விஐபி 2 விமர்சனம்

யானை சைஸ் திருக்கை மீனின் எலும்பையெல்லாம் உருவிவிட்டு மியூசியத்தில் வைத்தால் என்னாகும்? சமயங்களில் அப்படியாகிவிடும் பார்ட் 2 படங்களின் நிலைமை! ஆனால் அந்த கவலை இங்கு இல்லை. முதல் பாகத்தின் எலும்பு, சதை, நாடி, ரத்தம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இரண்டாம் பாகம்தான் இது! பட் சோகம் என்னவெனில், வேகத்திலும் முடிவிலும்தான் கொஞ்சம் ‘விசனம்’ பிடித்து ஆட்டுகிறது.

சமுத்திரக்கனி இல்லேன்னா…?
சரண்யா பொன்வண்ணன் இல்லேன்னா…?
அமலாபால் இல்லேன்னா…?
அட, அந்த மோஃபா மொபெட் இல்லேன்னா….?
என்ற யூக சோக அதிர்ச்சிகளுக்கெல்லாம், சர்வரோக சந்தோஷம் கொடுத்திருக்கிறார் டைரக்டர் சவுந்தர்யா ரஜினி. யெஸ்… இதில் எதுவுமே மிஸ்சிங் இல்லேப்பா!

இந்தியாவின் சிறந்த என்ஜினியர் விருது பெற்ற தனுஷை, இந்தியாவின் சிறந்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவியான கஜோல் தன் நிறுவனத்திற்காக அழைக்கிறார். “மேடம்… நான் இப்ப இருக்கிற இடத்திலேயே இருக்க பிரியப்படுறேன். அதை சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தேன்” என்கிறார் தனுஷ். யூகோ உந்தித்தள்ள… “என் கம்பெனியவே வேணாங்கிறீயா? உன் கம்பெனி என்னாவது பாரு?” என்று சவால் விடும் கஜோல், தொந்தரவுக்கு இந்தியன் மிலிட்ரியை மட்டும்தான் இறக்கவில்லை. மற்றபடி சகல அவஸ்தைகளையும் தனுஷுக்கும் அவரது கம்பெனிக்கும் கொடுக்க, முஷ்டியை தூக்குகிறார் தனுஷ். சில பாட்டில் ரத்தம். சிலபல லட்சங்கள் விரயம் என்று தொடர்ந்த போர், முடிவுக்கு வரும் அந்த நாள்….? படமே சட்டென முடிந்து போகிறது. அட கஜோல் திருந்திட்டாருப்பா!

யானையும் யானையும் சண்டையிடும்போது எந்த யானைக்கு காது போச்சு? எந்த யானைக்கு கழுத்துப் போச்சு? என்று கவலைப்படுகிற நிலையில்தானே ரசிகன் இருப்பான்? இங்கே, எதுவுமில்லாமல் சப்பென்று அனைத்தும் முடிந்து போக, ‘போம்போது கொஞ்சம் விபூதியும், பஞ்சாமிர்தமும் கொடுத்தாலும் கொடுப்பாங்க’ என்று வாசல் பக்கம் லுக் விட வைக்கிறது அந்த பலவீனமான என்ட்!

தனுஷ், வழக்கம் போல அனல் மின்சாரம்! “அமுல்பேபி…” என்று கஜோலை நக்கலடித்தபடியே அவர் பேசும் டயலாக்குக்கு தெறிக்கிறது தியேட்டர். அப்புறம் புல் பூஸ்ட் அடித்துவிட்டு, மனைவி அமலாபாலிடம் அடங்கி ஒடுங்கி அவஸ்தைப்படுகிற காட்சிகளெல்லாம் பேய் ஹிட் அடிக்கிறது ரசிகர்களிடம். ஒவ்வொருமுறையும் கஜோல் கை ஓங்கும்போதெல்லாம், அதைவிட பலமாக தன்னம்பிக்கை ஓங்கி நிற்பதெல்லாம் தனுஷுக்கேயுரிய ஹீரோயிசம். ஆக்ஷனும் காமெடியும்தான் இவருக்கு அசால்ட்டாக வருமாச்சே… படம் முழுக்க நிரப்பி நிரப்பி இன்ப தத்தளிப்புக்கு ஆளாக்குகிறார். ஆனால் சினிமா என்பது ஒன்மேன் ஷோ இல்லையே சார்…?

‘இந்தப்படத்தில் எனக்கு மேக்கப் வேணாம்’ என்று ஒப்புக் கொண்ட ஒரு காரணத்திற்காகவே அமலாபாலை ஆராதிக்கலாம். சட்டியில் போட்ட மிளகாய் போல பொறியும் இவருக்கு பிறந்த வீடே அடுத்த வீடு என்கிற விஷயம் செம ஜாலியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமலாவுக்காக குடும்பமே அஞ்சுவது சற்று ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது.

விவேக் எப்பேர்ப்பட்ட கலைஞன் என்பதை இந்தப்படத்தில் அழுத்தமாகவே நிரூபித்திருக்கிறார். மனைவி தங்க புஷ்பத்தின் முகத்தை இந்தப்படத்திலும் காட்டாமலேயே கதையை முடிச்சுட்டீங்களேய்யா…? பார்ட் 3 வருவதற்கு வாய்பில்லை என்பதால் தங்கபுஷ்பம் கதை இதோடு குளோஸ். சிஷ்யன் செல்முருகனின் மீது விவேக் டவுட் ஆகும்போதெல்லாம் தியேட்டர் கொலீர் ஆகிறது.

சமுத்திரக்கனி வழக்கம் போல அப்ளாஸ் ஆர்ட்டிஸ்ட்! வருகிற காட்சிகள் எல்லாமே இன்ட்ரஸ்ட்டிங்!

வில்லி நீலாம்பரியின் விரல் நகத்தை கூட டச் பண்ண முடியவில்லை கஜோலால். இருந்தாலும், காஸ்மோபாலிட்டன் கலாச்சாரத்தை கம்பீரமாக சுமக்கிறது அவரது பாடிலாங்குவேஜூம், மேனரிசங்களும்! நிறைய தமிழ் டயலாக் பேசி மூச்சு வாங்கியிருக்கும் போல… அளவாக பேச வைத்து, அமர்க்களமாக தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.

சென்னை வெள்ளத்தை மிக பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக ஒரு சபாஷ்.

தங்கை போல நினைக்கும் ஒருவரை அசால்ட்டாக இழுத்து கீழே தள்ளும் வில்லன் கோஷ்டியை தனுஷ் புரட்டித்தள்ளும் அந்த காட்சியில் கண்ணில் பொறி பறக்க விட்டிருக்கிறது அனல் அரசுவின் அபாய அடி! சூப்பர் கம்போசிஷன்.

ஷான் ரோல்டனின் இசையில் ஒரு பாடல் ஓ.கே. மற்றதெல்லாம் கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ? பின்னணி இசையில் முதல் பார்ட்டில் வந்த அனிருத்தின் இசையை வைத்தே ஒப்பேற்றியிருப்பது தந்திரமா, தள்ளுபடியா மேன்?

ஒன்று போல் இன்னொன்றை செய்யும்போது இருக்கிற அத்தனை அபாயங்களையும் அஞ்சாமல் அட்டர்ன் பண்ணி, ஆவரேஜுக்கும் மேல் மார்க் வாங்கியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

இருந்தாலும் ‘வேலையில்லாத பட்டதாரி’யாகணும்னா கூட இன்னும் நிறைய படிக்கணும்ங்க டைரக்டரே!

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments
  1. Kalpana says

    VIP 2 movie is pathetic. Punch Dialogue king Dhanush’s new construction company never kick starts and the movie ended. haha. Then in the climax, common people are having hard time in Chennai vellam for survival, but Kajol and Dhanush drinking alcohol (saarayam) in 5th floor of a office building and suddenly become friends, movie ends. Are you kidding Ms. Soundarya and ghost director aavin paalai alicha sullan???

  2. Mohanakrishnan Radhakrishnan says

    Stupid trash VIP 2 will be realesing in Hindi on Aug 18th. Poor distributors and theater owners.

  3. Ravi says

    VIP – 2 MASS & CLASS HIT MOVIE.
    ALL THE BEST SOUNDARYA RAJINIKANTH & DHAUSH AND VIP TEAM.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தரமணி விமர்சனம்

Close