விக்ரம் விமர்சனம்

கோட்டை முனி கொட்டாவி விட்டது போலாகிவிடுகின்றன சில பிரமாண்டங்கள். ஏதோ ஜானர், ஸ்பேனர் என்றெல்லாம் சொல்லி, ‘படம் பார்ப்பது எப்படி?’ என்று கிளாஸ் எடுக்கிறார்கள் பதினெட்டுகள். இந்த பரிதாப யுகத்தில், கண்ணுக்கு தெரியாத தொலைவில் நின்று கொண்டு கதறக்கூட தெம்பில்லாமல் தவிக்கிறார்கள் அவ்வை சண்முகிகளும், பரியேறும் பெருமாள்களும். தேர்ந்த திரைக்கதைகள் தேவையில்லாத ஊரில், துப்பாக்கி ரவைகளை முழுங்கிவிட்டு காட்டுக் கூச்சலிடுகிறான் விக்ரம்.

ஹ்ம்ம்ம்… இது அன்பறிவ், திலிப் சுப்பராயன்களின் காலம்.

ஆங்காங்கே தென்படுகிற சம்பவங்களை அடர்த்தியாக அடுக்கி ஸ்டாப்ளர் அடித்தால் பின் வரும் கதை கிடைக்கும். அது?

பல நூறு கோடி மதிப்புள்ள கோக்கைன் போதைப்பொருளை கைப்பற்றி அதை ஓரிடத்தில் ஒளித்து வைக்கிற அதிகாரி காளிதாசை போட்டுத் தள்ளுகிறது கோக்கைன் கும்பல். மகனை கொன்றவனையும், அவன் ஒளித்து வைத்த கோக்கைனையும் தேடிக் கிளம்புகிறார் ரா அதிகாரி கமல். ஆனால் இந்த கமல் அதிகாரியல்ல, ஒரு போதை ஆசாமி என்பது போல நகர்கிறது படம். (அவ்வளவும் நடிப்பா கோப்ப்ப்ப்பால்?) சரியாக ரெண்டாவது ரீலில் அவர் இறந்து போக, ‘அதுக்குள்ளவா படம் முடிஞ்சுருச்சு-’ என்று அநாவசிய திடுக்கிடலுக்கு ஆளாகும் ரசிகனுக்கு சிலபல மேஜிக்குகளை காட்டி கட்டிப் போடுகிறார் லோகேஷ் கனகராஜ்.

இருவகையாக பிரிக்கப்படும் அந்த மேஜிக்குகளின் பெயர் விஜய்சேதுபதி, மற்றும் பகத்பாசில்.

முதல் பாதி முழுக்க பகத் பாசிலின் ஆட்டம்தான். தன் கூரிட்டி கண்களால் பில்டிங் சுவர், க்ரில் கேட் என்று எல்லாவற்றையுமே முறைத்துக் கொண்டு திரியும் அவர், நடு நடுவே காயத்ரியிடம் லவ்விலும் ஈடுபடுவது ரிலாக்ஸ். ‘நீ என்ன வேலை பண்றே?’ என்று நான் கேட்கிற நேரம் உன்னை விட்டு போயிருப்பேன் என்று முன்கூட்டியே காயத்ரி சொல்லிவிடுவதால், அந்த கெட்ட நிகழ்ச்சிக்காக முன் தயாராகிவிடுகிறது மனசு. அந்த காட்சி வரும்போது அதனாலேயே நோ பதற்றம்.

கருப்பட்டி மூட்டை போலவே இருக்கிறார் விஜய் சேதுபதி. வில்லந்தானே? எப்படி வந்தா ஒனக்கென்ன? என்கிற அலட்சியம் தெரிகிறது அதில். நேரடியாக போலீஸ் கமிஷனரே தன் வீட்டுக்கு வருகிற அளவுக்கு தெனாவெட்டு தில்லாலங்கடிகள் கொண்டவராக இருப்பினும், இவரை யாரென்றே தெரியாமல் ஒரு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இருப்பது காமெடி. ஆனாலும் இவரது அறிமுகக்காட்சி, அடி வயிற்றில் சொரேர் கிளப்புவதை மறுக்கவே முடியாது.

தன் தங்கப்பல் தெரிய வக்கிர சிரிப்பு சிரிக்கும்போதெல்லாம் கிலி கிளம்புகிறது. அதே நேரத்தில் இவரை சயின்ட்டிஸ்ட் போலவும், டாக்டர் போலவும் சித்தரிப்பதெல்லாம் சுத்த பேத்தலின்றி வேறென்ன? (வி.சே வின் பெண்டாட்டிமார்கள் சூழ ஒரு பாடல் காட்சி இருந்திருந்தால் சர்வ ரோக நிவாரணம் கிடைத்திருக்கும்)

இந்த படத்தில் கமலுக்கு பேரன் சென்ட்டிமென்ட். சற்றே பேசுகிற வயதில் இருப்பானென காட்டியிருந்தால் கூட அது வொர்க்கவுட் ஆகியிருக்கும். இதுவோ பால்குடி குழந்தை. தம்படி பிரயோஜனமில்லை. இதுபோன்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், 68 வயதானாலும் கமலின் பாய்ச்சலில் துளி கூட தொய்வில்லை. சிவகாசி பட்டாசு பேக்டரியை குத்தகை எடுத்தது போல சுடுகிறார்… சுடுகிறார்… சுட்டுக் கொண்டேயிருக்கிறார். இந்த வீடியோ கேம் விளையாட்டுதான் படத்தின் பலமே என்கிறது லேட்டஸ்ட் புள்ளி விபரங்கள். ஐயோடா!

சரி, சமூகத்தின் பால் அக்கறை கொண்ட கமலின் டயலாக் பங்களிப்பென்ன? ஒரு நீண்ட வசனத்தை பேசியிருக்கிறார். சத்தியமாக அது கமல் பிராண்ட்தான். இந்த ஐந்து நிமிஷத்தை மட்டும் லோகேஷ் கனகராஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டதற்கு நன்றி ‘அய்யா’.

கமல் படத்தில், கமலே இல்லாத போர்ஷன் கிட்டதட்ட முக்கால்மணி நேரம். இந்த சுதந்திரத்தை வழங்கியதற்கும் சேர்த்து ஒரு வணக்கம் போடலாம் அவருக்கு.

எல்லாரையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ஒரு கேரக்டர். ஏஜென்ட் டினா என்று அவரைப் பற்றிய விபரம் வரும்போது ஆர்ப்பரிக்கிறது தியேட்டர். குமாரவேலு, சந்தான பாரதியெல்லாம் கூட, ரா ஏஜன்ட்டுகள். நமட்டு சிரிப்பு வராமல் அதை நிஜமாக்குகிறது காட்சிகள். படத்தில் ‘சின்னதாக’ வந்தாலும் பெரிதாக கவனம் ஈர்க்கிறார் அந்த கட்டிங் பிளேயர் தம்பி.

கடைசி காட்சி- நட்புக்காக வருகிறார் சூர்யா. ரோலக்ஸ் என்கிற அந்த கேரக்டர் பின்னாளில் வரப்போகும் ஒரு படத்திற்கான டீசராக கூட இருக்கலாம்.

துண்டு துண்டுடாக கோர்வைக்குள் அடங்காத இந்தப் படத்தை, கோர்த்தெடுத்த விதத்தில் எடிட்டர் பிலோமின்ராஜ் கவனம் கொள்கிறார்.

போர்க்களத்தில் ஒரு சோல்ஜர் போலவே இருந்திருப்பார் கேமிராமேன் க்ரிஷ் கங்காதரன். பாராட்டுகள்.

முக்கியமான தளபதியே இசைமையப்பாளர் அனிருத்துதான். பேய் இசை என்பார்களே, அப்படி. இரைச்சலுக்கும் இசைக்கும் நடுவே நின்று மிரட்டியிருக்கிறார் மனுஷன்.

நாயகன் படத்தில், ‘இனிமே இப்படிதான்’ என்றொரு டயலாக் பேசுவார் ஜனகராஜ். இனிமே இப்படிதான் இருக்குமோ தமிழ்சினிமா? ஸ்டன்ட் யூனியனை வாழ வைக்க உழைப்பார்களோ நம்ம ஹீரோக்களும், இயக்குனர்களும்?

எது எப்படியிருந்தாலும், கமல் என்கிற காற்றழுத்த தாழ்வு மண்டலம் வசூலை நோக்கி ‘மய்யம்’ கொள்ள ஆரம்பித்ததுதான் அதிசயத்திலும் அதிசயம்.

விக்ரம் என்ற இந்தக் கப்பலின் கேப்டன் லோகேஷ் கனகராஜ் போதையை அழிப்பதாக ஒரு படமெடுத்து வேறொரு புதுவித போதையை இளைஞர்கள் மத்தியில் விதைத்திருக்கிறார். இந்த உழைப்புக்காக பாராட்டலாம். ஆனால் இந்த படைப்புக்காக?

விக்றோம்… நல்லதோர் ரசனையையும் சேர்த்தே விக்றோம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பீஸ்ட் விமர்சனம்

ஆகாயத்தையே அரை டவலால் மூடிவிடுகிற அசகாய சூரர்கள் சினிமாவில் பெருகிவிட்டார்கள். கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கதைக்குள் போட்டுக் குலுக்கி, கண்மூடித் தனமாக வதக்கி, பல கோடி ரூபாய்களை...

Close