விஜய்சேதுபதிக்கு இது புத்தி கொள்முதல்?
ஒரு மணிக்கு பிரஸ்மீட். பதினொரு மணிக்கெல்லாம் ‘கேன்சல்’ மெசெஜ் வந்தது. எல்லாம் விஜய் சேதுபதி- ஸ்டூடியோ 9 இருவர் தொடர்பான விஷயங்களுக்காகதான் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முடிவில் இருந்தார்கள்.
அந்த பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தவர் ஸ்டூடியோ 9 சுரேஷ். விஜய் சேதுபதிக்கு 9 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்த ஸ்டுடியோ 9, வசந்தகுமாரன் என்ற படத்தை துவங்கிய விஷயம் யாவரும் அறிந்ததுதான். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ ரிலீஸ் நேரத்தில் தரப்பட்ட அட்வான்ஸ் தொகை அது. ஆனால் அதற்கப்புறம் பல வருடங்களாக கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு.
விரக்தியின் உச்சத்திற்கே போன சுரேஷ், ‘நான் என்னுடைய சினிமா கம்பெனியையே இழுத்து மூடப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புதான் அது. கடைசிநேரத்தில் ஆளுங்கட்சி நடிகர் ஒருவர் உள்ளே வந்து ‘பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன். பிரஸ்மீட்டை தள்ளி வைங்க’ என்று கேட்டுக் கொண்டாராம். அதனால் இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது அது. நிஜத்தில் நடப்பது என்ன? கோடம்பாக்கத்தில் விசாரித்தால் தலையை பிய்த்துக் கொள்ளும்படியாக தகவல்கள் வருகின்றன.
இந்த படத்திற்காக நான் 80 லட்சம் வரை செலவு செய்துவிட்டேன். அதனால் கொடுத்த அட்வான்ஸ் தொகையான 9 லட்சத்துடன், மேற்படி தொகையையும் சேர்த்து தர வேண்டும் என்கிறாராம் சுரேஷ். அதுமட்டுமல்ல, வட்டியும் இருக்கிறதல்லவா? எல்லாம் சேர்ந்து இன்னும் பெருந்தொகை கேட்பதாக புலம்புகிறார்கள் விஜய் சேதுபதி தரப்பில். இருந்தாலும் ஒரு கோடி வரைக்கும் இழப்பீடு தர முன் வந்திருக்கிறாராம் ஹீரோ.
எந்த சங்கத்திற்கு போனாலும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள் ஸ்டுடியோ 9 தரப்பில். கடைசியில் முடிவான தொகை எது என்பதை தெரிந்து கொள்ள, அந்த தொகை கைமாறும் வரைக்கும் காத்திருந்தால்தான் உண்டு போலிருக்கிறது.
இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்கதான் அஜீத் மாதிரி ஹீரோக்கள் அட்வான்ஸ் தொகையை முன் கூட்டியே வாங்குவதில்லை என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் போலிருக்கிறது இது.