விஜய் பட பூஜை! ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா?
விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை. படத்தின் நாயகிகளான எமிஜாக்சனும், சமந்தாவும் கூட வரவில்லை. எவர் வந்தாலென்ன, வராவிட்டாலென்ன? லண்டனில் தனது பிறந்த நாளை முடித்துவிட்டு சென்னை வந்த கையோடு விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுதான். பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பேன்ட் சட்டையில் நச்சென்று வரும் விஜய், இந்த நிகழ்ச்சிக்கு வேஷ்டி அணிந்து வந்ததை சற்று வியப்போடுதான் நோக்க வேண்டியிருந்தது.
துவக்க விழா இனிதே முடிய, அதற்கப்புறம் பிரஸ்மீட்!
நெஞ்சம் நிறைந்த குதூகலத்துடன் பேச ஆரம்பித்தார் அட்லீ. நண்பன் படத்தில் ஷங்கர் சாரின் உதவியாளராக பணியாற்றினேன். அப்போது விஜய் சாருடன் பழகும் அதிர்ஷடம் அமைந்தது. ராஜா ராணி படம் வெளியான பிறகு அவரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். ‘இந்த கதையை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் இந்தகதையை ரிலீஸ் செய்து ஒரு சூப்பர் ஹிட் கொடுத்திருக்கலாமே?’ என்றார். அந்த அளவுக்கு அவர் இந்த இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இதுவொரு ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும். எம்.ஜி. ஆர் நடித்த கதாபாத்திரங்கள் எல்லா காலத்துக்கும் எல்லாருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்தப் படத்திலும் விஜய் சார் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது முற்றிலும் புதிய கதை. எந்த படத்தின் தழுவலோ பாதிப்போ அல்ல. ஜி.வி. பியின் இசையில் 50வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எல்லா மெட்டுக்களையும் ஏற்கனவே கொடுத்துவிட்டார்.” என்றார்.
துட்டு வாங்குனவரு மெட்டு கொடுத்துட்டாரு. மெட்டு வாங்குன விஜய் எப்ப பாடப் போறாரோ? எப்படி பாடப்போறாரோ?