தமிழச்சி பிரியங்காவை தாங்கிப் பிடிப்பாரா விஜய் சேதுபதி?

தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா.

கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு. மேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

நேற்று நடந்த சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என திரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் ப்ரியங்கா பேசியதை பார்த்தால், தமிழுக்காக குரல் கொடுக்க இன்னொரு மயில் ரெடி என்றே தோன்றியது. (பேசாம சீமான் கட்சியில சேர்ந்துருங்களேன் தங்கச்சி)

“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன் ” என்றார்.

ப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்றார். அடுத்து பேசிய நடிகர் விவேக் ஒருபடி மேலே போய், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.

இப்படியாக ப்ரியங்கா ஆரம்பித்து வைத்த பஞ்சாயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள் விஜய் சேதுபதியும், விவேக்கும். இதெல்லாம் வெறும் பேச்சா, வெட்டிப் பேச்சா, அல்லது ப்ரியங்காவுக்கு பிரயோஜனம் தரும் பேச்சா என்பதெல்லாம் தெரிய வர இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ ஆகலாம். எதற்கும் விஜய் சேதுபதி போன் நம்பருக்கு அடிக்கடி மெசேஜ் போடுங்க ப்ரியங்கா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Enakku Veru Engum Kilaigal Kidayathu Trailers

https://www.youtube.com/watch?v=R4YnfH7Pupg

Close