புலி படத்தோடு விஜய்யின் அரசியல் கட்சி பாடலும் இணைப்பு? 2016 தேர்தலில் விஜய்? EXCLUSIVE REPORT

“ஏன் இந்த கேள்வியை நடிகனை பார்த்து கேட்கிறீங்க? ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க?” இப்படி பல நேரங்களில் தன்னிடம் மைக்கை நீட்டி கேள்வி கேட்கும் பலரையும் வறுத்து தொங்க விட்டிருக்கிறார் நடிகர் நாசர். அவர்கள் கேட்டதிலும் தப்பில்லை. இவர் கோபித்துக் கொண்டதிலும் தப்பில்லை.

“நீங்க அரசியலுக்கு வருவீங்களா?” என்ற கேள்விதான் ஒரே நேரத்தில் சிலருக்கு சந்தோஷத்தையும் சிலருக்கு எரிச்சலையும் வரவழைக்கிறது.

அப்படியொரு பதற்றமான அல்லது பரவசமான கேள்வியை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தலையில் ஏற்றிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். நடிகை நயன்தாரா முன்னிலையில் பிரமாண்டமான கூட்டத்தில் அவர் தன் ரசிகர் மன்றத்தினருக்கான கொடியை அறிமுகப்படுத்திய நாளில் இருந்தே விஜய்க்கும் அரசியலுக்கும் போடப்பட்டு வந்த முடிச்சு இன்னும் பலமாகி விட்டது. அந்த பலத்திற்கு பலம் சேர்ப்பது போல சமீபத்தில் வெளியே கசிந்து வரும் செய்தி ஒன்று அமைந்திருக்கிறது.

சமீபத்தில் புலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் கேமிராமேனும் ‘சதுரங்கவேட்டை’ என்ற வெற்றிப்படத்தின் ஹீரோவுமான நட்ராஜ் பேசும்போது, ‘சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று குறிப்பிட்டார் ‘நீங்க அப்படி சொன்னது ஒன்றும் டங்க் ஸ்லிப் இல்லையே? நிதானமாதானே சொன்னீங்க?’ என்றொரு கேள்வி அவரை நோக்கி பறக்க, ‘ஏன்… அதிலென்ன சந்தேகம்? அவர் சூப்பர் ஸ்டார்தான்’ என்றார் நட்ராஜ்.

கடும் உழைப்புக்கும் போட்டிக்கும் இடையே அந்த இடத்தை நெருங்கி உறுதியான இடத்தை பிடித்தும் இருக்கிறார் விஜய். அடுத்து எல்லாரும் மைக்கை நீட்டி கேட்டதை போல ‘அரசியலுக்கு வருவீங்களா?’ மொமென்ட்தான்! சமீபகாலமாக அவரை கவனித்து வரும் ரசிகர்களுக்கு, விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தனது கனவு மூட்டையை பிரிக்க ஆரம்பித்திருக்கிறார் என்கிற விஷயம் புரிந்திருக்கும்.

நாடாளுகிற ஆசை ஒருவருக்கு வருகிறதென்றால் முதலில் தன்னுடைய தொழிலில் நடந்து வரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதை நிவர்த்தி செய்வதற்கான சில ஸ்டெப்ஸ்களையாவது எடுத்து வைக்க வேண்டும். இந்த தகுதிகளையெல்லாம் வளர்த்துக் கொண்டால்தான் கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்தால், உட்கட்சி பூசல்களுக்கு ஈயம் பூச முடியும். அதற்கான பயிற்சியோ என்னவோ? நான் அஜீத் ரசிகன் என்று காலமெல்லாம் சொல்லி வந்த சிம்புவின் ‘வாலு’ படம் வெளிவர சில முயற்சிகளை எடுத்திருக்கிறார் விஜய். அவருக்கு இருக்கிற பரபரப்பான ஷெட்யூலில் இதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்றோ, அக்கறைப்பட்டு சில காரியங்களை நிகழ்த்த வேண்டுமென்றோ அவசியமேயில்லை. ஆனால் சிம்புவிடம், வாலு படத்தின் பிரச்சனைகளை கேட்டறிந்த விஜய், அப்படத்தின் பைனான்சியர்களிடம் பேசி சில உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது.

இதை சிம்புவும், அவரது அப்பா டிஆரும் கூட உறுதி செய்திருக்கிறார்கள். அரசியலுக்கு இணையான ராஜ தந்திரம் இது. சிம்புவின் வாலு படத்தை எப்படியாவது ஓட வைத்துவிட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள், ஒரு சுற்றறிக்கை தயார் செய்து அதை தமிழகத்திலிருக்கும் எல்லா மன்றங்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். அதில், ‘தலயின் ரசிகரான சிம்பு ஒரு நாளும் தோல்வியடையக் கூடாது. நமது தல ரசிகர்கள் முதல் நாளே முதல் ஷோவே வாலு படத்தை பார்த்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கட்டுக்கோப்பான சூழ்நிலையை கலைத்து வீசிவிட்டது விஜய்யின் இந்த உதவி.

சமூக வலை தளங்களில் சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அத்தனை அஜீத் ரசிகர்களும் ‘ஞே’ என்று முழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தனது நேரடி தொழில் போட்டியாளரான சிவாஜியின் ரசிகர்களை இப்படிதான் பலமுறை குழப்பியடித்திருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.! விஜய்யின் இந்த அப்ரோச்சும் கிட்டதட்ட அப்படிப்பட்டதுதான் என்று காதை கடிக்கிறது சினிமாவுலகம்.

தன் ரசிகர் மன்றத்தின் சார்பில் விஜய் உதவியதாக செய்திகள் வந்திருக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் ஒருவரை பார்த்தார். அள்ளிக் கொடுத்தார் என்று செய்திகள் கசிந்ததேயில்லை. ஆனால் சமீபகாலமாக அதுபோன்ற செய்திகளும் சரமாரியாக உலவ ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் விஜய் படத்தில் பணியாற்றிய ஒரு அசோசியேட் இயக்குனரின் மகன் அவரை சந்தித்தாராம். ‘நான் இன்னாருடைய பையன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், தோளில் கை போட்டுக் கொண்ட விஜய், ‘தம்பி என்ன படிக்கிறே? அம்மா நல்லாயிருக்காங்களா?’ என்றெல்லாம் விசாரித்திருக்கிறார். காரணம், அந்த அசோசியேட் இயக்குனர் தற்போது உயிரோடு இல்லை.

உடனே தனது உதவியாளரிடம் சொல்லி வீட்டுக்கு போய் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துவரச்செய்து அந்த இளைஞனின் கையில் கொடுத்து அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்! இதெல்லாம்தான் எம்.ஜி.ஆர் பாணி என்று கூடவே உடுக்கை அடிக்கவும் தவறவில்லை அவர்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல ஒரு செய்தி! விஜய் முழு அரசியலுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் என்பதை உறுதி செய்வதும் இந்த செய்திதான். அது வேறொன்றுமில்லை…. தான் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு ஏற்ப சில கொள்கை பாடல்களை தயாரித்துத்தர உத்தரவிட்டிருக்கிறாராம். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள் போன்ற முக்கியமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் சுந்தர்சி பாபு என்ற இசையமைப்பாளரிடம்தான் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மும்பையிலிருந்து முன்னணி பாடகர்களை அழைத்து வந்து இந்த பாடலை பாட வைத்திருக்கிறாராம் அவர்.

விஜய் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்றெல்லாம் அந்த ஆல்பத்தில் பாடல்கள் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு சந்தோஷமும் காத்திருக்கிறது. இந்த பாடல்களை வீடியோ வடிவில் படம் பிடித்து தருவதற்காக, அட்டி என்ற படத்தின் இயக்குனர் விஜய் பாஸ்கரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அதுவும் புலி படத்தின் முதல் பிரதி தயாராவதற்குள் இது வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போயிருக்கிறதாம். ஏன்?

புலி படம் ஓடும் எல்லா தியேட்டர்களிலும் அதற்கு முன்பாக இந்த கொள்கை பாடல் திரையிடப்படுமாம். எல்லாம் தன் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்குதான்!

விஜய் போடுகிற இந்த கணக்கு வெறும் வீட்டுக் கணக்கா? நாட்டுக் கணக்கா? அல்லது தியேட்டரிலிருந்து வரப்போகும் ‘நோட்டுக்’ கணக்கா?

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
செய்தி சேகரிக்க வந்த வசுந்தராவே செய்தியானது எப்படி?

​உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சகமனிதனின்...

Close