ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் ! -போட்டுத் தாக்கும் வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக கவனத்திற்குரியதாக இருக்கிறது. அது அப்படியே கீழே-

திரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒரு காட்சியில் ரவுடிகள் அத்தனை பேரையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றும்போது, “என்னையும் ஏத்திக்கங்கய்யா.. இந்த ஏரியாவுல நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்.. நம்புங்கய்யா நானும் ரவுடிதான்யா” என்று வடிவேலு சொல்வதைப்போல தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ‘ஃபார்ம்’ ஆயிட்டு அடுத்து என்ன பண்ணுவதுன்னு முழிச்சிக்கிட்டிருக்காங்க.

நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராக ‘ஃபார்ம்’ ஆயிட்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல் காலங்களில் ஒரு வியாபாரியைப்போல யார் அதிகமா சீட்டும் நோட்டும் தருகிறார்கள் என்று கணக்குப் போட்டு அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்தார். இதைப் போலத்தான் மருத்துவர் இராமதாசும். இவர் பேசுறதக் கேட்டா (என்னத்தப் பேசுனாலாம் அந்தக் கருமாந்திரத்தையும் ஊடகங்கள் பெரிசா போடுறதுதான் கொடுமை) ஏதோ உண்மை போலவே இருக்கும். ஆனால் அதில் வன்முறைத் தூண்டலும் ஏமாற்று வேலையும்தான் மிஞ்சும் (கொஞ்சம் நடிங்க பாஸ்).

இதேபோல் நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் போன்ற மாபெரும் தலைவர்களும் தலைவர்களாக ‘ஃபார்ம்’ ஆகி தமிழக அரசியலையே கலக்கோ கலக்கு என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். (இவர்களுடைய இலக்கும் 2016இல் தமிழகத்தின் முதல்வராவதுதானாம்!)

இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களும் ஒரு தலைவராக ‘ஃபார்ம்’ ஆகி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எந்தக் கோட்பாட்டுப் புரிதலுமற்ற அரசியல்வாதியாகவே அம்பலப்பட்டு நிற்கிறார். கடந்த காலங்களில் அவரது பேச்சுக்கள் பேட்டிகளைப் பார்த்தால் சாமானியனுக்கும் இது புரியும்.

‘கத்தி’ திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த பிரச்சினை குறித்து சீமானின் கருத்து ஓர் உதவி இயக்குநரின் கருத்தைவிட மோசமாக இருக்கிறது (உதவி இயக்குநர்கள் மன்னிக்க). மாணவர் சமுதாயமும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் (நம்ம படித்துறைப் பாண்டி பழ.நெடுமாறனைத் தவிர), கத்தி திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் மீது எதிர்ப்பைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும் சூழலில் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் லைகா நிறுவனத்திற்கும் அந்த இயக்குநருக்கும் ஆதரவாகப் பேசுவதன் மூலம் மேலும் அம்பலமாகியிருக்கிறார்.

இராஜபக்சேவின் வணிக முகமூடியாக லைகா நிறுவனம் இருப்பதை தமிழ்ச் சமூகம் நிரூபித்த பிறகும் அண்ணன் சீமான் கத்தி திரைப்படத்தையோ, லைகா நிறுவனத்தையோ எதிர்க்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது அவரது விருப்பம். ஆனால் நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாசும் தமிழ்ப் பிள்ளைகள், அவர்களை நான் எதிர்க்க மாட்டேன் என்று உளறுவதன் நோக்கம் என்ன?

விஜய் தமிழ்ப் பிள்ளையாய் இருக்கட்டும், அல்லது முதலியார் பிள்ளையாகக்கூட இருக்கட்டும். அது நமக்குப் பிரச்சனையல்ல. அந்தத் தமிழ்ப் பிள்ளை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? என்பதுதான் நம் கேள்வி.

புலிகளின் இனவிடுதலைப் போரைப் பற்றியோ தமிழர்களின் மொழிப்போர் பற்றியோ தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றியோ அல்லது தமிழ்நாடு சேரி – ஊர் என்று பிரிந்து கிடப்பதைப் பற்றியெல்லாம் நடிகர் விஜய்யிடம் யாரும் எந்தக் கருத்தையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அதைப் பற்றிய எந்தக் கருமாந்திரமும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் அப்படித்தான்.

ஆனால் விஜய் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படமாவது சமூக அக்கறையுள்ள படமாக வந்துள்ளதா? அநேக படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசப் பாடல்களும்தான் மிஞ்சுகின்றன. சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல் கடக்கும் போக்குதான் விஜய் போன்ற பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு உண்டு. நாங்கள் கலைஞர்கள், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பெரிய அப்பாடக்கர்கள் மாதிரி வடக்கே போய் திக்கித் திணறி ஆங்கிலம் கலந்து பேசுவது, தமிழகத்திற்கு வந்தால் மட்டும் தமிழ்ப் பிள்ளைகள் என்று பெருமை பேசுவது இதையெல்லாம் யாரை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் வசனங்கள்.

இனப்படுகொலைக் குற்றவாளியாக இராஜபக்சேவை அறிவிக்க வலியுறுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகம் முழுக்க கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டது. கடந்த 2011 சூலை 12 அன்று சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், திரைப்படத் துறையினர் என்று அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. அனைவரும் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வெறியோடு கையெழுத்திட்டனர். நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமான திரைத் துறை கலைஞர்கள் தாமாகவே முன்வந்து கையெழுத்திட்டனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் 25-7-2011 அன்று நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது கையெழுத்து வாங்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டபோது, “அதெல்லாம் நாங்க போட முடியாதுப்பா. நாங்க சினிமாக்காரங்க.. இதிலெல்லாம் தலையிட முடியாது” என்று கூறி அவரும் மறுத்துவிட்டார்.

இது தொடர்பான பதிவு: நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்!

இப்போது சொல்லுங்கள் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தும் ஒரு படிவத்தில் கையெழுத்திட மறுத்ததன் மூலம் விஜய் இராஜபக்சேவுக்கு ஆதரவாக, அதாவது அவரை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இப்போது இராஜபக்சேவின் நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு அவர் நடித்துக் கொடுப்பது என்பது ஏதோ தெரியாமல் நடந்ததல்ல. திரை மறைவில் பல திட்டங்களை வடிவமைத்துத்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் இந்தத் தமிழ்ப் பிள்ளை.

முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு படங்களில் நடிப்பது, தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பது, தமிழ்ப் பண்பாட்டுக்கெதிராகத் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கலாச்சாரச் சீரழிவுப் பேர்வழியான விஜய் தமிழ்ப் பிள்ளை என்பதற்காக அவரைத் தூக்கி வைத்து உச்சி முகர்ந்திட முடியுமா?

அண்ணன் சீமான் நடிகர் விஜய்யை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துள்ள இயக்குநர் முருகதாசை (ரிசர்வேஷன், கரப்சன், ரெக்கமண்டேசன் இவைதான் திறமையானவர்களுக்கு எதிரானது என்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருக்குக் கூடத் தெரியாத, அரிய தத்துவத்தை தனது ஏழாம் அறிவு மூலம் சொன்னவர்தான் நம்ம முருகதாஸ்) ஆதரிக்க ஆயிரத்து இரண்டு காரணங்கள்கூட இருக்கலாம். அது பிரச்சனையல்ல. ஆனால் தமிழ்ப் பிள்ளை என்கிற ஒரு காரணத்தை மட்டும் முன்மொழிந்தால் திருகோணமலை பிள்ளையான்கூட நானும் ‘தமிழ்ப் பிள்ளை’; என்று சொல்ல மாட்டாரா? கே.பி.யும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும்கூட நாங்களும் தமிழ்ப்பிள்ளைகள்தான் என்று ஒரு திரைப்படம் எடுத்தால் அண்ணன் சீமான் அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.

பாவம் நம் மாணவர்கள் செம்பியன், மாறன், பிரபா போன்றோர்தான் அந்தத் திரைப்படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து அடி வாங்குவார்கள். தமிழ்கூறும் நல்லுலகம் அதையும் வேடிக்கை பார்க்கும்.

எல்லோருக்கும் வாழ்நாள் இலட்சியம் என்று ஒன்று இருக்கும். சிலருக்கு விஜய்யை வைத்துப் படம் எடுப்பதுதான் வாழ்நாள் இலட்சியமாக இருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

திரைப்படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்டுகளைப் போலத்தான் அண்ணன் சீமானும் ஒரு ட்விஸ்ட்டாக ‘கத்தி’, ‘புலிப் பார்வை’ படங்களுக்கு அமைந்திருக்கிறார்.

ஸ்டார்ட்… ரெடி… ஆக்ஸன்… தமிழ்ப் பிள்ளைகளே… கொஞ்சம் நடிங்க பாஸ்.

– வன்னிஅரசு.

 

2 Comments
  1. shan says

    mr karmam pudicha andhanan, dai badu nee ajitha paththi,( nallavan, vallavan, avanpoduradhu thangajatti,mama manithan,mairu mannakattinu)eludhitu, vijaya pathi mattum enda eppa parthalum endha kelatu saniyan eludshina articalayo, illa neeya romba try panni mokkaya eludhura matterso… so…ppa. mudiyala.(mr andhanan ne tamilcinemala irukum podhum ipdi than, now ur one side ajith web(new tamilcinema)sitelayum ipdi than.. dai evana pathiyum nadunilaya poduda karmam pudichavane….(idha vda koduma unda asingam puticha pose vera)

  2. sk says

    இந்த நியூஸா போட்றதுக்கு எவ்வளயு காசு வாங்குனிங்க பாஸ்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத்...

Close