வந்ததுக்கு வயிறார சாப்பிட்டுட்டு கௌம்புங்க… விஜய் சேதுபதி பதிலால் கவலை!
படம் ஓடக்கூட வேண்டாம். அறிமுகமானால் போதும்… அண்ணன், மாமன், சித்தப்பா, பெரியப்பா, கொள்ளு தாத்தா சகிதம் ரசிகர் மன்ற பலகை அடித்துவிடும் இளம் ஆ..கோ நடிகர்களுக்கு மத்தியில் ‘போங்கப்பா… நீங்களும் உங்க ரசிகர் மன்ற அலப்பறையும். அதுக்கு நான் ஆள் இல்ல’ என்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்சினிமாவின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் ஆகிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை தமிழகத்தின் எட்டு திசையிலிருந்தும் நச்சரித்து வருகிறார்களாம் ரசிகர்கள்.
‘நாங்க உங்களுக்கு மன்றம் திறக்குறோம். எங்களை வேணாம்னு சொல்லிடாதீங்க’ என்று பெரும் கூட்டம் ஒன்று தினந்தோறும் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை மொய்க்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் ஹீரோவின் பதில் என்ன? ‘ஊர்லேர்ந்து வந்துட்டீங்களா… இனிமே அப்படியெல்லாம் கிளம்பி வராதீங்க. வந்ததுக்கு வயிறார சாப்பிட்டு போயிருங்க’ என்று கிச்சன் பக்கம் கையை காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார். ‘அண்ணனை கொஞ்சம் கொஞ்சமா கரைச்சு சம்மதிக்க வச்சுரலாம்னு அடிக்கடி வர்றேன். வயிறு உப்புற அளவுக்கு சாப்பாடு கிடைச்சுச்சே தவிர, அவரோட சம்மதம் கிடைக்கலியே’ என்கிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் அலுவலக நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்காக அவரது உற்ற நண்பர்களின் உறவுக்காரர்கள், அண்டை வீட்டு அல்லக்கைகள், சட்டியை உருட்டும் சத்தம் தெரியாமலே சாம்பார் குடிக்கும் சாமர்த்தியசாலிகள் என பலர் முயன்று வந்தார்களாம். ஆனால் வி.சே பிடி கொடுக்கவில்லை. அதிரடியாக ஒரு காரியம் செய்திருக்கிறார். ஊரிலிருந்து தனது தங்கை மகனை அழைத்து பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.
ரத்த சொந்தங்கள் அருகிலிருந்தால், ‘சொத்தை’ சொந்தங்கள் மூக்கை நுழைக்காது என்கிற ஐடியாவாகக் கூட இருக்கலாம். அதுவும் நல்லதுதானே?