மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் விஜய் சேதுபதி?
சொந்தப்பட ரிஸ்க்கை சந்தித்து மீண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது நண்பரை இயக்குனராக்க வேண்டும் என்பதற்காக ‘சங்குதேவன்’ என்ற படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். ஒரு வாரம் ஷுட்டிங் நடந்தது. அந்த ஒரு வாரத்திலேயே தலையெழுத்தில் தையல் ஊசியை நுழைத்து சங்கட பட வைத்துவிட்டார் அந்த நண்பர்.
வேறு வழியில்லாமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆனாலும், அறுபது லட்சம் நஷ்டமாம் விஜய் சேதுபதிக்கு. ‘உங்களுக்கு எதுக்கு இந்த தயாரிப்பு வேலையெல்லாம்?’ என்று நண்பர்கள் அட்வைசிக்க, நடிப்பாச்சு, துட்டாச்சு என்று தயாரிப்பு பக்கமே திரும்பாமலிருந்தார். பூனைக்கு மறுபடியும் தயிர் மேல் ஆசை.ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதற்கப்புறம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்க கிளம்பிவிட்டார்.
இந்த முறையும் அவரது நண்பர் லெனின் பாரதி என்பவர்தான் இயக்குனர். ஆனால் இதில் விஜய் சேதுபதி நடிக்காமல் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்து இந்த படத்தை தயாரிக்கிறாராம். சிலுவைக்கு முதுகை தருவாரா? பதக்கத்திற்கு நெஞ்சை தருவாரா? என்பதை போக போகதான் பார்க்க வேண்டும்!