‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது! அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்
தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது. அஜீத் வீட்டிற்கு தபால் எடுத்து வரும் தபால்காரர் தனியாக போர்ட்டர் வைக்க வேண்டிய அளவுக்கு கண்ணீர் கடிதங்கள் நிரம்பி வழிகிறதாம். ‘எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டங்களின் மீதெல்லாம் விருப்பம் இல்லை’ என்று இதற்கு பதிலும் சொல்லிவிட்டார் அஜீத்.
இந்த நிலையில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியது இந்த காரசாரமான விவாதத்தில் மேலும் சில சுள்ளிகளை அள்ளிப் போட்டிருக்கிறது. ‘தலைவா’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டு பேசிய விஜய், ‘வெற்றியை தீர்மானிப்பது ரசிகர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்ப சூழ்நிலையும்தான். நான் ஒரு போதும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டவன் இல்லை. கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக இருக்கக் கூடாது’ என்றார். தனது படம் ஒன்றில் ‘இங்கு எவண்டா தல?’ என்று கேட்டவர்தான் இதே விஜய். ஏதோ பொடி வைத்துதான் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் படுபயங்கரமாக விசிலடித்து இந்த வார்த்தைகளை ஆமோதிக்க, அவ்வளவு பேசியதே அதிகம் என்று நினைத்திருப்பார் போல. விறுவிறுவென கீழே இறங்கினார் அவர்.
இதையடுத்து அஜீத்தும் விஜய்யும் ஒரே படத்தில் இணைவதாக கிளப்பிவிடப்பட்டிருக்கும் தகவல்கள் முற்றிலும் பொய் என்பது இப்போதாவது மக்களுக்கும் இவ்விரு ஹீரோக்களின் தீவிர ரசிகர்களுக்கும் புரிந்திருக்கும்.