‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’

‘படம் எடுக்கறது பெரிசு இல்ல. அதை ரிலீஸ் பண்றீங்க பாரு, அங்க ஒடியும் முதுகெலும்பு!’ ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அச்சுறுத்தும் அட்வைஸ் என்றால் அது இதுதான். ஏறத்தாழ 300 படங்கள் சீண்ட ஆளில்லாமல் கிடக்கிறது இங்கே. ‘ஏரியா என்ன வெல சொல்றீங்க?’ என்கிற டயலாக்கை கேட்டால், லாட்டரி விழுந்த மாதிரி இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படிப்பட்ட சோமாலியா சூழ்நிலையில், ஒரு படத்தை பார்த்துவிட்டு ‘உலகம் முழுக்க நாங்களே ரிலீஸ் பண்றோம்’ என்று ஒரு நிறுவனம் சொன்னால் தயாரிப்பாளரை தண்ணி தெளிச்சு எழுப்ப வேண்டிய அளவுக்கு மயக்கம் வருமா, வராதா? அப்படி தயாரிப்பாளரை திக்குமுக்காட வைத்த நிறுவனம்தான் வைபிரண்ட்! (பணத்தை எண்ணி ‘வை’ங்க ஃ‘பிரண்டு’ என்பதைதான் வை பிரண்ட் என்று சுருக்கியிருப்பார்களோ?) சுமார் இருபது படங்களை பார்த்துவிட்டு கடைசியாக இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்த படம்தான் வெண்ணிலா வீடு. இந்த செய்தியின் தலைப்புக்கு அர்த்தம் இப்ப புரியுதா?

மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் விஜயலட்சுமி. (டாட்டர் ஆஃப் அகத்தியன்) படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றி மகாலிங்கம். ஒரு நல்ல நிறுவனம் படத்தை வெளியிடணும்னுதான் நாங்களும் காத்திட்டு இருந்தோம் என்கிறார் இவர்.

படம் ஆரம்பிக்கும் போது பேச்சுலராக இருந்த செந்தில், இப்போது குடும்பஸ்தர் ஆகிவிட்டார். மனைவியோடு வந்து அவர் பார்த்த படம் இதுதானாம். ‘அருமையான குடும்ப கதையில் நடிச்சிருக்கீங்க, பாராட்டுகள்’ என்று மனைவியிடமிருந்து பாராட்டுகளையும் வாங்கியிருக்கிறார் செந்தில். முன்னொரு காலத்தில் விஜயலட்சுமி நடிச்ச படமெல்லாம் ஹிட். ரொம்ப ராசியான நடிகை என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் குடுகுடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அதை அவரே கெடுத்துக் கொண்டதும் உண்டு. வெகு நாளைக்கு பிறகு, அந்த குடுகுடுப்பை மீண்டும் ஒலிக்கப் போகிறது. ஏனென்றால், படமும் அப்படி. படத்தில் நடித்திருக்கும் விஜயலட்சுமியும் அப்படி என்கிறார்கள் படக்குழுவினர் கோரஸாக.

நடுத்தர வர்க்கத்தின் கதைதான் இது என்கிற வெற்றி மகாலிங்கம், பட்ஜெட் என்னவோ பணக்கார வீட்டு கதையை எடுத்தாற் போலாகிவிட்டது என்று சந்தடி சாக்கில் இது பெரிய படம் என்கிற வாதத்தையும் நச்சென்று பதிய வைக்கிறார் டைரக்டர். ஒரு பிரமோஷன் பாடலை எடுத்தார்களாம் இந்த படத்திற்காக. அதில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தார்கள். யூ ட்யூபில் பத்து லட்சம் பேருக்கு மேல் இதை கண்டு களித்திருக்கிறார்கள். இப்போது இதை படத்திலும் இணைத்திருக்கிறார்கள். அதனால் மேற்படி மும்மூர்த்திகளின் ரசிகர்களும் தியேட்டர்களை நிரப்புவார்கள் என்பது நிச்சயம் என்று நம்புகிறது வெண்ணிலா வீடு.

வெண்ணிலா வீடு வசூல் வீடாக அமைய வாழ்த்துவோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக...

Close