விஜய்சேதுபதி மகனும் நடிக்க வந்தார்!
மிக குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி. போட்ட பணம் ‘பணால்’ என்று தெரிந்தே வித்தியாச படங்களை தர ஆசைப்படும் அவருக்கு கோவில் கட்டி கும்பிடவும் தயாராக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ அறுபது லட்சம் லாஸ் என்கிறது அதே பாராட்டு வட்டாரம். “எவனுக்கு சறுக்கல் வரல? நான் மீண்டும் மீண்டும் ஜெயிப்பேன். சமயங்களில் தோற்பேன்” என்று இங்கேயும் யதார்த்த நாயகனாக பேசிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, வித்தியாசமான படங்களை தயாரிக்கிற விஷயத்தில் மட்டுமல்ல, வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வருகிற விஷயத்திலும் இன்னொரு கமல்ஹாசனாக இருப்பதுதான் ஆச்சர்யம்.
யெஸ்… அவர் நடிப்பில் விரைவில் வெளிவரப்போகும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் அவருடைய மகன் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிட்டதட்ட பத்து வயசு சூர்யாவுக்கு அப்பாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை. அதற்கு பொருத்தமாக படத்தில் அவருடைய மகன் கேரக்டர் ஒன்று இருந்ததாம். எங்கெங்கோ தேடி யாரோ ஒரு பையனை நடிக்க வைப்பதற்கு பதிலாக தன் மகனையே நடிக்க வைக்கலாம் என்று ஆசைப்பட்டாராம் விஜய் சேதுபதி. அதைகூட நிறைவேற்றவில்லை என்றால் அப்புறம் என்ன டைரக்டர்? உடனே ஓ.கே சொல்லிவிட்டார். படப்பிடிப்பில் மற்றவர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதப்படுத்திவிட்டாராம் சூர்யா.
இப்பவே சூர்யா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க உடனே ஆரம்பிக்கலாம். உள்ளூர் வரிகளோ, வெளியூர் வரிகளோ, விஜய் சேதுபதியிடமிருந்து பைசா பெறாது என்பது மட்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ‘சைடு’ தகவல்!