சிவகார்த்திகேயனை வச்சு படம் எடுப்பேன்! விஜய் சேதுபதி உற்சாகம்!
விஜய் சேதுபதி ஓல்டு கெட்டப்பில் நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இன்னொரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே! தனது நெருங்கிய நண்பரான பிஜு விஸ்வநாத்தையே இந்த படத்தை இயக்கவும் வைத்திருக்கிறார் சேதுபதி. எவ்வளவோ ட்ரெய்லர்கள்… டீசர்கள்… என்று யூ ட்யூப்களில் மேய்ந்து சிலவற்றில் பிரமித்து பலவற்றில் எரிச்சலுற்றிருக்கும் ரசிகர்களுக்கு, நிஜமாகவே இந்த ட்ரெய்லர் முற்றிலும் டிபரண்ட்! ரொம்ப பில்டப் கொடுக்காத… இன்னா? என்று ஒரு விஜய் சேதுபதி, இன்னொரு விஜய் சேதுபதியை கலாய்க்கும் விதம் அருமை ப்ளஸ் அடக்கம்!
ஒரு இதய நோயாளியை ஏற்றிக் கொண்டு செல்கிற ஆம்புலன்ஸ்… அதற்குள்ளிருக்கும் மூவர். இவர்களுக்குள் நடக்கும் கதைதான் ஆரஞ்சு மிட்டாய். சற்றே தொந்தி விழுந்து, முகத்தில் நரை விழுந்து, கண்களில் தடிமனான கண்ணாடி பொருத்தி, வேறொரு ஆளாக இருந்தார் விஜய் சேதுபதி. இந்த கேரக்டருக்காக தொப்பை தேவைப்பட்டுச்சு. ஏற்கனவே கொஞ்சம் இருந்தது. இன்னும் கொஞ்சம் உருவாக்கிக்கிட்டேன். மற்றபடி இந்த படத்தில் வரும் கெட்டப்புக்காக தினமும் இரண்டு மணி நேரம் மேக்கப் போட வேண்டியதா இருந்திச்சு. பதினொரு மணிக்குதான் ஷாட்ல வந்து நிற்க முடியும். நல்லவேளை… நானே தயாரிப்பாளர்ங்கறதால அதெல்லாம் தெரியல’ என்றார் விஜய் சேதுபதி.
பேச்சு மெல்ல அவுட் ஆஃப் ஆரஞ்சு மிட்டாய் ஆன போதும் கூட ரொம்ப உற்சாகமாகவே இருந்தார் அவர். ‘சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைச்சா படம் தயாரிப்பீங்களா?’ இப்படியொரு கேள்வி நிருபர் கூட்டத்திலிருந்து வர… ஏக உற்சாகமானார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா பண்ணுவேன் சார். சந்தோஷமா பண்ணுவேன் சார். உற்சாகமா பண்ணுவேன் சார்’ என்றார் அடுக்கடுக்காக.
பாபநாசம் மாதிரி வேறு மொழிகளில் ஹிட்டடித்த படங்களை வாங்கி அதில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா? இதற்கும் உற்சாகம் பொத்துக் கொண்டது விஜய் சேதுபதியிடம். ஏன் இல்லாம? இப்ப கூட சூதுகவ்வும் நலன் இயக்குகிற படம் ஒரு கொரியன் மூவிதான். அதோட ரைட்ஸை முறைப்படி வாங்கி எடுக்கிறோம் என்றார்.
ஆரஞ்சு மிட்டாய் போலவே படமும் சுவையாக இருக்கும் போலதான் தெரிகிறது.
ஆங்… சொல்ல மறந்தாச்சே, இந்த படத்திற்கு முதன்முறையாக வசனமும் எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி.