நேரில் வந்த முருகதாஸ் பேசாமல் அனுப்பிய விஜய்?
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல்! சல்லடை போட்டு சலித்து சலித்து விசாரித்தால், ஆமாம்… என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக! எதற்காக இந்த முகம் திருப்பல்?
வேறொன்றுமில்லை, கதை திருட்டு என்று ஒரு உதவி இயக்குனர் புகார் கொடுத்தாரல்லவா? அவரை நேரில் வரவழைக்காமல் தனது உதவியாளர்கள் மூலம் சந்திக்க சொன்னாராம் விஜய். அப்போது தனது கதை திருட்டு தொடர்பாக பல விஷயங்களை ஆதாரங்களோடு புட்டு புட்டு வைத்தாராம் அவர். இந்த கோபத்தில்தான் முருகதாசிடம் முகம் கொடுக்கவில்லை என்கிறார்கள். பொதுவாக தன்னிடம் படம் பண்ண வரும் இயக்குனர்கள் மூலம் தனக்கு ஏதும் பிரச்சனை வரக் கூடாது என்று நினைப்பது எல்லா முன்னணி ஹீரோக்களிடமும் இருக்கிற வழக்கம்தான். இங்கு அதையும் தாண்டி முருகதாசை நம்பினாராம் விஜய். அந்த நம்பிக்கையை இப்படி சுக்கு நுறாக்கிவிட்டாரே என்கிற வருத்தம்தான் விஜய்க்கு.
லைக்கா பிரச்சனை வந்தபோது ‘நாம் ரெண்டு பேருமே சேர்ந்து இந்த படத்தை அண்டர்டேக் பண்ணிக்கலாம். நமது பெயரிலேயே இந்த படம் வரட்டும்’ என்கிற வரைக்கும் இருவரும் பிளான் போட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இப்படியொரு கதை திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று விஜய்க்கு தெரியவே தெரியாதாம். தற்போது தீர விசாரித்து தெரிந்து கொண்ட பின்புதான் இந்த மாற்றம் என்கிறார்கள்.
‘பிரச்சனையில்லாமல் படத்தை ரிலீஸ் பண்ணணும் என்று நான் இருக்க. எங்கிருந்தோ ஒரு பிரச்சனையை முளைக்க விடுறீங்களே?’ என்று கவலைப்பட்ட விஜய், ‘நான் என்னோட நெக்ஸ்ட் படத்தில் கான்சன்ட்ரெட் பண்ணிட்டு இருக்கேன். இந்த படத்தை பற்றி நான் இனி உங்களிடம் பேசப்போவது இல்லை. ப்ளீஸ் கௌம்புங்க’ என்று கூறிவிட்டாராம்.
இது ஒருபுறமிருக்க, வருகிற பதினெட்டாம் தேதி கத்தி பட பாடல் வெளியீட்டு விழா என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. மேடையில் பேச்சுக்கு சிரித்துக் கொண்டாலும் நீரு பூத்த மல்லிகைதான்! சந்தேகமில்லை…