பேட்டியிலிருந்து பிறந்த ஷார்ட் பிலிம்! அசந்து போன ஆர்யா, விஷால்!
‘கடைசியில எங்கிட்டேயிருந்து சுட்டதுதானா இது?’ என்று விஷால் கேட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனென்றால் விஷாலை பேட்டியெடுக்கப் போன ஒரு நிருபர், அவர் சொன்ன பதிலில் இருந்தே ஒரு கதையை உருவாக்கி, அதையே டீஸராக கொண்டு போய் அவருக்கு காட்டினால், பாவம்… அந்த மனுஷன்தான் என்னவார்? அப்படியே ஷாக்காகிவிட்டார் விஷால். இருந்தாலும், சாஃப்ட் நேச்சருக்குரிய நிருபர், இப்படி பற்றியெறியும் ஒரு ட்ரெய்லரோடு வந்து நின்றது அவரை ரொம்பவே ஆச்சர்யத்திற்குள்ளாகிவிட்டது.
விஷால் ஆர்யாவை அசத்திய நிருபர் க.ராஜீவ்காந்தி. ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் முத்திரை பதித்தவர். பதித்துக் கொண்டும் இருப்பவர். அவரது ஷார்ட் அண்டு ஷார்ப் படைப்புதான் ‘தக்கன பிழைக்கும்’
இதுகுறித்து என்ன சொல்கிறார் ராஜீவ்?
ஒருமுறை நான் விஷாலை பேட்டி எடுக்கும்போது, சினிமாவுக்குள்ளயும் அரசியல் வந்துடுச்சு போல? என கேட்டேன். அதற்கு அவர் “இது காடு மாதிரி. எல்லாமே சர்வைவலுக்காக தான். மானை நோக்கி புலி வந்தா மான் தான் தன்னை காத்துக்கணும். இப்படித்தான் சினிமா மாறிட்டு இருக்கு. அவங்கவங்க சக்திக்கு தகுந்தா மாதிரி ஓடறோம்.அது தப்புனு சொல்ல முடியாது” என்று பதில் சொன்னார். அவர் சொன்ன பதில் தான் இந்த படத்தின் ஒன் லைன். டீஸரே உற்று கவனித்தால் அந்த ஒன் லைன் என்ன என்பது விளங்கும். நான் உருவாக்கியுள்ள இந்த ஷார்ட் பிலிம் விரைவில் திரையுலகினர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரையிடப்படும்’’ என்றார்.
’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டிருக்கிறார்கள். டீஸரை வெளியிட்ட ஆர்யா ‘’ராஜீவ் காந்தி ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார் என்றவுடன் அவரது இயல்பு போலவே ஏதோ ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் டீஸர் மிகவும் சென்சிபிளாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டீஸராக அமைந்திருக்கிறது. படத்தை பார்ப்பதற்காக நானும் காத்திருக்கிறேன்’’ என்று பாராட்டினார்.
விஷால் ‘’குறும்படத்தோட டீஸரே நல்ல இண்ட்ரெஸ்டிங்கா கொடுத்துருக்கார் ராஜீவ். விரைவில் சினிமாவுக்கும் வந்து நல்ல நல்ல படங்களை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார்.
விஷால், ஆர்யா போன்ற இளம் நடிகர்கள் எல்லா கான்ட்ரவர்சிகளையும் கடந்து பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு பயணிப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்களையே அசத்துகிற அளவுக்கு பத்திரிகையாளர்கள் அடுத்த ஸ்டெப் வைப்பது அதைவிட ஆரோக்கியமான விஷயம்.
எல்லாருடைய ஆசியுடனும் ‘டக்கென பிழைப்பார்’ க.ராஜீவ்காந்தி! Teaser Link Here https://www.youtube.com/watch?v=VvRwXhTyC2c