அரசு தரும் இலவசத்தை குத்திக் காட்டுகிறாரா விஜய்?
வாய் சும்மாயிருந்தாலும், வழிமுறை சும்மா விட்டால்தானே? கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கோவைக்கு சென்றிருந்தார் விஜய். அங்குள்ள இந்துஸ்தான் கல்லுரியில் மீட்டிங். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய விஜய் கூறிய கருத்துக்கள் சும்மா போற போக்கில் சொன்னவையா? அல்லது திரும்புகிற இடமெல்லாம் இலவசம் கொடுத்து மக்களை ‘இன்புற’ வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசை லேசாக குத்திக் காட்டியதாக எடுத்துக் கொள்ளலாமா?
அவர் அங்கு பேசியதன் முழு விபரம் கீழே- கடைசி பாராவில் அவர் பேசியதைதான் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ரத்தத்தின் ரத்தங்கள்?
கத்தி பட வெற்றி சந்தோஷத்தில் உங்களது கல்லூரி காலத்தில் உங்களை எல்லாம் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. கத்தி, என்னோட கேரியரில் ரொம்ப ரொம்ப முக்கியமான படம். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய முக்கியமானவற்றில் முதன்முதலாக உள்ள உணவைத் தருகிற விவசாயப் பிரச்சினையை சொன்னதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். எத்தனை பேர் வாழ்வை இழந்து வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள், எத்தனை பேர் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவிய படம். இந்த வாய்ப்பை கொடுத்த முருகதாஸுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பசியுடன் இருப்பவருக்கு மீன் துண்டுகளை கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நாம் கேள்விப்பட்ட பழமொழி. என்னைப் பொறுத்தவரை மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது மட்டும் இல்லாமல், மீன் பிடிப்பதற்குத் தேவையான வலையையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஏழை மக்களின் வாழ்வு உயரும்.
கத்தி படத்தில் நச்சுன்னு ஒரே வரியில் சொன்ன டயலாக் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதாவது, “நாம் பசிக்கு சாப்பிட்டது போக மீதி இருக்கிற உணவு அடுத்தவங்களுக்கு”. நாளைக்கு சேர்த்து வைப்பதை விட ஏழைகளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா குறைந்தா போய்விடப் போகிறோம். ஓர் ஊரில் நிறைய மருத்துவமனை இருந்தால் அந்த ஊரில் ஆரோக்கியம் குறைவாக இருக்குன்னு அர்த்தம். கடன் அள்ளி அள்ளி கொடுத்தால் ஏழைகள் அந்த ஊரில் அதிகம் இருக்காங்கனு அர்த்தம். எப்போது இந்த நலத் திட்டங்கள் கொடுப்பது நிறுத்தப்படுகிறதோ அன்றுதான் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார்.