இன்னொரு பாபாவா விஜய்யின் பைரவா?
சாகா வரம் பெற்ற சாமியார்களாக இருந்தாலும், வேகுற குக்கரில் வெந்தால்தான் விமோசனம்! இரண்டாயிரம் வருஷமாக இமயமலை குகையில் உயிரோடு இருக்கும் (?) பாபாஜியை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு சூப்பர் ஸ்டார் தேவைப்பட்டார். இத்தனைக்கும் இந்த பாபாஜிக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதுவும் சிதம்பரம் அருகிலிருக்கும் பரங்கிப்பேட்டை என்ற ஊரில். அந்தப்படம் வெளிவருவதற்கு முன், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பரங்கிப் பேட்டைக்கு விசிட் அடித்து பாபாவின் அருளைப் பெற்றார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் பாபாவின் அருள், ஐயோ பாவம்… அந்த படத்திற்கு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம்தான்.
ரஜினி படங்களிலேயே துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடவிட்ட படம் அதுதான். அதற்கெல்லாம் கவலைப்படவில்லை ரஜினி. பாபா என்கிற மகா முனிவரை தமிழ்நாட்டுக்கு தெரிய வைக்க நினைத்தார். அதை செவ்வனே செய்தார். இப்போதும் கூட, ராகவேந்திரர் கோவில்களில் எல்லாம் ரஜினி ரசிகர்களில் பாதி பேராவது தரிசன க்யூவில் நிற்பார்கள். அப்படி தன்னால் முடிந்தளவுக்கு சாமியார்களையும், அவதார புருஷர்களையும் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் ரஜினி.
நிற்க. விஜய்யின் பைரவா தலைப்புக்கு வருவோம். இந்து மத கடவுள்களிலேயே மிக மிக விசேஷமானவர் இந்த பைரவர்தான். நாய் ஒன்றை வாகனமாக கொண்டிருக்கும் பைரவர், உயிர் காக்கும் கால பைரவராகவும் கூட எழுந்தருளியிருக்கிறார். கன்னியாக்குமரியில் துவங்கி, காஷ்மீர் வரைக்கும் பல்லாயிரக்கணக்கான பைரவர் சன்னதிகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தனித்தனி சக்தி என்று நம்புகிறார்கள் பைரவர் பக்தர்கள்.
பெரிய பெரிய கோவில்களில் இப்போதும் ஒரு சடங்கு இருக்கிறது. கோவில் பூட்டப்படுவதற்கு முன் சாவியை இவர் சன்னதியில் வைத்து வழிபட்ட பின்புதான் பூட்டிவிட்டு கிளம்புவார்களாம். திருடர்களை அவர் பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை.
இப்படியொரு கடவுளின் பெயரை தன் படத்திற்கு விஜய் வைத்திருக்கிறார் என்றால், இந்த கடவுளின் தல வரலாறுக்கும், இந்த கதைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒரு சக்தி வாய்ந்த கடவுளின் பெயரை படங்களுக்கு வைப்பதற்கு முன் ஆயிரம் யோசனைகள் செய்வது சினிமாக்காரர்களின் வழக்கம். அதற்கான உத்தரவு பெறாமல் அதை செய்யவும் மாட்டார்கள். பைரவா விஷயத்தில் என்ன நடந்தது என்பதை பரதன் விளக்குவாரா?
To listen audio click below :-