லைக்கா? டிஸ் லைக்கா? – துளைக்கும் பிரஸ் – நழுவும் விஜய்

இலங்கை பிரச்சனையை ஆயுதமாகவும் அதே சமயத்தில் கேடயமாகவும் பயன்படுத்தி வருவது இந்திய, தமிழக அரசியல்வாதிகள்தான் என்றால், அவர்களுக்கு போட்டியாக இப்போது இறங்கியிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள். உலகம் முழுக்க நடைபெறும் கேளிக்கைகளில் ராஜபக்சேவின் அரசு தரும் பணமும் புகுந்து விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை சமீபகாலமாக கேட்க முடிகிறது. வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு பிரிவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து இன்னொரு பிரிவை எதிர்க்க செய்து பிரமாதமாக அரசியல் நடத்தி வருவதாகவும் ராஜபக்சே மீது சந்தேகப்படுகிறார்கள்.

வெளிநாட்டுக்கு கிளம்பி போய் மானாடி மயிலாடி வரும் நடனக்காரர்களிடம் ஆரம்பித்து, ரிப்பன் கட் பண்ணுவதற்காக கிளம்பிப் போகும் த்ரிஷா நமீதா உட்பட பலரும் இந்த சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டு அல்லாடி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படமும் இந்த அரசியலுக்குள் சிக்கிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ இதற்குள் தலையை விட்டுக் கொண்ட விஜய், அதை சேதாராமில்லாமல் வெளியே எடுப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது. ‘லைக்கா? டிஸ் லைக்கா?’ என்கிற பெரும் கேள்விக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் அவர். கத்தியை தயாரிக்கும் ஐங்கரன் கருணாகரன், லைக்கா மொபைல் நிறுவனத்துடன் இணைந்துதான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த லைக்கா, இலங்கை அரசுடன் எவ்வளவு நெருக்கம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனில், ராஜபக்சே வித் லைக்கா மொபைல் என்று கூகுளுக்குள் குதித்தால் போதும். கொட்ட கொட்ட விழித்தபடி வருகின்றன ஆதாரங்கள்.

கொட்டாச்சி, வையாபுரி மாதிரி துண்டு துக்கடா தோல் பகோடாக்கள், இலங்கை பிளைட்டில் ஏறினாலே கூட சிங்கம் போல சிலிர்த்துக் கொள்ளும் தமிழ் உணர்வாளர்கள் இந்த பிரச்சனையை ஈஸியாக விடுவதாக இல்லையாம். சென்னையிலிருக்கும் லைக்கா நிறுவன அலுவலகங்களையும் தொடர்புடைய வியாபார ஸ்தலங்களையும் தேடி வருகிறார்களாம். முடிந்தால் நாலு கற்களை எரியலாம்… அல்லது அங்கு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடலாம் என்பது அவர்களின் திட்டம். அதற்கு தோதாக லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல ஓட்டல் ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறதாம்.

இந்த நிலையில் இலங்கை அரசுக்கும் லைக்கா மொபைல் நிறுவன அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிறார் ஐங்கரன் கருணா. இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு இந்த படத்திலிருந்து அவர் விலகினால் சொல்லப்படும் பொய்கள் உண்மையாகிவிடாதா என்றும் கேள்வி எழுப்புகிறார் கருணா. இது ஒருபுறமிருக்க, ‘எந்த பக்கம் போனாலும் அங்கே ஒரு முட்டு சுவரை கொண்டு வந்து ஃபிக்ஸ் பண்ணுறானுங்களே’ என்கிற கடுப்பிலிருக்கிறாராம் விஜய். இந்த பிரச்சனை தொடர்பாக விஜய்யிடம் பேசுவதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் முன்னணி நாளிதழ், மற்றும் வார இதழ் நிருபர்கள்.

ஆனால் அவர் தரப்பிலிருந்து சொல்லப்படும் பதில் என்ன தெரியுமா? ‘சார்… இப்போ யாருகிட்டவும் பேச தயாராக இல்லை’ என்பதுதான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பதில் சொல்கிற விவகாரம் இல்லை இது. இந்த நேரத்தில் பொறுமையாக இருந்தால் பிரச்சனை தானாக சால்வ் ஆகிவிடும். அல்லது தயாரிப்பாளரே ஏதாவது செய்து இதிலிருந்து வெளியே வருவார் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால்… ?

விஜய் மவுனமாக இருப்பது நல்லதற்கில்லை!

Read previous post:
வாடிகன் தேவாலயத்தில் புறாக்களைப் பாதுகாக்க பயிற்சிபெற்ற பருந்து

இத்தாலியை ஒட்டியுள்ள வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு கடந்த ஜனவரி...

Close