நயன்தாராவுடன் விக்ரம் பாங்காக் பயணம்!
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது.
இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் வெவ்வேறு அமைப்பிலான 8 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இவ்வாறு இடைவிடாது படப்பிடிப்பு நடைபெறுவதற்கு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அளிக்கும் முழு ஒத்துழைப்பை காரணமாகும்.
கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, சென்னையில் நடைபெறும் இருமுகன் படப்பிடிப்பில் 21ம் தேதி கலந்து கொள்ள உள்ளார். இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் மூன்று பாடல் காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் கார்கி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமைக்க உள்ளார்.
விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.