ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் எனக்கும் அக்கறை உண்டு! விஜய் ஆன்டனி விளக்கம்
பிச்சைக்காரன் படத்தில் மருத்துவர்களை இழிவுபடுத்துவது போல ஒரு பாடல் இடம் பெற்றது. இதை கண்டித்து மருத்துவர்கள் பலர் தனிப்பட்ட முறையிலும் அமைப்பு சார்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நம்மிடம் பேசிய அப்பாடலாசிரியர் லோகன், எழுதியது சரிதான். மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார். ஆனால் நேற்று மாலை அவசரம் அவசரமாக ஒரு அறிக்கை வெளியிட்ட விஜய் ஆன்ட்டனி, அதில் சரியான விளக்கத்தை அளித்ததுடன், அந்த வரிகளை மாற்றிவிட்டதாகவும் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். (ஆமாம்… இந்த படத்துக்கு சசி சசின்னு ஒரு டைரக்டர் இருக்கிறாரே, அவர் இதுபற்றியெல்லாம் பேச மாட்டாரா என்ன?) அந்த விளக்கம் இங்கே-
“‘பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு’ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை ‘பிச்சைக்காரன்’ படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.
அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுதவில்லை. இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான்.
ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைதான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான ‘சலீம்’-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், ‘கோட்டா’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘காசு கொடுத்து’ என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.