விஷாலுக்கு விஜயகாந்த் சப்போர்ட்! அதிரடி திருப்பம்!
அரசியலில்தான் அமாவாசை போலாகிவிட்டது தேமுதிக. ஆனால் சினிமாவை பொருத்தவரை விஜயகாந்தின் பேச்சுக்கு இப்போதும் ராணுவ மிடுக்குதான்! அரசியலை ஒரு கண்ணிலும் சினிமாவை இன்னொரு கண்ணிலுமாக வைத்து நேசிக்கும் அவர், கடந்த சில மாதங்களாகவே இங்கு நடக்கும் அடிதடி அக்கப்போர்களை கவனித்துதான் வருகிறார். நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் விஷால் இவரை சந்திக்க நேரம் கேட்டபோது, “வேணாம் தம்பி. நீங்க என்னை பார்க்க வந்தால், அரசு உங்களுக்கு எதிராகிடும். நீங்க நினைச்சது நடக்காது. அதனால் நீங்க உங்க வேலையை பாருங்க. என் ஆசி எப்பவும் உண்டு” என்று கூறிவிட்டார்.
ஆனால் இப்போது அவர் வீட்டிலிருந்தே விஷாலுக்கு உதவிக்கரம் நீள்வதாக காதைக் கடிக்கிறது கோடம்பாக்கம். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஒரு பக்கமும், ஜே.கே.ரித்தீஷ் இன்னொரு பக்கமுமாக நின்று சங்கத்தை ஆட்டிப்பார்க்க நினைப்பதை யாவரும் அறிவார்கள். ஜே.கே.ரித்தீஷ் டி.ராஜேந்தரை தலைவருக்கு நிற்க வைத்துவிட்டு, தான் செயலாளர் ஆக நிற்க ஆசைப்படுகிறாராம். விஷால் எடுத்திருப்பது வேறொரு முடிவு.
விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை தலைவராக நிற்க வைத்துவிட்டு அவருக்கு சப்போர்ட் செய்வது. தேவைப்பட்டால் நடிகர் சங்க செயலாளர் பொறுப்பை உதறிவிட்டு தானே தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் நிற்பது. தேர்தல் நேரத்தில் விஷாலின் நம்பிக்கை என்னென்ன பாடு படுமோ? அது தனி.
ஆனால் இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை விஜயகாந்தின் பரிபூரண ஆசியோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் விஷால்.
To listen audio click below :-