அடப்பாவிகளா… இவரையும் கெடுத்துட்டீங்களா?
வின் ஸ்டார், கன் ஸ்டார், விக்கல் ஸ்டார், முக்கல் ஸ்டார், கோல்டு ஸ்டார், கொய்யாக்கா ஸ்டார் என்று தெருவுக்கு தெரு ஸ்டார்கள் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால், முதல் படத்திலேயே தனக்கென ஒரு பட்டத்தை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் இவர்களை, ஒரு வித பீதியோடு கவனிக்க ஆரம்பித்திருக்றார்கள் ரசிகர்கள். முதல்வர் நாற்காலியை புடுங்காம விட்றதில்ல… என்ற கொள்கையோடு முதல் படத்திலேயே பாட்டு பைட்டு என்று பம்மாத்து காட்டுவார்கள் இவர்கள்.
அடுத்த லெவல் ஹீரோக்கள் வேறு மாதிரி. ரஜினி, கமல், விஜய், அஜீத் லெவலுக்கு உயர்ந்த பின்னால் வெறிபிடித்த ரசிகர்களால் பட்டம் கொடுக்கப்பட்டு அதை படத்தில் பயன்படுத்தினால் கூட தப்பில்லை. ஆனால் ஏதோ ஒரு வேகத்தில் ஆசையில் பெயருக்கு முன்னால் பட்டத்தை போட்டுக் கொள்கிறார்கள் சிலர். புரட்சித்தளபதி விஷால், அப்படி நாலைந்து படத்தில் போட ஆரம்பித்ததும், பிற்பாடு நமக்கு அதெல்லாம் தேவையில்லைங்க என்று புத்தி தெளிந்ததும் ஏனென்று தெரியவில்லை. விஜய் இளையதளபதின்னா நான் சின்ன தளபதிங்க என்று உளறி வந்த பரத்துக்கு அதற்கப்புறம் ஒரு படமும் ஓடவில்லை. ஆனால் பட்டத்தை மட்டும் விடுவதாக இல்லை அவர்.
டாப் ஸ்டார் பிரசாந்தை டீ தூள் விளம்பரத்திற்கு கூட லாயக்கில்லை என்று ஒதுக்கிவிட்டது சினிமா. இப்படி பட்டங்களால் ஒரு புண்ணாக்குக்கும் ஆகாது என்பதற்கு கண்ணெதிரே உதாரணங்கள் இருந்தும், விஜய் சேதுபதி இனி வரும் படங்களில் பட்டப் பெயர் போட்டுக் கொள்வார் போல தெரிகிறது. அந்த நல்ல காரியத்தை முதலில் ஆரம்பித்து வைத்திருக்கிறார் நம்ம சீனு ராமசாமி. அவர் இயக்கி வரும் தர்மதுரை படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி என்று டைட்டிலில் போடுகிறார்களாம்.
“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை” என்று இவர் பிடிவாதமாக மறுத்தும், “ம்ஹும் மாட்டேன். போட்டே தீருவேன்” என்கிறாராம் சீனு.
ஒரு யதார்த்தமான மனுஷனை இப்படிதான் மிருதன் ஸோம்பியாக்கிடுதே சினிமாவும், அதன் பெருமை மிகு ஜால்ராக்களும்!