விஜய் சேதுபதியை வேற மாதிரி காட்டுமாம் ‘வன்மம்’
விஜய் சேதுபதியின் வேகத்திற்கு நடுவே கடவுள் போட்ட கற்கள் ஒன்றிரண்டு அவரை லேசாக தடுமாற வைத்தாலும், மனிதர் இன்னும் ஸ்டிராங்காகதான் இருக்கிறார். சினிமாவில் ஜெயிப்பதற்கு முன்பே கேட்ட ‘மெல்லிசை’ படத்தை சமீபத்தில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடித்தும் விட்டார். இந்த நேரத்தில் சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பு கேட்ட வன்மம் என்ற படத்தை நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக ஆரம்பிக்க சொல்லியிருக்கிறார். இந்த படத்தை இயக்குகிறவர் ஜெய் கிருஷ்ணா. கமல், ஆர்.கே.செல்வமணி, சிம்பு போன்றவர்களுடன் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறாராம் இவர்.
இந்த கதையை விஜய் சேதுபதியிடம் நான் சொல்லி முடித்ததும் அப்படியே எழுந்து என்னை கட்டி புடிச்சுகிட்டாரு என்கிறார் ஜெய் கிருஷ்ணா. அப்படின்னா விஜய் சேதுபதிக்குன்னே ஒரு ஸ்டைல் இருக்குமே, இந்த கதையும் அப்படிதானா என்றால் ஜர்க் அடிக்கிறார் ஜெய். இல்ல சார்… இது கொஞ்சம் ஆக்ஷன் கலந்த யதார்த்த சினிமாவா இருக்கும். இதுவரைக்கும் வந்த விஜய் சேதுபதி படத்திலேயே இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்னு வச்சுக்குங்களேன் என்றார்.
கொஞ்சம் வளர்ந்துவிட்டாலே, எல்லா புகழும் எனக்கே சேரணும் என்று நினைக்கும் ஹீரோக்கள் பலர், இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிக்கவே தயங்குவார்கள். ஆனால் விஜய் சேதுபதி அப்படியல்ல. இந்த படத்தில் அவருடன் கழுகு கிருஷ்ணாவும் நடிக்கிறார். அதுவும் விஜய் சேதுபதிக்கு ஈக்குவலான ஹீரோவாகவே. படத்தில் இரண்டு ஹீரோ இருந்தாலும் ஒரே ஹீரோயின்தான். அவர்? சுனைனா!
அதென்னவோ தெரியல… விஜய் சேதுபதிக்கு மட்டும் முந்தா நாளு கிண்டுன பிரியாணிதான் சிக்குது!