தலைகீழ தொங்குனாதான் வலி தெரியும்! வலிக்க வலிக்க நடித்த விநாயக்ராஜ்
சமீபத்தில் வெளிவந்த சிகரம் தொடு படத்தில் நடித்திருந்தார் விநாயக் ராஜ். அந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் மூவரில் ஒருவர்தான் இந்த விநாயக். தமிழ்சினிமாவில் எல்லாரது மனசையும் கொள்ளையடிக்க வந்தவன் நான். என்னை ஏடிஎம் கொள்ளைக்காரனாக்கிவிட்டார் கவுரவ் என்று விசேஷமாக பேச ஆரம்பிக்கிறார் அவர். படம் வெளியானவுடன் வரிசை கட்டி பாராட்டுகளை வாங்கியிருக்கிறார். அதனால்தான் இந்த உற்சாகம். புனே பிலிம் இன்ஸ்டியூட் ஸ்டூடன்ட் என்கிற தனி அடையாளமும் இருக்கிறது விநாயக் ராஜிடம்.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள “இடம் பொருள் ஏவல்”, சீனு ராமசாமி இயக்கும் மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும் பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என்று அதற்குள்ளாகவே அரை டஜன் படங்கள் கையிலிருக்கிறது இவருக்கு.
சினிமாவுல ஜெயிக்கணும்னா தலைகீழ நின்னாவது ஜெயிச்சுரணும் என்பார்கள். முயற்சியுடையார் லிஸ்ட்டில் முதலிடத்தில் வைக்க பல பேர் இருந்தாலும், விநாயக் ராஜின் பெயரையும் கட்டாயம் சேர்க்கிற அளவுக்கு ஒரு காரியம் நடந்திருக்கிறது சிகரம் தொடு படத்தில். என்னவாம்? தலைகீழே தொங்குவது போல ஒரு காட்சி. அதுக்கென்ன? நடிச்சுரலாம் என்று இவர் சந்தோஷமாக கூறிவிட்டாலும், தொங்குகிற நேரம் அரை மணி நேரமல்ல, ஆறு மணி நேரம். தலை கிர்ரென்று சுற்றியிருக்குமே? டைரக்டர் சொன்னவுடன் சுற்ற ஆரம்பித்த தலை அதற்கப்புறம் தொங்கவிட்டு அவிழ்க்கும் வரை தொடர்ந்ததாம்.
அதுமட்டுமல்ல, அந்த ரண வேதனையை அனுபவித்தால்தான் புரியும் என்கிறார் விநாயக். உடம்பிலிருக்கிற மொத்த ரத்தமும் கண்களை நோக்கி பாய்கிற வலி அது. தன்னால் மறக்க முடியாத காட்சியும் அதுதான் என்றார். ரகுவரனும் பிரகாஷ்ராஜும்தான் இவரது ஆதர்ஷ ஆக்டர்களாம். வந்தால் அவர்களை போல வர வேண்டும் என்கிறார்.
அதான் ஆறு படம் கையில இருக்கே, அதில் மூணு ஜெயிச்சாலும் ஓஹோங்கிற வாழ்க்கைதான். அனுபவிங்க ராஜா அனுபவிங்க…