…ங்ணா, வம்புல மாட்டி விட்றாதீங்க!

‘…ங்ணா, இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கேன். இந்த நேரத்துல இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்றது? தேவையில்லாம வம்புல மாட்டி விட்றாதீங்க’ என்று சமீபத்தில் தன்னை சந்தித்த பிரபல வார இதழ் நிருபர் ஒருவரிடம் அலறிய விஜய், அவர் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கும் மட்டும் பதில் சொல்லி அந்த சந்திப்பை நிறைவு செய்தாராம். அந்த பேட்டியும் ஏதோ காமா சோமா என்கிற லெவலில்தான் வெளிவந்திருக்கிறது. அந்தளவுக்கு எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க துவங்கியிருக்கும் விஜய், பிரதமர் நரேந்திரமோடிக்கு அவ்வளவு விளக்கமாக ஒரு கடிதம் எழுதியிருப்பது ஆச்சர்யம்தான்.

இன்னும் சில வருடங்களுக்கு மாநில அரசியல் எடுபடாது என்கிற அச்சத்தை விஜய்க்கு ஏற்படுத்திவிட்டது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள். இந்த நேரத்தில் ஆக்டிவாக இருப்பதை போலவாவது காட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ‘கத்தி’ ரிலீஸ் நேரத்தில் கத்தக் கூட தெம்பில்லாமல் ஆகிவிடுவார்கள் தனது ரசிகர்கள். இதையெல்லாம் மனதில் வைத்துதான் நரேந்திரமோடிக்கு அவர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்று கிசுகிசுக்கிறார்கள் இங்கே.

சேவை வரி என்கிற விஷயம் கடந்த காங்கிரஸ் அரசு காலத்திலேயே முடிவு செய்யப்பட்டு அதற்கான எதிர்ப்புகளும் அப்போதே முற்றிவிட்டது. குழு குழுவாக கிளம்பி இந்த சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள் சினிமா பிரமுகர்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த விஜய், இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது  எதற்காக என்கிற கேள்வி எழாமல் இல்லை. எனக்கும் மோடிக்குமான உறவு கெட்டி என்பதை காட்டிக் கொள்வதற்காகவும் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அவர் எழுதிய கடிதத்தின் நகல் இதோ-

பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமாத்துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன். சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அரசுக்கு பல கோடி வருவாயை ஈட்டித் தரும் துறையாகும்.

ஆனால் கடந்த பல வருடங்களாக சினிமா, கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன. மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, சினிமா தொழிலில் கொடிகட்ட பறிந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும், விரக்தியாலும், வேறு தொழிலுக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிக்கப்படுவதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர் சம்மேளனும், சேவை வரியை ரத்து செய்ய போராடி, மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது.

ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கிவரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும், பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகம் ஊட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுதான் விஜய் எழுதியிருக்கும் கடிதம். அணிலுக்கு மோடி செய்யப் போகும் பதிலுதவி என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்த இயக்குனர்

நடிகை ஒருவரை தேடிப்பிடித்து தங்களது படத்தில் ஹீரோயினாக்குவதுதான் ‘குதிரை கொம்பு’ என்பார்கள் இயக்குனர்கள். ஒரு இயக்குனர் குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். சலோனியை பார்த்தால்...

Close