சகாப்தம் இயக்குனருக்கு(ம்) ‘பளார் ’ விட்டாரா விஜயகாந்த்?
தேமுதிக வின் ‘முரசு’ சின்னம் பறிபோய் விடும் போல தெரிகிறது. தேர்தல் ரிசல்ட்தான் அதற்கு காரணம் என்பது மக்களுக்கு தெரியாத விஷயம் அல்ல. அந்த சின்னம் போனால், விஜயகாந்த் வேறு எந்த சின்னத்தை கேட்பார்? பேசாமல் அவருக்கு ‘வீங்கிப்போன கன்னம்’ ஒன்றையே சின்னமாக கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அவர் தன் கட்சி தொண்டர்களையும், வேட்பாளர்களையும் பொளேர் பொளேரென அறைந்து வருவதால் இந்த கன்னம் சின்னம் இன்னும் பொருத்மாக இருக்கும்.
சமீபத்தில் விஜயகாந்தின் கைகள் பட்டு கன்னம் பழுத்த நபர்களின் லிஸ்ட் எடுத்தால் அது மளிகை கடை பில் போல நீளமாக வரும் போல தெரிகிறது. ‘சகாப்தம்’ படத்தின் இயக்குனர் சந்தோஷை அவர் தன்னுடைய பழுக்க காய்ச்சிய திருக்கரத்தால் அறைந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, (ரிசல்ட் என்ன என்பதை தெரிந்தோ என்னவோ) மகனின் ஷுட்டிங் ஏரியாவுக்கு சென்று விட்டார் விஜயகாந்த். அதுவரைக்கும் தனி காட்டு ராஜாவாக படம் எடுத்துக் கொண்டிருந்த சந்தோஷ் அதற்கப்புறம் இவர் சொல்வதை மட்டுமே எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானாராம். ஒருநாள் விஜயகாந்த் சொன்ன ஒரு விஷயத்தை இவர் ஆமோதிக்காமல் பதிலுக்கு வேறொரு கருத்து சொல்லப் போக, கன்னம் வீங்கியதுதான் மிச்சம்.
சட்டென கோபித்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டாராம் அவர். பல நாட்கள் தேடியும் கிடைக்கவேயில்லை. ‘நல்லதுக்கு தானப்பா சொல்றேன். என்னுடைய அனுபவம் என்ன? அந்த சின்னப் பையனோட வயசென்ன? நான் அடிச்சா பொருத்துக்கக் கூடாதா?’ என்றெல்லாம் கவலைப்பட்ட விஜயகாந்த், தனது அடிப்பொடிகளிடம், ‘சந்தோஷ் எங்கேயிருந்தாலும் கொண்டு வாங்க’ என்று கூறிவிட்டாராம். எப்படியோ கண்டுபிடித்து அவரிடம் பேசியிருக்கிறார்கள். ‘நான் வரலைங்க’என்றாராம் அவர். பிறகு எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவரை விஜயகாந்திடம் அழைத்து வர, ‘தம்பி… நான் உங்கிட்ட உரிமையா நடந்துகிட்டேன். மனசுல வச்சுக்க வேணாம். உனக்கு சுதந்திரமா டைரக்ட் பண்ணணும். அவ்வளதானே? பண்ணு…’ என்றாராம் கூலாக. இதில் மனம் திருப்தியுற்ற சந்தோஷ் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்படியிருந்தும், இரண்டு நாட்களுக்கு பிறகு மொத்த ஷுட்டிங்கையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டாராம் விஜயகாந்த். வேறு வழியில்லாமல் அதற்கு பழகிவிட்டாராம் சந்தோஷ். இப்படியாகதான் வளர்ந்து கொண்டிருக்கிறது சகாப்தம்.
முக்கிய குறிப்பு- இந்த படத்தின் ஷுட்டிங்குக்காக மலேசியா போயிருந்த விஜயகாந்த், அங்கும் தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ஒரு ரசிகருக்கு கன்னத்தில் வலிக்க வலிக்க ஒரு பளார் கொடுக்க, மலேசியாவே திருதிரு….!