இதென்னடா வனிதாவுக்கு வந்த சோதனை?

‘படத்தை கஷ்டப்பட்டு எடுக்கறது தயாரிப்பாளர். நடுவுல வந்து தியேட்டர் போட்டுக் கொடுக்கிற சில பேரு, தயாரிப்பு நிறுவனத்தை விட பெரிசாக அவங்க கம்பெனி பெயரை போட்டுக்குறாங்க. முன்னெல்லாம் நாங்க இப்படி தியேட்டர் போட்டுக் கொடுக்கிற அந்த நபரை அல்லது நிறுவனத்தை மீடியேட்டர்ஸ்னு சொல்லுவோம். இப்ப அவங்களை அப்படி சொல்ல முடியல. எல்லாருமே அந்த படத்துக்கு பணம் போட்ட முதலாளி மாதிரி நடந்துக்குறாங்க. இதை தயாரிப்பாளர் சங்கம் கவனிக்கணும்’ என்று சங்கத்தின் பொதுக்குழுவில் பொங்கினார் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி.

அவர் புலம்பி ஆறு மாசம் ஆகவில்லை. அதற்குள் ஒரு மீடியேட்டர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அண்மையில் திரைக்கு வந்த எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் படத்தின் தயாரிப்பாளர்தான் இவர். நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகள், இவரும் ஒரு நடிகை என்பதெல்லாம் இந்த வழக்கு விவகாரத்திற்கு தேவையில்லாத ஒன்று என்றாலும், பாரம்பரியமான சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர், எப்படி சுலபமாக ஏமாந்தார் என்று கவலைப்படுகிறது திரையுலகம்.

என்னவாம் பிரச்சனை? இவர் தயாரித்த அந்த படத்தை வைப்ரண்ட் நிறுவனம் சார்பில் வெளியிட்டவர் வெங்கடேஷ் ராஜா. வெளியிடுவது என்றால் வேறொன்றுமில்லை. இந்த நிறுவனத்திடம் தமிழகம் முழுக்க எத்தனை தியேட்டர்களில் படம் ஓட வேண்டுமோ, அத்தனை தியேட்டர்களுக்கும், விளம்பர செலவுக்கும் பணம் கொடுத்தால் போதும். இவரே தியேட்டர்களை கேட்டு பெற்றுத்தருவார். அதற்காக கமிஷன் தனியாக பெற்றுக் கொள்ளப்படும். அப்படிதான் இந்த படத்தையும் வெளியிட்டாராம். இதற்காக சுமார் 80 தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதாக கூறி, 30 லட்சத்தை முன்பே வாங்கியும் விட்டாராம்.

ஆனால் அவர் சொன்ன அளவுக்கு தியேட்டர்களை ஒதுக்கித்தரவில்லை. அதுமட்டுமல்ல, முக்கிய நகரங்களான திருச்சி கோவை போன்ற பகுதிகளில் ஒரு தியேட்டரில் கூட இந்த படத்தை வெளியிடவில்லையாம் அவர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் கண்ணீர் விட்டு அழுத வனிதா விஜயகுமார், ஒரு பீனிக்ஸ் பறவை போல சாம்பலாகி மீண்டும் உயிர் பிழைச்சிருக்கேன். இந்த படம்தான் என்னை காப்பற்றணும் என்று கூறியிருந்தார். அவர் நம்பிய இந்த படத்திற்கு இப்படியொரு சோதனை. தான் ஏமாற்றப்பட்டதாக காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார் வனிதா.

இன்னொரு பக்கத்து நியாயத்தை வைபிரண்ட் வெங்கடேஷ்ராஜாதான் சொல்ல வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆடே ஆடே சவுக்கியமா? அப்புறம் வெட்டுவேன், பொறுத்துக்கணும்?

வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த்தை அறிமுகப்படுத்தியவர்தான் இயக்குனர் ராதாபாரதி. அதற்கப்புறம் கிழக்கே வரும் பாட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு அப்படியே காலாற வேறு வேற...

Close