வன்மம் / விமர்சனம்

ஒரு காலத்தில் ட்ரென்ட் செட்டராக இருந்த ஃபிரண்ட் செட்டர் கதைகள் எல்லாம் ஷட்டரை மூடி வெகுகாலமாச்சு! அதை புதுப்பிக்கும் நோக்கத்துடன் வந்திருக்கும் திக் பிரண்ட்ஸ் கதைதான் வன்மம். முதலில் நட்பு, நடுவில் விரிசல், மீண்டும் நட்பு என்ற மூன்றே எபிசோடுக்குள் மொத்த படமும் அடக்கம் என்றாலும், விஜய் சேதுபதியின் வெள்ளை வேட்டி கம்பீரத்தை காண்பதற்காகவே திரும்பவும் ஒரு முறை தியேட்டருக்குள் நுழையலாம். யானைக்கேற்ற அம்பாரியாக படம் நெடுகிலும் சேதுபதியின் கர்ஜனை! அவரை உருப்படியாக காட்டிய முதல் படமும் இதுவேதான்!

‘ஓவர் ஆக்டிங்’ கிருஷ்ணாவும், விஜய் சேதுபதியும் திக் ஃபிரண்ட்ஸ். ‘ரெண்டு அருவா, ஒரே வெட்டு’ என்கிற அளவுக்கு ஏரியாவில் புழங்கி திரியும் இவர்களில் கிருஷ்ணாவுக்கு மட்டும் காதல். அந்த ஊர் பெரிய மனுஷன் மதுசூதனராவின் தங்கை சுனைனாவை லவ்வுகிறார். ஒருநாள் இருவரையும் ஒன்றாக பார்த்துவிடும் மது, செம டென்ஷன் ஆகி கிருஷ்ணாவை எச்சரிக்கிறார். அதையும் தாண்டி ஊற்றெடுக்கிறது காதல். வேறொரு நாளில் ஆத்திரமும் ஆவேசமுமாக வருகிற மது தாறுமாறாக அருவாளை சுற்ற, நடுவில் புகுந்து கிருஷ்ணாவை காப்பாற்ற வரும் விஜய்சேதுபதியின் முரட்டுப்பிடியில் சிக்கி தானே தன் கழுத்தில் அரிவாள் பட்டு செத்தே போகிறார். இதை நேரில் பார்க்கும் சாட்சிகளை மிரட்டி அனுப்பி வைக்கும் விஜய் சேதுபதி, குற்றவுணர்ச்சியுடன் ஊரில் சுற்றிவர, கொன்றவன் இவன்தான் என்று மதுவின் தொழில் முறை பார்ட்னர் மீது கோபம் கொள்கிறது பேமிலி.

ஒரு சந்தர்ப்பத்தில் ‘நீதான் அவசரப்பட்டுட்டே…’ என்று கிருஷ்ணா வார்த்தையை விட, கடும்கோபம் கொள்ளும் விஜய்சேதுபதி அன்றிலிருந்து கிருஷ்ணாவை வெறுக்கிறார். இருவரும் எதிரெதிர் திசையில் முறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அடுத்தடுத்து நிகழும் கொலைகளில் கிருஷ்ணாவின் அண்ணனே பாதிக்கப்பட, விஜய் சேதுபதிக்கு எதிராக அருவாளை எடுக்கிறார் கிருஷ்ணா. அப்புறம் என்னாச்சு என்பதுதான் க்ளைமாக்ஸ்!

தன்னால் கொல்லப்பட்டவனின் குடும்பமே தன்னிடம் அன்பு செலுத்துவதையும், அவர்கள் குடும்பத்தில் தானும் ஒருவனான பின்பு தவிக்கும் தவிப்பையும் அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துகிறார் விஜய் சேதுபதி. கிருஷ்ணாவின் வீட்டுக்கு ஃபுல் மப்பில் போய் ‘டேய்…வெளியே வாடா’ என்று போஸ் வெங்கட்டை அழைக்கிற காட்சி பிரமாதம். குறுக்கே வரும் அவரது அம்மாவை கையெடுத்து கும்பிட்டு, ‘அம்மா போயிருங்க…’ என்று அவர் கெஞ்சும்போது எழுகிற கைத்தட்டல் எமோஷனல் பஞ்ச்! அந்த புல்லட்டும் ஒரு பார்வையால் விஜய்சேதுபதி வீசுகிற கம்பீரமும், அவரது வெள்ளை வேட்டி சட்டையும் சேதுபதியின் ரசிகர்களை ‘தலைவா…’ என்று பொங்க வைக்கும்! சந்தேகமில்லை.

ச்சும்மா பரபர என்றிருக்கிறார் கிருஷ்ணா. ஆனாலும் அவரது நடிப்புக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருந்திருந்தால் இன்னும் மனசுக்கு நெருக்கமாகி வருவாரோ என்றே தோன்றுகிறது. ட்ரை பண்ணுங்க கிருஷ்ணா.

டாக்டர் இல்லாத ஊரில் ஆயாவே எம்.பி.பி.எஸ் என்பது மாதிரிதான் சுனைனா. ஒருவரும் சிக்காத பட்சத்தில் இவரை அழைப்பார்கள் போலிருக்கிறது. வதனா என்று பெயர் வைத்த இயக்குனர் ஜெயகிருஷ்ணா, அவரது வதனத்தில் கொஞ்சம் சிரிப்பை காண்பித்திருக்கலாம். ஏற்கனவே ஓட்டை சிலேட்டு. இதுல மார்க்கும் முட்டையா? சுனைனா ரொம்பவே கடுபேத்துறாங்க மை லார்ட்!

விஜய்சேதுபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்த பெரியவர் நம் ஊரு நடிகரா? பிரமாதப்படுத்துகிறார். (இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு தாத்தா போலிருப்பதுதான் ஐயே)

குமரி வட்டார பாஷையில் வந்த முந்தைய படங்களின் வரலாறு எப்படியோ? இந்த படத்தில் வசனங்கள் எதுவும் ரசிகர்களை குழப்பவில்லை. எரிச்சலுட்டவில்லை. கொலை செஞ்சதே சேதுபதிதான் என்ற விஷயம் கிருஷ்ணாவின் வாயால் வெளியே வரும். ஆனால் எப்போது என்கிற பதைபதைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி, அதை கடைசிவரை மெயின்டெயின் செய்த விதத்தில் அசரடிக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா. குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் கூடியிருக்கும் இடத்தில் மிக பொருத்தமாக அதை சொல்ல வைப்பதும் செம!

இதுபோன்ற அழகான கிராமத்து படங்களுக்கு தமன் மியூசிக் எடுபடுமா என்பதை முன்பே யோசித்திருக்கலாம். அத்துவான காட்டுல யானை டான்ஸ் ஆடிய மாதிரி, ஒன்றுக்கும் உதவவில்லை. ஒரு பாட்டும் சகிக்கவில்லை. பாலபரணியின் ஒளிப்பதிவு சிறப்பு. அதிலும் சண்டைக்காட்சிகளில் சுப்ரீம் சுந்தரின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது. வெல்டன்.

இந்த படத்தில் சந்தானமோ, சூரியோ, வடிவேலுவோ, அட்லீஸ்ட் தம்பி ராமய்யாவோ இருந்திருந்தால் கதையே வேறு. டைரக்டருக்கு என்ன நிர்பந்தமோ?

ஜென்மம் தீர்ந்தாலும் வன்மம் தீராது என்பார்கள். விஜய் சேதுபதி, வன்மம் பார்ட் டூ வையும் தொடரலாம். பட்… ஓவர் ஆக்ட்டிங் உலகநாதன் (கிருஷ்ணா) இல்லாமல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. kowshik says

    Good film

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காடு- விமர்சனம்

‘காடுவெட்டி’கள் கவனிக்க வேண்டிய படம்! காடென்றாலே வீரப்பன்தான் என்றிருந்த தமிழ்சினிமா ரசிகனின் முதுகில் தட்டி, காடு என்றால் அதற்குள் ஒரு ஊர் இருக்கும். அந்த ஊருக்கும் வன...

Close