வெண்ணிலா வீடு விமர்சனம்

‘என் தங்கம் என் உரிமை’ என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில் ‘போங்கடா… நீங்களும் உங்க தங்கமும்’ என்று உரக்க சொல்கிறது வெண்ணிலா வீடு. கோடம்பாக்கம் எங்கிலும் நகைச்சுவை படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ‘இதுதான்டா ட்ரென்ட்’ என்கிறார்கள் ஜனங்களும். இந்த நேரத்தில் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு படம். தியேட்டர் நிரம்புமா? ட்ரென்ட் உடையுமா? ஏகப்பட்ட சந்தேகங்களோடு வெளியே வருகிறோம். இந்த படத்தின் ரெண்டாவது வார போஸ்டருக்கு வழியிருந்தால், மக்களே… நீங்கள்லாம் தங்கம்தான்!

நடுத்தர வர்க்கத்துக்கு நகை நட்டு எதுக்கு? என்பது ஒரு அட்வைஸ். பக்கத்துவீட்டுல கடன் வாங்கி நகை போட வேண்டாம் என்பது இன்னொரு அட்வைஸ். அளவோடு பழகுங்க. அன்போடு வாழுங்க என்பது மூன்றாவது அட்வைஸ். இது எல்லாவற்றையும் வெட்டி லெக்சர் அடிக்காமல் கதைக்குள் சம்பவங்களாக வைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் மிர்ச்சி செந்தில் விஜயலட்சுமி தம்பதிக்கு அழகான பாப்பா. பெயர் வெண்ணிலா. (வெண்ணிலா வீடு, டைட்டில் வந்துருச்சா?) பக்கத்து வீட்டுக்கு குடி வரும் பணக்கார வீட்டு பெண் ஸ்ரீநிதா. விஜிக்கும் ஸ்ரீநிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அதுவரைக்கும் அடாவடி பெண்ணாக இருந்த ஸ்ரீநிதா, அடக்கம் ஒடுக்கமான பெண்ணாக, மாறுகிறார். வீட்டிலேயே சமைக்கிற அளவுக்கு தேறிவிடுகிறார். எல்லாம் விஜயலட்சுமியின் கைங்கர்யம். அந்த நேரத்தில்தான் செந்தில் வேலை செய்யும் முதலாளி வீட்டில் விசேஷம். நகையில்லே. நான் வரலே என்கிறார் விஜி. தயக்கத்தை அறிகிற ஸ்ரீ நிதா தனது நகையை போட்டுக் கொள்ள சொல்லி வற்புறுத்தி அனுப்ப, சந்தோஷமாக கிளம்புகிறது குடும்பம். வருகிற வழியில்தான் அந்த விபரீதம். நகையை திட்டமிட்டு அடிக்கிறது ஒரு கும்பல்.

அலறி அடித்துக் கொண்டு வீடு வந்து சேர்கிற இவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கிறார் ஸ்ரீநிதாவின் அப்பா. ஸ்ரீநிதாவும் அப்பா சொல்வதை நம்பி இவர்களை சந்தேகப்பட, ஊரிலிருக்கிற நிலத்தை விற்றாவது பணத்தை கொடுத்துவிடலாம் என்று கிளம்புகிறார் செந்தில். திரும்பி வந்தால்? அட.. போங்கப்பா. பாசிட்டிவாக முடிய வேண்டிய கதையில் வலிய திணிக்கப்பட்ட அழுகாச்சி காவியம், துருத்திக் கொண்டு நிற்கிறது. ஆரத்தி எடுக்கிறேன்னு மூக்கு முனையில தீ வைக்கிறார் வெற்றி மகாலிங்கம்.

மிர்ச்சி செந்தில் ரொம்ப கலகலப்பான ஆள் என்பார்கள். ஆனால் ஒரு படத்தில் கூட அதை வெளிக்காட்ட விடுவதில்லை எந்த இயக்குனரும். இந்த படத்திலும் செந்திலை பழனி பஞ்சாமிர்தம் ஆக்குகிறார்கள். அவர் நகையை பறிகொடுத்துவிட்டு தவிப்பது ஓ.கே. அதற்கு முன்பு வருகிற ஒரு மணி நேர கதையில் செந்திலை வைத்துக் கொண்டு திருவிழாவே நடத்தியிருக்கலாம் பாஸு. நல்லவேளையாக விஜயலட்சுமியை சைட் அடிக்க திரியும் அந்த மூவரும் பண்ணுகிற அலப்பறைகள் ஆறுதல். அதிலும் பாண்டி தன் அப்பாவை துவைத்தெடுத்து கையெழுத்துப் போட வைப்பது சுவாரஸ்யமான காட்சி.

செந்தில் தனக்கு கொடுத்த கேரக்டரை சேதாரமில்லாமல் செய்து முடிக்கிறார். அந்த கடைசி ஃபைட்டில் அழுகையும் ஆத்திரமுமாக அவர் கொடுக்கிற ஒவ்வொரு அடியும், இயலாத மக்களின் இதயத்துடிப்பு.

ஒரு கிராமத்து நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நச்சென ஃபிட் ஆகிறார் விஜயலட்சுமி. சிட்டி விஜயலட்சுமியை விட அந்த வில்லேஜ் லெட்சுமி பிரமாதம். தன்னை சுற்றி சுற்றி வரும் அந்த மூவரையும் அட்லீஸ்ட் ஒரு முறைப்பாவது முறைப்பாரா என்றால், பின்தொடருங்க பிரச்சனைஸ் என்று கண்ணாலேயே அழைக்கிறார். கடைசியில் மாமன்தான் எனக்கு உசுரு என்று கூறி மூவரையும் மூக்கு சிந்த விடுகிறார். ஒரு நல்ல குடும்ப பெண்ணுக்கு இப்படியாகிருச்சே என்கிற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் எழுவதற்கு விஜயலட்சுமியின் வில்லேஜ் முகம் சர்வ பொருத்தம்.

தங்கத்தின் மீது தாங்கொணா கடுப்பில் இருக்கிறார் இயக்குனர் என்பது மட்டும் பல காட்சிகளில் பளிச்சென தெரிகிறது. அது நல்ல விஷயமும் கூட. ஒரு நாளிதழில் வெளிவந்த நகைக்கடை விளம்பரத்தை மிதித்தபடி ஹீரோ படியிறங்குவது, கடைசியில் கழுத்து நிறைய கிடக்கும் நகையை கொண்டே வில்லனை நெறிப்பது என்று படத்தின் மையக்கருத்தை சொல்லாமல் சொல்கிறது குறியீடுகள். அப்படியே ரியல் எஸ்டேட் அநியாயத்தையும் சமுதாய உணர்வோடு பிளக்கிறார் வெற்றி மகாலிங்கம். வெல்!

ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து கோவிலான் போல ஒரு ஆள் இருப்பார். வாயை திறந்தால் வண்டி வண்டியாக நக்கல். உன் தாலிய அறுத்துப்புடுவேன் என்று மனைவியை விரட்டுகிற திமிர் என்று அப்படியே பிரதிபலிக்கிறார் அவரும்.

இசை தன்ராஜ் மாணிக்கம் என்ற புதியவர். பாடல்கள் பரவாயில்லை. கண்ணனின் ஒளிப்பதிவில் அந்த வில்லேஜ் காட்சிகள் அழகு.

இளைஞர்கள் இதைதான் பார்க்கிறாங்க என்று சேறு மிதிப்பது ஒரு வகை. இளைஞர்களே… இதையும் பாருங்க என்று ட்யூஷன் எடுப்பது இன்னொரு வகை.

அழுகையை குறைத்து நம்பிக்கையை ஊட்டியிருந்தால் வெண்ணிலா வீட்டில் வெளிச்சம் அடித்திருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிளே பாய் இதழுக்கு ‘ அம்மண ’ போஸ்? கேரள நடிகை முயற்சி! சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த பிளே-பாய் போட்டோகிராபர்!

இளைஞர்களின் நாடி நரம்புகளையெல்லாம் சுண்டிவிட்டு போகக்கூடிய சர்வதேச காய கல்பம் ஒன்று உண்டென்றால் அது ‘ப்ளே பாய்’ இதழ்தான்! கடந்த பல்லாண்டுகளாக ஏறுமுகத்திலிருக்கும் இந்த இதழின் அட்டை...

Close