மிரட்டுவார் போலிருக்கிறது. அசால்ட்டாக அவர் நாவில் துள்ளி விளையாடும் சென்னை பாஷையும், நான் எதற்கும் தயார் என்கிற அளவுக்கு கேரக்டரில் ப்ளூ கலரை ஏற்றிக் கொள்வதுமாக செம்ம! ஆனால் எந்த இடத்திலும் ஆபாசத்திற்கு இடம் கொடுக்காத ஜாக்கிரதையுணர்வும் இருந்திருக்கிறது அவருக்கு.

பின்பாதியில் நால்வருமாக சேர்ந்து செயின் ஆன்ட்டியை தேடக்கிளம்புவதும், அதே ஆன்ட்டி டபுள் ஆக்ட்டில் வந்து நிற்பதும், ட்ராமா நம்பர் ஒன். அந்த எபிசோடில் வரும் திருநங்கை மட்டும் வயிறு வலிக்க சிரிப்பு மூட்டுகிறார். ‘ஐய்யோ… நம்ம புள்ளைங்கள்லாம் ஒண்ணா ஆப்ட்ருச்சுங்கோ’ என்று அவர் குஷியாகிற நேரத்தில் தியேட்டரும் குஷியாகிறது.

படத்தில் பாடல் காட்சி வரும்போதெல்லாம் கொண்டாடுகிற மாதிரி மெட்டுகளை போட்டு தியேட்டரை திருவிழா கோலமாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம்-டி.ராஜ். அ ஆ வன்னா, அண்ணாத்துரை பாரண்ணா… பாடலும், உன்னாண்ட காதல நான் சொல்லுறச்சே என்னா நினைச்சே? வும், தாரை தப்பட்டை ரகம்! பராசக்தி படத்தின் பாடலான தேச ஞானம் பாடல் ரீமிக்ஸ்சுக்கு கூத்தாடுகிறார்கள் ரசிகர்கள்.

பல இடங்களில் தனது வசனக் குறும்பை இழையோட விடுகிறார் இகோர். காதல்ங்கிறது கார்ப்பரேஷன் வாட்டர் மாதிரி. வரும்போதே குடம் அண்டா குண்டாவுலெல்லாம் புடிச்சு வச்சுக்கணும்…’ என்பதாகட்டும். அதற்கப்புறம் ஒரு காட்சியில் கடையில் போய் ஒருவன், ‘பூச்சி மருந்து கொடு’ என்று கேட்டு கூல் ட்ரிங்ஸ் வாங்குவததாக காட்டி, கிடைத்த கேப்பில் சொசைட்டி அவலத்தையும் சுக்கா வறுவல் ஆக்குகிறார்.

எல்லா நேரத்திலும் நால்வரும் பேசிக் கொண்டேயிருப்பது, அல்லது கூச்சலிட்டுக் கொண்டேயிருப்பது ஒன்றே பெரும் தலைவலியாக அமைந்துவிடுகிறது. அதை மட்டும் சரி செய்திருந்தால், உங்க ‘ஹேர்ரோட’ தெம்புக்கு மலையவே கட்டி இழுத்திருக்கலாம்!

ஆகையால், மல வரல…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Single track *SAYANG KU* – Lyrics

https://www.youtube.com/watch?v=RUqPN8UoWHM

Close