காம்பினேஷனும், காபி டிக்காஷனும்!

‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்… ‘குலோந்துங்க சோழனுக்கு குர்தா வாங்கிக் கொடுத்ததே எங்க தாத்தன்தான்’ என்று அளப்பார்கள். இப்படி தன்னோட சுயசரிதையையும், தன் முன்னோர்களின் சுயசரிதையையும் டாஸ்மாக்குல உட்கார்ந்து காற்றிலேயே எழுதி முடிச்சுட்டு கிளம்புன ஆசாமிகள் பலர், அதே காற்றிடம் ‘ராயல் டி’ கேட்டு வாங்கிதான் இன்னும் ‘மூச்சே’ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். நிஜமான திறமைசாலிகளாக இருப்பார்கள். ஆனால் குடியால் குடிக்கப்பட்டிருப்பார்கள். அதுவும் கோடம்பாக்கத்தை சுற்றியிருக்கும் டாஸ்மாக்குகள் எங்கும், வெல்ல முடியாத பாரதிராஜாக்களும், வெந்து முடிந்த பாக்கியராஜாக்களும், சரிந்த தொந்தி சசிகுமார்களும் நிறையவே இருக்கிறார்கள். அவரவர் வாழ்வில் நிமிஷத்தில் தவற விட்ட வாய்ப்புகளும், நிதானமாக விழுந்த காயங்களும் மனசுக்குள் ஆறாத வடுவாகக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் அந்த குடி மடத்தின் பேரிரைச்சலோடு இரைச்சலாக அவர்கள் பேசி முடிப்பதற்குள், ‘பொய்ங் பொய்ங்’ சவுண்டோடு போலீஸ் வேன் வந்துவிடும். மிச்ச கதையை மறுநாளுக்கும் வைத்திருப்பார்கள். குடியும், வேனும், கதையும், கவலையும் சிந்துபாத் கதை போலதான்… முடிவதேயில்லை!

பதினாறு வயதினிலே கதையை பார்ட் பார்ட்டா பிரிச்சி, பகுதி பகுதியா வச்சு ஆணியடிச்ச ஆசாமியெல்லாம் கூட, முப்பது வருஷமா கோடம்பாக்கத்தில் திரிஞ்சு கடைசியில் பாரதிராஜாவை பக்கத்துல நின்று பார்க்க முடியாமலே செத்துப் போயிருக்கிறார்கள். ஆற்றிலே விழுந்தவனுக்கு கூட அடுத்த கரையில் மரமோ, கிளையோ மாட்டும். குவார்ட்டரில் விழுந்தவனுக்கு?

எம்.ஜி.ஆரின் அழகோடு சென்னைக்கு வந்து, கொட்டாச்சியின் குரூரத்தோடு சினிமாவை விட்டு போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

“ஏன்யா… இங்க ஷங்கர் இருக்கார். பாலா இருக்கார். முருகதாஸ் இருக்கார். கவுதம் மேனன் இருக்கார். இவங்களுக்கெல்லாம்னு தனித்தனியா ஆடியன்ஸ் இருக்காங்க. வியாபாரம் இருக்கு. அதை வச்சுகிட்டு இப்படி கனவோட வர்ற பசங்களை புதுசு புதுசா அறிமுகப்படுத்தலாமே? நாலைஞ்சு ஹீரோக்களை சுற்றி சுற்றியேதான் சினிமா இருக்கணுமா? புதுசா வர்ற பசங்களை இந்த மாதிரி ஜெயிச்சவங்க அறிமுகப்படுத்தினாதானே ஹீரோக்கள் பஞ்சம் குறையும்?” யாரோ ஒரு நடுத்தர எம்ஜிஆர், ‘இன்னும் நமக்கு வருஷம் இருக்குடா’ என்ற நம்பிக்கையிலும் ஆற்றாமையிலும் கொட்டிக் கொண்டிருந்தார். அதுவும் டாஸ்மாக் என்ற சமத்துவபுரத்தில்தான்!

மேலோட்டமாக கேட்பதற்கு நியாயமாக பட்டாலும், அலசி ஆராய்ந்து பிழிஞ்சு காயப் போட்டால், கிடைக்கிற வெளிச்சமே வேறு! அதைதான் ‘காம்பினேஷன்’ என்கிறது சினிமா.

ஷங்கர் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தினால், ஷங்கருக்கு என்ன வேல்யூவோ… அதற்கான வியாபாரம்தான் நடக்கும். அவரே ரஜினியோடு சேர்ந்தால் ஒரு பிசினஸ். விக்ரமோடு சேர்ந்தால் வேறொரு பிசினஸ் என்று சந்தை பல தகுதி தராதரங்களை வகுத்து வைத்திருக்கிறது. அதனால்தான் ஷங்கர் ரஜினிக்காக காத்திருக்கிறார். முருகதாஸ் விஜய் வீட்டிலிருந்து போன் வருமா என்று தவம் கிடக்கிறார். யானை மேல் அம்பாரியாக இருக்கணுமா? மடிச்சு வச்ச தார் பாயாக இருக்கணுமா? என்பதை இவர்களைப் போன்ற முரட்டு இயக்குனர்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.

அப்படியொரு காம்பினேஷனில்தான் ஆரம்பிக்கிறது நாம் சொல்லப் போகிற கதை(யல்ல, நிஜம்)!

மட்ட மத்தியானத்தில் மடமடவென இடி இடித்து திடு திடுவென மழையடித்தால் எப்படியொரு சந்தோஷம் வரும்? கோடம்பாக்கத்தில் அப்படியொரு சந்தோஷம்தான் அந்த டைரக்டரின் வரவு. இளமை துள்ளுகிற எல்லாருக்கும் அவரை பிடித்துப் போனது. அதே மட்ட மதியானத்தில் ஒரு அதிசய ரெயின்போவாக வந்து சேர்ந்தார் அவர். காலனி, கடைவாசல், மைதானம், மார்க்கெட் என்று அவரை பற்றி பேசாத ரசிகர்களே இல்லை. “டேய்… அவன் சொன்னது என் கதையைடா” என்றார்கள் இளைஞர்கள். “மச்சி… நைசா நம்மள நோட் பண்ணியிருப்பானோ” என்று சந்தேகமடைந்தார்கள் இன்னும் சிலர். எல்லாவற்றையும் கேட்டும் கேட்காதது போல, பார்த்தும் பார்க்காதது போல, சிரித்தும் சிரிக்காதது போல, மகிழ்ந்தும் மகிழாதது போலவே இருந்தார் அவர். ஏன்? எரியுற விறகு அழகுதான். ஆனால் எடுத்துப் போட்டா கரி. அவருக்குள் இரண்டுமாக இருந்தார் அவர். அவரது தோற்றம் அப்படி. தாழ்வு மனப்பான்மையும் அப்படி.

தோற்றத்தில் அப்படியிருந்தாலும், இவரையும் காதலித்தது ஒரு சப்பாத்தி சப்ஜி. இவராலேயே அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அவர். மென்சோகம் வழியும் முகம் என்றாலும், கலரும் ஸ்ரெக்ட்சரும், உதட்டில் நீச்சல் பழகும் புன்னகையும் அந்த நடிகையை ஒரு தேவதை போலவே நடமாட விட்டிருந்தது. காதலித்தார்கள். பின்னாளில் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். அதற்கப்புறம் டைவர்சும் நடந்தது.

நம்ம டைரக்டரின் வெற்றிக்குப்பின் பின்னால் ஓடுவதற்கு ஒரு பெரிய கூட்டம் இருந்தது. வருஷக்கணக்கில் படம் எடுத்தாலும், வத்தலா காய்ஞ்சு வடகமா பொறிவதற்கும் தயாராக இருந்தார்கள் அவர்கள். அந்த நேரத்தில் அவரை வைத்து ஒரு படத்தை எடுத்து மிகப்பெரிய அளவில் சம்பாதித்திருந்த தயாரிப்பாளர் ஒருவர், “வாங்க இன்னொரு படம் பண்ணலாம்” என்று அழைத்தார். “போன படத்துல என் மகனை அறிமுகப்படுத்தினீங்க. இந்த தடவை வேறு ஒரு பெரிய ஹீரோவை உங்களுக்கு தர்றேன். நீங்களும் பெரிய வெற்றிப்பட இயக்குனர். அவரும் பெரிய ஹீரோ. ரெண்டு பேர் காம்பினேஷனும் இருந்தால், இதுவரை வந்த பட வியாபாரத்தையெல்லாம் அடிச்சு மறக்கடிச்சுடலாம்” என்றார் ஆசை ஆசையாக. வேறொன்றுமில்லை… நான் சொன்னேனே ‘காம்பினேஷன்’! அந்த கணக்குதான்.

தயாரிப்பாளர் சொன்ன அந்த பெரிய ஹீரோ இளைய தளபதி விஜய். இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும். அதுதான் தயாரிப்பாளரின் முதல் அஜென்டா. அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும்தான் ‘புரோட்டாகால்’ என்றில்லை. அந்தஸ்து வந்துவிட்டால் எந்த நடிகருக்கும் இயக்குனருக்கும் கூட அந்த புரோட்டாகால் தரப்படும். இவர்கள் இருவருமே அந்த பொல்லாத புரோட்டாவின் கால்களை எதிர்பார்த்தால் என்னாவது? மேலே கொஞ்சம் சால்னாவை ஊற்றி முழுங்கி தொலைய வேண்டியதுதான். விஜய்யிடம் பேசும்போது தானாகவே முந்திக் கொண்டார் தயாரிப்பாளர். “சார்… நீங்க அவரு வீட்டுக்கு போக வேணாம். அவரு உங்க வீட்டுக்கு வரவும் வேணாம். பொதுவான ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்திக்கலாம்”.

“டைரக்டர் ரொம்ப சங்கோஜ பேர்வழி. முதல்ல அறிமுகமாகி அப்புறம் பழகி அதற்கப்புறம்தான் கதையே சொல்ல முடியும் அவரால். அதனால் நீங்க ஒரு ஓட்டலுக்கு வந்துட முடியுமா?” தயங்கி தயங்கி விஜய்யிடம் கேட்டேவிட்டார். அவரும் பெருந்தன்மையாக, “அதுக்கென்ன? மீட் பண்ணலாமே” என்று கூற, நாதஸ்வரத்தின் ஓட்டைக்கு நல்லெண்ணை போட்டு க்ளீன் பண்ண ஆரம்பித்தார் தயாரிப்பாளர். (இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல். விஜய்யும், அந்த டைரக்டரின் காதலியும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள். அந்த படமும் வெளிவந்து ஹிட்டடித்திருந்த நேரம் அது)

அந்த பிரபல நட்சத்திர ஓட்டலின் பாரில் சந்திப்பதாக ஏற்பாடு. முன்கூட்டியே ஒட்டல் நிர்வாகத்திடம் சொல்லி, ஒன்பது மணிக்கே அத்தனை குடிகாரர்களையும் அனுப்பி விட்டார்கள். மொத்த ஹாலும் இப்போது வெறிச். முன்கூட்டியே அங்கு வந்து காத்திருந்தார் டைரக்டர். சரியாக ஒன்பது மணிக்கு உள்ளே என்ட்ரியானார் விஜய். இருவருக்கும் பரஸ்பர அறிமுகம் செய்துவிட்டு அங்கிருந்து கழன்று கொண்டார் தயாரிப்பாளர். “பில்லு நம்ம கணக்குல” என்று கூறிவிட்டு அவர் கிளம்ப, கூச்சம் போக்கும் திரவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறக்கினார்கள் இருவரும்.

தனது படத்தின் கதையை நாலே வரியில் சொல்லி முடித்த டைரக்டர், “நிறைய டெவலப் பண்ண வேண்டியிருக்கு” என்று கூற, இப்படிதான் ஒவ்வொரு வெற்றிப்படங்களும் சரி, தோல்விப்படங்களும் சரி, ஆரம்பமாகின்றன என்பது புரியாதவரா விஜய்? “அதுக்கென்ன, மெல்ல டெவலப் பண்ணுங்க. அதுக்குள்ள நானும் இன்னொரு படத்தை முடிச்சுட்டு வர சரியாக இருக்கும்” என்றார். நடுநடுவே விஜய்க்கு போன் வந்து கொண்டேயிருந்தது. எதிர்முனையில் மனைவிதான். “வீட்டுக்கு எப்ப வர்றீங்க? டின்னர் என்ன பண்ணட்டும்?” இதற்கான அழைப்புதான் அது. “இன்னாரு கூட பேசிகிட்டு இருக்கேன். வந்துர்றேன்” என்று விஜய் சொல்ல, “ஓ… பென்ட்டாஸ்டிக் டைரக்டர். கேரி ஆன்…” உற்சாகம் கொடுத்தார் மிசஸ் விஜய்.

டைரக்டர் இயக்கிய இரண்டு படங்களையும் விஜய் அக்கு வேறு ஆணி வேறாக புகழ, அதே எனர்ஜியோடு விஜய் படத்தின் அருமை பெருமைகளை அடுக்கினார் டைரக்டர். அதே ஓட்டலின் ரிசப்ஷனில் உட்கார்ந்து உள்ளே பாரில் நடக்கும் சம்பாஷணைகள் ஸ்மூத்தாக போகிறதா என்று ‘பேரர்’ மூலம் உளவு பார்த்துக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர். இன்னும் ஐந்து நிமிஷத்தில் அந்த சீட்டு கட்டு பில்டிங் சிதறி விழப் போவது தெரியாமல்.

மப்பு மண்டைக்கு ஏறியதும், ஒரு திடீர் துணிச்சல் வந்தது டைரக்டருக்கு. நாம் பார்த்து வியந்த ஒரு சூப்பர் ஹீரோ தன் அருகில் உட்கார்ந்திருக்கிறார், எவ்வித ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வரம். அந்த வரத்திற்கே ஜுர மாத்திரை கொடுத்தது குடியின் துணிச்சல். என்ன சார்… நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணோட நடிச்சிங்க போலிருக்கு? ஃபாரின் வேற போயிருக்கீங்க… என்றார்.

“ஆமா… நல்ல கேரக்டர் அவங்க. டவுன் டூ எர்த். அழகான லொக்கேஷன்ல ஷுட் பண்ணினோம். ஆமா… எப்ப மேரேஜ் பண்ணிக்க போறீங்க?” ரொம்ப அக்கறையாகவும் ஆர்வமாகவும் விஜய் கேட்க, டைரக்டருக்குள்ளிருந்த சாத்தான், நுனி நாக்கில் வந்தமர்ந்து, “நண்பா… சவுக்கியமா?” என்றது. மிக மிக கேஷுவலாக அந்த கேள்வியை கேட்டார்.

“முடிச்சிட்டீங்களா?”

டைரக்டர் கேட்ட ‘முடிச்சிட்டீங்களா?’வுக்கு ரொம்ப நேரமாக தன் கையிலிருக்கிற ஒரே ஒரு லார்ஜைதான் கேட்பதாக நினைத்த விஜய், “போதும். அவ்ளோதான். செல்ஃப் டிரைவிங். அதுக்கு மேல குடிச்சா சரியா இருக்காது” என்றார். நம்ம கேட்டது புரியலையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறாரா? கண்களை அகல விரித்துக் கொண்ட டைரக்டர், “இல்ல சார். நான் கேட்டது வேற. என் லவ்வரை முடிச்சுட்டீங்களா?” என்றார் கூச்சமேயில்லாமல்!

ஒரு நிமிஷம் ஆடிப்போன விஜய், என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டே ‘இந்தாளு இப்படியெல்லாம் கேட்பான்னு தெரிஞ்சிருந்தா இந்த சந்திப்பையே தவிர்த்திருக்கலாமோ’ என்று நினைக்க… அவரையும் அறியாமல் எட்டிப்பார்த்தது கோபம். இவரது முகத்தில் தெரிந்த கோபத்தை ஒரு நொடியில் உள்வாங்கிவிட்டார் டைரக்டர்.

அதற்கப்புறம் அவர் சொன்ன வார்த்தைகள்தான் குடமுருட்டி ஆறுல குரூடாயில் புரண்டு வந்த அதிர்ச்சி. “இல்ல…எதுக்கு கேட்டேன்னா நல்லா கம்பெனி கொடுப்பா சார் அவ…அதுக்காகதான்” என்றார் எவ்வித லஜ்ஜையும் இல்லாமல்! விஜய்யின் கோபத்தை போக்கிவிட வேண்டும் என்கிற பச்சாதாபமும் இருந்தது அதில்.

அப்புறம்?

படக்கென்று சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்த விஜய், விறுவிறுவென கிளம்பி ரிசப்ஷனை கடந்து போவதை கண்ணால் கண்ட தயாரிப்பாளர் பின்னாலேயே ஓட, “சார்… நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்கன்னுதான் அடிக்காம விட்டுட்டு போறேன்” என்று கூறிவிட்டு மின்னலை போல வெளியேறியிருந்தார். இன்று வரை இருவரும் இணையவேயில்லை.

தமிழ் சினிமாவை கவர்ந்திருக்க வேண்டிய ஒரு வியத்தகு ‘காம்பினேஷன்’ வெறும் காபி டிகாஷனாக மாறி, தரையெல்லாம் சிதறியிருந்தது!

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து)

Read previous post:
முதன்முறையாக ரஜினியின் குட் புக்கில் விஜய்!

‘என் வழி தனீ...ஈ வழி’ என்றுதான் போய் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சுற்றியிருப்பவர்கள் விட்டால்தானே? ரஜினி யார் பக்கம்? அவருக்கு அஜீத்தை பிடிக்குமா? விஜய்யை பிடிக்குமா? என்றெல்லாம்...

Close