சிட்டிக்குள்ளேயே லேண்ட் தருவோம்! விக்ரமன் அறிவிப்பால் ஏழை இயக்குனர்கள் ஜில்!
சில தலைமையின் கீழ் சங்கங்கள் இயங்கும்போதுதான் அதை பொற்காலம் என்பார்கள் உறுப்பினர்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இராம.நாராயணன் இருந்தபோது அதை பொற்காலம் என்றார்கள். அதற்கப்புறம் இன்றுவரை அங்கே குடுமிப்பிடியும், குழாயடி சண்டையும்தான் அன்றாட நிகழ்ச்சி நிரல்! நடிகர் சங்கத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கண்ணாடி டம்ளரை உடைத்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்துதான் டீயே குடிக்கிறார்கள் அங்கே. இவ்விரு சங்கங்களும் கண்களை அகல விரித்து, அட ங்கொப்புறானே… என்று பொறாமைப்படுகிற அளவுக்கு இயக்குனர் சங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் விக்ரமன். அந்த சங்கத்தின் லேட்டஸ்ட் சாதனை, சண்டை சச்சரவுகள் இல்லாமல் தேர்தலும் இல்லாமல் ஒரு நிர்வாக குழுவை உருவாக்கியதுதான்.
விக்ரமன், மற்றும் செல்வமணியை முதலில் போட்டியின்றி தேர்ந்தெடுத்தார்கள் உறுப்பினர்கள். ஏன்? உறுப்பினர்களுக்கு அவ்வளவு சலுகைகளை பெற்றுத் தந்திருக்கிறார் அவர். உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் நன்கு படித்தால் அவர்களுக்கு சென்னையிலிருக்கும் பல்வேறு என்ஜினியரிங் கல்லூரிகளில் இலவச சீட் வாங்கிக் கொடுப்பதில் துவங்கி, ஏழை இயக்குனர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அதுவும் இலவசமாகவே பெற்றுத் தந்தது வரை, இவரது காலத்தை பொற்காலம் ஆக்கிவிட்டார் விக்ரமன்.
அவரது அடுத்தகட்ட பாய்ச்சல் இதுதான். தங்கள் சங்கத்திலிருக்கும் எல்லா உறுப்பினர்களுக்கும் இலவச நிலம் தருவது… இந்த வருடத்திற்குள்ளேயே பெரும் தொகையை புரட்டுவேன். அதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம். எல்லா உறுப்பினர்களுக்கும் அரை கிரவுன்ட் நிலம் தருவோம். அதுவும் செங்கல்பட்டு விழுப்புரம் தாண்டியல்ல. இதே சென்னைக்குள்… அதுவும் பரபரப்பான சிட்டிக்கு நடுவில் என்கிறார் அவர்.
இதுபோல நிலம் வாங்கி தரும்போது கூடவே ஊழல் குற்றச்சாட்டும் வருமல்லவா? அதற்கும் தனது வெள்ளை உள்ளத்தை திறந்து வைத்துவிட்டார் விக்ரமன். எப்படி? பணம் சேர்ப்பதற்கு வழி வகுத்து, அந்த பணத்தை முறையாக பேங்கில் சேர்க்கும்வரைக்கும்தான் அவர் கையில். அதற்கப்புறம் நிலம் வாங்கி, அதை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க, டைரக்டர் ஹரி போன்ற திறமைசாலிகளை அழைத்து அவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவாராம்.
ஒரு திட்டம் போடும்போதே அதில் எவ்வளவு அடிக்கலாம் என்று கணக்கு போடும் பக்கிரிகளுக்கு மத்தியில், இப்படியொரு ஜாங்கிரி மனுஷன். பல்லாண்டு வாழ்க விக்ரமன்!