இப்பதான் புரியுது கஷ்டம்! நடிகர் விக்னேஷ் பேச்சால் பரபரப்பு
வெகு காலம் கழித்து நடிகர் விக்னேஷை ஒரு விழாவில் பார்க்க முடிந்தது. பந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் அவர் எப்படி பந்து போல பந்தாடப்பட்டார் என்பதை வியர்வை வழிய வழிய அவர் சொல்லி முடித்தபோது படக்குழுவினரின் தொண்டைக்குழிக்குள் ஒரு பந்து உருண்டோடியிருந்தால் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் விக்னேஷின் யதார்த்தமான பேச்சுக்கு ஒரு அப்ளாஸ்.
அறிமுக நாயகன் பிரதாப், அன்ஷிபா ஜோடியாக நடிக்கும் படம்தான் பந்து. ஜெயபால கிருஷ்ணன் இயக்குகிறார். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஹீரோ கடத்தப்படுகிறார். ஏன்? அதற்கப்புறம் நடைபெறுவது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. படத்தின் ஹீரோ பிரதாப், நிஜத்தில் ஒரு பேங்க் ஆபிசர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விக்னேஷ் தன் உரையில் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ‘பிரதாப்… உங்க பேங்க் வேலையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்றாதீங்க. சினிமாவில் ஜெயிச்சு உங்க கையில் நாலைஞ்சு படங்கள் வந்த பிறகு விடலாம். அதுக்கு முன்னாடி சினிமாவை நம்பி ஏதாவது முடிவெடுத்தீங்க, அவ்ளோதான். குளோஸ்’ என்றார் திகில் திகிலாக!
நான் சினிமாவில் நடிக்கும்போது எனக்கு பெரிய ஓட்டலில் ரூம் போடுவாங்க. பிளைட்ல அனுப்பி வைப்பாங்க. உயர் ரக கார்லதான் போய் வருவேன். எல்லாம் தயாரிப்பாளரோட காசு பணம். அதற்கப்புறம் நான் ஒரு படம் தயாரிக்கும் போதுதான் அந்த வலியை உணர்ந்தேன். ஹீரோவுக்கு ஒரு ஓட்டல் போடறதுன்னா அதுக்கு தயாரிப்பாளர் எதை அடகு வச்சு பணம் புரட்டுறாரு என்பதும், ஹீரோ சவுரியமா டிராவல் பண்ணனும்னா அதுக்கு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்படுறார் என்பதையும் என் அனுபவத்துல புரிஞ்சுகிட்டேன். அதனால் ஒரு படத்திற்கு யார் முக்கியமோ, இல்லையோ தயாரிப்பாளர் முக்கியம். அப்படி கஷ்டப்பட்டு பொண்டாட்டி தாலியை அடகு வச்சு எடுக்கப்படுற படங்களை வாங்க ஆள் இருக்கான்னு கேட்டா, ஒருத்தரும் இல்ல. ஆடியோ பிசினஸ் இல்ல. சேட்டிலைட் வாங்க ஆள் இல்லை. தியேட்டர் கிடைக்காது. இவ்வளவையும் தாங்கிதான் இங்க ஒவ்வொருத்தரும் படம் எடுத்துகிட்டு இருக்காங்க. அதனால் வணங்கப்பட வேண்டிய தெய்வமே தயாரிப்பாளர்கள்தான் என்றார்.
சரி… பந்து படத்தின் பாடல்கள் எப்படி? பத்மாவதி என்கிற பெண் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்கறதுக்கே போறாடுற இந்த நாட்டுல, எனக்கு 100 சதவீத வாய்ப்பளித்த இசையமைப்பாளர் நந்தாவுக்கு நன்றி என்றார் பத்மா. பிரபல பாடகர் நரேஷ் ஐயர், பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் மகள் ஷரண்யா ஸ்ரீநிவாஸ் ஆகியோரையும் தன் முயற்சியால் அழைத்து பாட வைத்தாராம் பத்மா. நந்தாவும் நல்லபடியாகவே கவர்ந்தார்.