என்னை தடுமாற வச்ச ஹீரோயின்? போட்டு உடைக்கும் விக்ரம் பிரபு
தமிழ் தெரிஞ்ச ஹீரோயினுக்கும் தமிழ் தெரியாத ஹீரோயினுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கோ, இல்லையோ? ஒரே ஒரு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். அது பாசாங்கு இல்லாத நடிப்பு. தமிழ் தெரிந்த ஹீரோயின்கள் தமிழில் பேசப்படும் டயலாக்கை அதே அர்த்தத்தோடு எதிர்கொண்டு நடிப்பதில் இருக்கிற கிக் வேறு எதில் இருக்கிறது? அதையெல்லாம் விட பெரிய சவுகர்யம் இன்னொன்று. எதிரில் நின்று பர்பாமென்ஸ் கொடுக்கும் ஹீரோவுக்கு எவ்வித தர்ம சங்கடமும் இல்லை. எப்படி?
அதை நாம் சொல்வதைவிட, விக்ரம் பிரபு வாயாலேயே கேட்பதுதான் உத்தமம். சில ஹீரோயின்ஸ் நல்லா மனப்பாடம் பண்ணி கரெக்டா பேசிடுவாங்க. சிலர் மறந்துட்டு வேற எதையாவது பேசிடுவாங்க. அந்த நேரத்தில் நான் என்ன பர்பார்ம் பண்ணுறதுன்னு தடுமாறிடுவேன். இப்போ நான் நடிச்சுகிட்டு இருக்கும் இது என்ன மாயம் படத்தில் எனக்கு ஜோடியா நடிக்கிற கீர்த்தி சுரேஷுக்கு நல்லா தமிழ் தெரியும். கும்கி படத்தில் என்னோட நடிச்ச லட்சுமிமேனனுக்கும் நல்லா தமிழ் தெரியும். அவங்க பாட்டி நல்லா பாடுவாங்களாம். அதையெல்லாம் பாடிக்காட்டுகிற அளவுக்கு அவங்களுக்கு நல்ல குரல் வளம் வேற இருந்திச்சு.
நான் ரொம்ப சிரமப்பட்டது சுரபிகிட்டதான். அவங்களுக்கு சுத்தமா தமிழ் தெரியாது. டென்ஷன் ஆகிட்டா உடம்பை ஸ்டிப்பா வச்சுகிட்டு நிப்பாங்க என்றார். இது என்ன மாயம் என்ன மாதிரியான கதை. அருகிலிருந்த டைரக்டர் விஜய் பேச ஆரம்பித்தார்.
தான் காதலித்த பெண்ணை பத்து வருஷம் கழிச்சு வேறொரு ஊர்ல சந்திக்கிறார் ஹீரோ. கிட்டதட்ட ரெண்டு பேருமே வெவ்வேறு வாழ்க்கைக்கு அடாப்ட் ஆகிட்ட சூழ்நிலையில் இந்த சந்திப்பு என்ன மாதிரியான விளைவுகளை தருது என்பதை மிக அழகான காதல் கதையா சொல்லியிருக்கேன். படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, இன்னொரு பாலாஜி, ரேடியோ மிர்ச்சி அஜய் மூணு பேரையும் நடிக்க வச்சுருக்கேன். படம் கலகலப்பா ரன் ஆகறதுக்கு அவங்களோட பங்கு நிறையவே இருக்கு என்றார்.
இது என்ன மாயம் படத்தில் காமெடியை தோளில் சுமந்திருக்கும் இவர்கள், நிஜமாகவே ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டால், அதுதான் பெரிய மாயம்! பார்க்கலாம்…