வேதாளம் விமர்சனம்

அஜீத் ரசிர்களுக்காகவே ‘ஆர்டர் கொடுத்து’ செய்யப்பட்ட படம்! வர வர ‘சால்ட்’ தூக்கலாகவும், ‘பெப்பர்’ குறைச்சலாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் கட்டைய தூக்குனாலும் கை தட்டுவாங்க. கட்டை விரலை தூக்குனாலும் கை தட்டுவாங்க என்றாகிவிட்ட பின், சால்ட்டாவது பெப்பராவது? எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது அஜீத்தின் அதிமந்திர புன்னகையும், அமர்க்களமான கம்பீரமும்! அவரது அறிமுகக் காட்சிக்காகவே ஆறு மாசம் ரூம் போட்டு யோசித்திருப்பார் போலிருக்கிறது டைரக்டர் சிவா. “அண்ணே… கத்திய கீழே போட்டுட்டீங்க’’ என்று மழலை சிரிப்போடு அதை எடுத்துக் கொடுக்கும் அஜீத்தும், அவருக்கு கவுன்ட்டர் கொடுக்கும் மும்பை தாதா ராஜேந்திரனும் அந்த ஐந்து நிமிஷத்துக்கு தியேட்டரை திருவிழாவாக்கி, ரசிகர்களின் கரவொலியையே செண்டை மேளமாக்குகிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் செண்டை மேளம், வணக்கம் போடுகிற வரைக்கும் தொடர்வதுதான் அஜீத்தின் மேஜிக்!

கதை?

தங்கச்சியோடு கொல்கத்தாவுக்கு வந்திறங்கும் அஜீத், அங்கேயே டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேருகிறார். தங்கையை காலேஜில் சேர்க்க வந்திருக்கிறார் என்று நினைத்தால், அங்குதான் ட்விஸ்ட்! அவர் தேடி வந்த அண்டர்கிவுரண்ட் தாதாக்களுக்கு அடுத்தடுத்து ‘ஆயுள் கட்’ கொடுக்கிறார்! அட… இன்டர்வெல்லில் யார் அந்த தங்கச்சி என்று இன்னொரு ட்விஸ்ட் வைக்க, கேண்டீன் சமோசாவை நிமிடத்தில் காலி பண்ணிவிட்டு உள்ளே ஓடுகிறது ரசிகர்கள் கூட்டம். (வச்சது அப்படியொரு ட்விஸ்டுல்ல?) செகன்ட் ஆஃபில் இவர் யாரு? தங்கச்சி யாரு? ஏன் கொல்கத்தா வந்தார்? அஜீத் போட்டுத்தள்ளும் அவங்கள்லாம் யாரு? என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழ, எல்லாம் முடிந்து வெளியே வரும்போது அஜீத்தின் வெள்ளந்தி சிரிப்புதான் மனசெல்லாம் நிறைந்திருக்கிறது. இருந்தாலும், மிஸ்டர் ‘ரூட்டு தல’… கண்டிப்பா உங்க ரூட்டையும் மாற்றணும் தல!

வந்தமா? ஸ்டைலாக ஒரு லுக் விட்டமா? நடந்தோமா? என்கிற தன் முந்தைய பட பார்முலாவை சற்றே ஒதுக்கி வைத்திருக்கிறார் அஜீத். நடிப்பை பிழியவும் நேரம் வந்தாச்சு என்று அந்த ஏரியாவிலும் நின்று அடித்திருக்கிறார்! தங்கச்சி பார்க்கிற நேரத்தில் கெஞ்சுவதும் அவள் பார்க்காத நேரத்தில் ஒரு குரூர சிரிப்புடன் வில்லனை போட்டுத்தள்ளுவதுமாக தெறி தெறி…! அந்த இன்டர்வெல் பிளாக்கில், யானை புகுந்த சோளக்கொல்லை ஆகிவிடுகிறது ஸ்கிரீன். அந்த அதகள அஜீத்திற்கும், அப்படியொரு பைட்டை கம்போஸ் பண்ணிய பைட் மாஸ்டர் சில்வியாவுக்கும், முறையே ஒரு “யம்மாடி!”

செகண்ட் ஆஃப் அஜீத்திற்கு நிஜமாகவே பெரிய மனசுதான். “நான் கெட்டவன் இல்ல. கேடு கெட்டவன்” என்பது போன்ற வசனங்களை எந்த மாஸ் ஹீரோதான் உச்சரிக்க ஒப்புக் கொள்வார்?

தன் ரசிகர்களுக்கு அமைதியாக, அதே நேரத்தில் அழுத்தமாக ஒரு மெசேஜும் சொல்லியிருக்கிறார் அஜீத். “காதல்ங்கிற பேர்ல துரத்தாமல், பொம்பளை புள்ளைகளை படிக்க விடுங்க” என்பதுதான் அது. (கேட்பீங்களா? கேட்பீங்களா?)

தங்கச்சி லட்சுமிமேனன் இனி வரும் எத்தனை படத்தில் தங்கச்சியாக நின்று நிலைகொள்ளப் போகிறாரோ? அப்படியொரு பாந்தம் அந்த நடிப்பில். (ஆனாலும் தங்கச்சி, உங்க மேக்கப் ரொம்ப ஓவர். கம்மி பண்ணியிருக்கலாம்) கடைசிவரை தன் அண்ணன் பெரிய தாதா என்பதே தெரியாமல் வாழும் அந்த துளசிக் கொழுந்து தன் அண்ணனையே படமாக வரைந்து எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பது யூகிக்கக் கூடிய திருப்பம்தான். யூகிக்க முடியாத திருப்பம், அண்ணன் காரிலேயே அந்த தங்கச்சி வந்து மாட்டிக் கொள்வது.

பேஜுபுக்கு, ட்வூட்டர்ரு… என்று சூரி பேசும் இங்கிலீஷ், யாருக்காவது சிரிப்பை வரவழைத்தால் ஒரு கோடி பொற்காசுகளே கொடுக்கலாம் அவருக்கு. இரிட்டேட்டிங் காமெடி! எடுபடாத சூரி? வொய் டைரக்டர்?

ஸ்ருதியை அஜீத்திற்கு காதலியாக காட்டுவதா? தோழியாக காட்டுவதா? எதிரியாக காட்டுவதா? பெரும் குழப்பத்தில் தவித்திருக்கிறார் டைரக்டர் சிவா. ஆனால் அதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் ஸ்ருதியை ‘காட்டு காட்டென்று காட்டி(?)’யிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. இவரை மாதிரி வக்கீல்கள் நாலு பேர் இருந்தால், மும்பை கோர்ட்டில் தாவூத்தே தானா வந்து சரண்டர் ஆவார். போங்கப்பா…

அனிருத்தின் இசையில் ‘ஆலுமா, டோலுமா’ மட்டும் கேட்க முடிகிறது. மற்றதெல்லாம் இரைச்சல்! டைரக்டருக்கே பொறுக்க மாட்டாமல் சில பாடல்களை ஒரு பல்லவியோடு நிறைவு செய்துவிடுகிறார். தப்பித்தோம்!

உலகத்திற்கே சப்ளை செய்கிற அளவுக்கு துப்பாக்கி வைத்திருந்தாலும், முக்கியமான நேரத்தில், ஒண்டிக்கு ஒண்டி தத்துவத்திற்கு மாறிவிடும் வில்லன்களும், அவர்களின் கொடூர முகங்களும்… யப்பா, முடியல!

எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிற கோபுரமாக நிற்கிறார் அஜீத். அப்புறமென்ன? கன்னத்துல போட்டுகிட்டு கடைய மூடிட்டு கிளம்புங்கப்பா! வேதாளம்… வெல்டன்(னு) சொல்லிதானே ஆவணும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

7 Comments
 1. Rafeek says

  நான் படித்த விமர்சனங்களில் தல புராணம் பாடாத மிக நேர்மையான விமர்சனம் இது.

 2. alam says

  sooerbbbb movie thala theepavali

 3. Vivek says

  விமரிசனம் அருமை…
  தல ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

 4. James Vasanthan says

  படம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி அவ்வளவு பிரமாதமாக இல்லை. பாட்ஷா மற்றும் சரத் குமார் நடித்த ஏய் படங்களின் நகல் தான் வேதாளம் என்பது தெளிவாகிறது. இரண்டாவது பாதி மிக மிக மெதுவாக செல்கிறது. மரண மொக்கை பாஸ்

 5. Vijay Ananth says

  Flop Flop Flop

 6. shakthi.k says

  yathuku ippadi kodukuringa review .ajith carrierla oru mokka padam,ajith acting ok ,vara athumay illa padathula,
  innum yathana nalaiku than director siva ippadi tamil cinema kaduparo..sir nega thalungu industryku poiduga ongaluku athuthan correct…

  sir please review correcta koduga

 7. Shakthi says

  ஆரம்பம் படம் மூன்றே நாளில் ரூ 100 கோடி வசூல் என சில ஆர்வக் கோளாறுகள் அடித்துவிட, அடுத்த நாளே தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டது வருமான வரித்துறை. உண்மையில் அந்தப் படம் மொத்தமே ரூ 50 கோடியைக் கூடத் தாண்டவில்லை. ஏஎம் ரத்னத்தின் கடன்கள் முழுமையாக அடையாத நிலையில்தான், அடுத்த படமான என்னை அறிந்தாலுக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். அந்தப் படத்தின் வசூல் நிலவரம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வளவு ஏன், என்னை அறிந்தாலுக்கு முந்தைய படமான வீரம், அதன் தயாரிப்பாளர் விஜயா புரொடக்ஷன்ஸுக்கு மொத்தமாக ரூ 8 கோடி கடனை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அஜீத் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட தன்னிடம் விசாரிக்கவில்லையே என்றும் அதன் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி புலம்பியிருந்தார். இந்த விவரங்களையெல்லாம் நாம் இதுவரை எங்கும் எழுதியதில்லை. ஆனால் பக்குவமற்ற அஜீத் ரசிகர்கள் எழுத வைத்துவிட்டார்கள். அவர்கள் ஆத்திரத்தை மறந்து, அறிவோடு சிந்திக்க வேண்டிய நேரம் இது.

  இப்போது வெளியாகியுள்ள வேதாளம் படம் நன்றாக ஓடுகிறது.. அஜீத் கேரியரில் பெரிய வெற்றி என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்தோஷம். தாராளமாக ஜெயிக்கட்டும். ரஜினியின் தாசனாக தன்னை மாற்றிக் கொண்ட அஜீத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவும் கணிசமாக உள்ளது. ஆனால் உடனே இவர்தான் அடுத்த ரஜினி என இணையத்தில் பினாத்த ஆரம்பித்துவிடுகிறார்கள் சில ரசிகர்கள். அதற்கு இவர்களே ஒரு காரணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். தமிழ் திரையுலகில் எந்திரனுக்கு அடுத்து அதிக வசூல் குவித்த படம் என்று வேதாளத்தைக் குறிப்பிட்டு, பொய்யான புள்ளி விவரங்களை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.

  இது தெரியாமல் நடக்கும் தவறு அல்ல.. தப்பு. தெரிந்தே செய்யும் தப்பு. அதை அனுமதிக்கக் கூடாது, முடியாது!

  குறைந்தபட்ச அடிப்படை அறிவு கூட இல்லாமல் வேதாளத்தை எந்திரனோடு ஒப்பிடுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்.

  முதலில் தியேட்டர் கணக்காவது தெரியுமா இவர்களுக்கு?

  எந்திரன் வெளியானது 2885 அரங்குகளில். தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகள். முதல் மூன்று தினங்களில் 720 அரங்குகள். தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் மொத்த வசூல் ரூ 23 கோடி (செபியில் சமர்ப்பிக்கப்பட்ட வசூல் விபரம் இது.) ஆந்திராவில் மொத்தம் ரூ 50 கோடி. உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ 33.8 கோடி.

  ஆனால் இந்த புள்ளி விவரங்களெல்லாம் எவருக்கும் நினைவில் இல்லை போலிருக்கிறது. அஜீத்தின் வேதாளம் ரூ 15.4 கோடியை வசூலித்து எந்திரனைத் தாண்டியது என்று பொய்யாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வேதாளம் வெளியானதே மொத்தம் 850 அரங்குகள். தமிழகத்தில் இல்லை, உலகளவில்.

  2885 அரங்குகளில் வெளியான எந்திரன் வசூலை – அன்றைக்கு இருந்த அதே டிக்கெட் விலை – வெறும் 850 அரங்குகளில் வெளியான வேதாளம் முறியடிக்க வாய்ப்பிருக்கிறதா.. அதுவும் பேய் மழையால் ரசிகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த கடந்த 8 நாட்களில்?

  உண்மையில் வேதாளத்தின் வசூல் நிலவரம் என்ன?

  படம் வெளியாகி 8 நாட்களில் இந்தப் படம் தமிழ் நாட்டில் ரூ 21 கோடியைத் தாண்டவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் சொல்ல முடியும். மற்ற மாநிலங்கள், நாடுகள் அனைத்திலும் சேர்த்து ரூ 47 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இனி மிஞ்சிப் போனால் 8 முதல் 10 கோடி தேற வாய்ப்புள்ளது. இதுதான் வேதாளம் பாக்ஸ் ஆபீஸ். 99 சதவீதம் அதிகாரப்பூர்வ கணக்கு இது. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் அஜீத்தான் என்பது கூடுதல் தகவல். ஏஎம் ரத்தினத்திடம் இன்று போனில் விசாரித்தபோது, பெரிய கும்பிடு போட்டு, ‘எல்லாம் பொய்த் தகவல் என்று மட்டும் போடுங்கள்’ என்று வேண்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரே தியேட்டர்! ஒரே நாளில் 14 லட்சம் வசூல்? தமிழ்சினிமா வரலாற்றில் வேதாளம் நிகழ்த்திய சாதனை!

இந்த அட்வான்ஸ் புக்கிங் வந்தாலும் வந்தது! நாளைய பசிக்கு இன்றைக்கே பொட்டலம் ரெடி! அதுவும் நாளைக்கும் சூடாக இருப்பதைப் போல!! அப்படிதான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள...

Close