மிட் நைட்டில் அழைத்த விக்ரம்!
“பத்து எண்ணுறதுக்குள்ள என்னதான் செய்துவிட முடியும்? பத்து எண்ணுறதை தவிர….!” இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டால் எந்த டைரக்டருக்குதான் தலை கிர்ரென சுற்றாது? கிட்டதட்ட அப்படியாகியிருந்தார் விஜய் மில்டன். சீயான் விக்ரம் நடிக்கும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்தின் இயக்குனர்.
“இந்த படத்தில் விக்ரம் கார் டிரைவரா நடிக்கிறார். ஹைவேஸ்ல 150 கி.மீ ஸ்பீட்ல போறோம்னு வைங்க. அப்ப தொலைவில் ஒரு லாரி குறுக்கே வந்துட்டா டிரைவருக்கு ஒவ்வொரு நொடியும் ரொம்ப முக்கியமான நொடிகள்தான். பத்து எண்ணுறதுக்குள்ள மைண்ட் கால்குலேஷன் போடும். இப்ப பிரேக் போட்டா அந்த லாரியில் இடிக்காம நிக்குமா? அல்லது லெப்ட்ல திருப்பிடலாமா? அல்லது ரைட்ல திருப்புனா சரியா வருமா? பின்னாடி வர்ற வண்டி மோதக் கூடிய சான்ஸ் இருக்கா? இப்படியெல்லாம் அந்த பத்து வினாடிகளுக்குள் மனசு கால்குலேஷன் போடும். அதுக்காகதான் இப்படியொரு தலைப்பு வச்சேன்” என்றார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிறையவே பேசினார் விஜய் மில்டன். “கோலிசோடாவின் வெற்றிதான் பத்து எண்ணுறதுக்குள்ளே. பத்து எண்ணுறதுக்குள்ளேவின் வெற்றிதான் ஏ.ஆர்.முருகதாசின் நட்பு” என்று அடுக்கடுக்காக பேசிக்கொண்டிருந்த மில்டன், இந்த படம் வந்த கதையை சொன்னார். ஹை…! வியப்பேதான்.
“கோலிசோடா படம் பார்த்துட்டு நைட் பனிரெண்டு மணிக்கு மேல போன் அடிச்சார் விக்ரம். இப்பதான் கோலிசோடா பார்த்தேன். பிரமாதம். எனக்கு சூட் ஆவுற மாதிரி கதை இருக்கான்னு கேட்டார். நான் இருக்குன்னு சொன்னேன். அப்படின்னா உடனே வாங்கன்னார். சார்… இப்ப மிட் நைட்டா இருக்கு. அதனால் விடியட்டும். கிளம்பி வர்றேன்னு சொன்னேன். மறுநாள் நான் போய் இந்தக் கதையை சொல்ல, அதற்கப்புறம்தான் இந்த ஃபாக்ஸ்டார் மற்றும் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகப் போவுதுன்னே எனக்கு தெரியும்” என்றார்.
படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் ஆக்ஷன் பிச்சுக்குது இல்ல…? நிஜத்தில் இது ஒரு லவ் ஸ்டோரியாம். ஆனால் டூயட் இல்லாத லவ் ஸ்டோரி. விக்ரமை நம்புறதை விட விஜய் மில்டனை நம்புறோம்! கெலிப்பீங்க சார்…