வாங்க மிஸ்டர் மொட்டை சிவா… விஜய் அழைப்பு, லாரன்ஸ் நெகிழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஓ கே கண்மணியும் சரி, காஞ்சனா 2 ம் சரி. கலெக்ஷனை வாரிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள். மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று மணிரத்னத்துக்கு பாராட்டுகள். அதே வேளையில், லாரன்ஸ் வீட்டிலும் செம கூட்டம். அடுத்த படம் எங்களுக்கு பண்ணிக் கொடுங்க. டேர்ம்ஸ் எதுவா இருந்தாலும் ஓ.கே என்கிறதாம் அந்த கூட்டம்.
இந்த படத்தையே சுமார் பத்து கோடிக்கு தயாரித்த லாரன்ஸ், அதை விட பல மடங்கு லாபம் பார்த்துவிட்டார். இனிமேல் இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவர் நடிப்பாரா என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெற்றி. ஏன்? படத்தை நல்ல விலைக்கு சன் பிக்சர்சுக்கு கொடுத்துவிட்டார். தெலுங்கு, மலையாள மொழிகளில் வந்த பணம் அப்படியே அவருக்கு என்கிற மாதிரி போகிறது கணக்குகள். இனிமேல் அவர் எப்படி சம்பளத்திற்கு நடிக்க முடியும்?
இது ஒருபுறம் இருக்க, முன்னணி ஹீரோக்களும் போன் செய்து, லாரன்சுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக லாரன்ஸ்சை வீட்டுக்கே வரவழைத்துவிட்டார் விஜய். பல படங்களுக்கு லாரன்ஸ்சின் நடன அமைப்பில் ஆடியவர் என்ற வகையில் மட்டுமல்ல, விஜய்யும் லாரன்சும் நல்ல நண்பர்களும் கூட. லாரன்சை நேரில் பார்க்கும் போது, ‘வாங்க மிஸ்டர் மொட்டை சிவா’ என்று விஜய் அழைக்க, இவர் முகத்தில் ஒரே வெற்றிப் புன்னகை!