வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்

சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான்.

கதை? துண்டு சீட்டு கூட தேவையில்ல. அதுக்கும் சின்னதா….

ஸ்டார் காஸ்ட்டிங்? சந்தானம், வடிவேலு, தேவையில்ல. அதுக்கும் சின்னதா…

பைட் மாஸ்டர், கேமிராமேன், டெக்னீஷியன்ஸ்? ஸ்டன்ட் சிவா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி தேவையில்ல. அதுக்கும் சின்னதா…

நடிப்பு? அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் தேவையில்ல. அதுக்கும் சின்னதா…

ஆனால் அந்த பெரிய பெரிய அப்பாடக்கர்கள் கூட கொடுக்காத, கலகலப்பை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை ஒரு படம் கொடுக்கும் என்றால், இப்படியொன்றை நிகழ்த்திக் காட்டிய இயக்குனர் எழிலின் தலையில் கூடையாய் கூடையாய் மல்லிகை மொட்டுகளை கொட்டலாம்யா!

படத்தில் ஹீரோ என்று ஒருவர் இருப்பதால், கதை அவர்மேல்தான் ஆரம்பிக்க வேண்டும் இல்லையா? ஆரம்பிக்கிறது. அரசியல்வாதிகள் நடத்தி வைக்கும் பிரமாண்ட கல்யாணத்திற்கு ஆள் சேர்க்கும் விஷ்ணுவிஷால், அந்த ஏரியா பிரபலமும் நாட்டியம் மற்றும் ஐட்டமுமான புஷ்பாவிடம் கோர்த்துவிட்டுவிடுகிறார் சூரியை. அரைப்பவுன் மோதிரத்திற்கு ஆசைப்பட்டு சொந்த முறைப்பெண்ணையும் இழந்து, போகிற இடத்திலெல்லாம் “நீ புஷ்பா புருஷன்தானே…” என்ற புகழுரைகளையும் தாங்கி புழுவாக நெளிகிறார் சூரி. இந்தப்பக்கம் தன் காதலியின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசையை நிறைவேற்றி வைக்க, அவள் குடும்பத்திடம் வாங்கிய பத்து லட்சத்தை எம்.எல்.விடம் கொடுக்கிறார் விஷ்ணு. காலக்கொடுமை… ஒரு விபத்தில் அடிபட்டு பத்து வயசு குழந்தை போலாகிவிடுகிறார் எம்.எல்.ஏ ரோபோ சங்கர்.

இவர் தேறிவந்தால்தான் பத்து லட்சம் கிடைக்கும். புஷ்பாவிடமிருந்து விடுதலை கிடைக்கும். மந்திரி ஒளித்து வைத்திருக்கும் 500 கோடி கிடைக்கும். விஷ்ணு, சூரி, ரவிமரியா மூவரும் எம்.எல்.ஏவை துரத்த, எம்.எல்.ஏ நார்மல் ஆனாரா? விஷ்ணு தன் காதலி நிக்கி கல்ராணி மனசுக்குள் புகுந்தாரா? ஐயோ… அதுக்குள்ள படத்தை முடிச்சுட்டாங்களே என்ற ஏக்கத்தோடு வெளியே வர வைக்கிறார்கள். (பக்கத்து சீட் ஆசாமி சட்டையிலும் பன்னீர் தெளிக்கிற அளவுக்கு சிரித்து தொலைவீர்கள் என்பதால், கர்சீப், டவல், துண்டு சகிதம் தியேட்டருக்கு போவது உத்தமம் ரசிகர்களே…)

சூரியின் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியெல்லாம் செம… செம்ம! “ஐய்யோ… காஜா எடுக்கிற பயலுக்கெல்லாம் புஸ்பா நம்பரு தெரியுது. கட்டுன புருசன் எனக்கு தெரியலையே?” என்று தலையிலடித்துக் கொள்கிறார். சூரி வரும் காட்சிகளிலெல்லாம் புஷ்பாவின் பெயரும் என்ட்ரியாகி, தியேட்டரையே புரட்டி புரட்டிப் போடுகிறது. ஒரு படா படா சந்தோஷம்… அந்த புஸ்பா, ஹீரோயினை விடவும் அழகாக இருக்கிறார் என்பதுதான். கொலவெறியில் சூரியை தாக்க வரும் வில்லன் கூட, நீ புஷ்பா புருஷன்தானே. அதுக்காக உன்னை மன்னிச்சு விடுறேன் என்றால் அவர் நிலைமை எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட நேரங்களில் சூரி கொடுக்கும் விதவிதமான ரீயாக்ஷ்களெல்லாம் சான்சே இல்லை. கதிகலங்குகிறது வயிறு.

அதற்கப்புறம் ரோபோ சங்கர். இந்த ஜிம் பாடியை வைத்துக் கொண்டு எதுக்கு இவருக்கு காமெடியெல்லாம் என்று முன்பு எப்போதாவது யோசித்திருப்போம் அல்லவா? கூசாமல் அந்த எண்ணத்தை அழித்து கடாசிவிட வேண்டியதுதான். முன்னால் ஒரு பஞ்சுமிட்டாய்காரன் போக, இவர் பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்பட்டு அவன் பின்னாலேயே ஓட, எம்.எல்.ஏதான் ஏதோவொரு போராட்டத்துக்கு போறார் போல என்று அவர் பின்னாலேயே ஒரு கூட்டம் போக… யப்பா. எப்படிய்யா யோசிக்கிறீங்க? இந்த சிரிப்பை கூட அடக்கிவிடலாம். மனுஷன் காலையில ஆறு மணி இருக்கும் என்று ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறாரல்லவா? சுமார் 20 நிமிஷம் நிறுத்தவே முடியாத சிரிப்பு. போதும்… வருஷத்துக்கு இப்படி ஒரு சீன் ஒரு படத்தில் வந்தால் கூட அதை ரசிக்கும் எவருக்கும் நெஞ்சுவலி அண்டாது.

இது நமக்கான கிரவுண்ட் இல்லை என்று புரிந்து புத்திசாலித்தனமாக இவ்விருவருக்கும் வழிவிட்டு ஒதுங்கிய விஷ்ணு விஷாலுக்கு அந்த நல்ல மனசுக்காகவே ஒரு பாராட்டை தெரிவித்துவிடலாம். பட்… இவருக்கும் நிக்கி கல்ராணிக்குமான கெமிஸ்ட்ரி, முதலில் கடுப்பாகி பின் லவ்வாகி… ரசிகர்களுக்கும் இனிப்பாகிறது.

நிக்கி கல்ராணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர். இவர் எப்போது பூ ஒன்று புயலானதாவது? பஞ்சு மிட்டாயை காக்கி பைக்குள் அடக்கிய மாதிரி சும்மா ஜிவ்…. அவ்வளவே!

எல்லா படத்திலும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு வில்லத்தனம் பண்ணும் ரவிமரியா, இந்த படத்திலும் அதைதான் செய்கிறார். ஆனால் இந்த படத்தில் வேறு மாதிரியாக பிரசன்ட்டேஷன். வேறு மாதிரியான நடிப்பு. டயலாக் டெலிவரி. சிரித்து சிரித்தே கதற விடுகிறார். வெல்டன் ரவி…

ஆச்சர்யம் இன்னொன்று… மனசுக்கு பிடித்த டோனில் பளிச்சென்ற ஒளிப்பதிவும், இசை இமானா இருக்குமோ என்று யோசித்து ரசிக்கிற அளவுக்கு ட்யூன் போட்ட சத்யாவும்தான்.

விஜய், அஜீத், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களையெல்லாம் வைத்து படம் இயக்கிய எழில், ஒரு அப்கமிங் விஷ்ணுவிஷாலை வைத்துக் கொண்டு அடித்திருக்கும் இந்த ஹிட், சினிமாவுக்கே புது ரத்தம் பாய்ச்சக் கூடும்.

இந்த வெள்ளைக்காரன் சிரிப்புன்னு வந்துட்டா கொள்ளைக்காரன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    Sub-par execution by Ezhil. இது சுந்தர்.சி ஆடியிருக்க வேண்டிய களம்.

    Saving grace is சூரி, இரண்டாம் பாதியில் ரோபோவின் பகுதி & lastly சூரியின் வார்த்தையில் நிக்கிற கல்யாணி.

    ஹீரோதான் தயாரிப்பாளர்! காவல்துறை தலைவரை வைத்து வரும் நகைச்சுவையை அவர் அப்பா கண்டுகளிப்பார் என நம்புவோம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐயய்யோ நான் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகன் இல்லீங்க! பதறிய மிர்ச்சி சிவா

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி...

Close