ஹாட் ட்ரிக் அடிச்சுருவாரு போலிருக்கே? விஜய் ஆன்ட்டினியால் அதிரும் ஹீரோக்கள்

சொந்த விரலையே சுமக்க முடியாத ஹீரோக்களெல்லாம், பெரிய குண்டாந்தடியுடன் நூறு பேரை ஓட ஓட விரட்டுகிற ஆக்ஷன் காட்சிகளையெல்லாம், அடி வயிற்றில் திகிலோடு கவனிக்கிறார்கள் ரசிகர்கள். விரட்டுற ஹீரோ விழுந்து கிழுந்து விலா எலும்பை புட்டுகிட்டா என்னாகுறது என்கிற அச்சம்தான் காரணம்.

இப்படி தனக்கு வருவதை விட்டுவிட்டு வராததை முயற்சி பண்ணும் ஹீரோக்களுக்கு மத்தியில், தனக்கேற்றார் போலவே கதையை தயார் செய்து கொண்டு அதை சிறப்பாக செய்து வருகிறார் விஜய் ஆன்ட்டனி. முந்தைய இரு படங்களும் ஹிட் என்று ஆன பின்பு, கையில் அருவாளையும், பஞ்ச் டயலாக்குகளையும் கொடுத்து குழி பறிக்கவென்றே ஒரு கூட்டம் அலையுமே? அவர்களை மெனக்கெட்டு அடையாளம் கண்டு கொள்கிற விஜய் ஆன்ட்டனி, அப்படிப்பட்டவர்களை உள்ளே சேர்ப்பதேயில்லை.

இப்போதும் கதையை நம்பியே மூன்றாவது படத்தை தர வந்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. இந்தியா பாகிஸ்தான் திரைப்படம்தான் அது. யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹரிடம் உதவி இயக்குனராக இருந்தவரான ஆனந்த் என்பவர் இயக்கியிருக்கும் படம் இது.

பத்தி வியாபாரி வருவதற்குள் அதன் வாசனை வந்து கதவை தட்டுவது மாதிரி, இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சியை முன்பே ரசித்த திரையுலக பிரபலங்களில் பலர், ‘இந்தாளு ஹாட் ட்ரிக் அடிச்சுருவாரு போலிருக்கே?’ என்ற காய்ச்சலில் இருக்கிறார்களாம்.

காதலர்களுக்கு நடுவே ஏற்படும் ஈகோ, மோதல் முட்டல்களுடன், ஒரு ஸ்பெஷலான திருப்பமும் இருக்கிறதாம் படத்தில். அதை விழுந்து விழுந்து சிரிப்பது மாதிரி எடுத்திருக்கிறாராம் ஆனந்த்.

கதாநாயகியாக சுஷ்மா அறிமுகம் ஆகிறார்.

என்ன சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி?

“என்னுடைய முந்தைய படங்களான ‘நான்’ ‘சலீம்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்கும், அந்த படங்களில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே பிரபலமானதற்கும் அந்த படங்களின் கதை அமைப்பே மூலக் காரணம்.

‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் கதையும் அந்த வகையை சேர்ந்ததுதான். என்னிடம் கீ போர்டு வாசித்த தீனா தேவராஜ் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். உக்கிரமான கோடையில் , சாமரம் வீசும் வசந்தமாக இருக்கும் ‘இந்தியா பாகிஸ்தான்’. காதலர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்துள்ளார். எங்கேயும் எப்போதும்...

Close